Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Saturday, May 19, 2012

சிறு கவிதைகள் - நீர் சேமிக்க/வீடும் அலுவலகமும்/முதுமை

நீர் சேமிக்க...
தட தட வெனச் செல்லும்
தண்ணீர் லாரி.
'குடி நீர்' என்று எழுத்தில்
முன்புறம்,பின்புறம்,
பக்கவாட்டில்.
'மழை நீரைச் சேமிப்போம்'
டாங்கின் மேல்
கொட்டை எழுத்தில்.
'குடி நீர் உயிர் நீர்' என்று
ஒருபுறம் சிரிதாய்.
லாரியின் அடியில்...
நீர் ஒழுகி ஒழுகிப்
பயிரில்லாச் சாலையில்
சொட்டு நீர்ப்பாசனம்.
நீர் பற்றிய
லாரியின் போதனைகளை
லாரியே
கடைபிடித்து 'ஒழுகுகிறதா'?
ஏனோ சிரிப்பு வரவில்லை!.

வீடும் அலுவலகமும்
அலுவலகம்
போவதும்
வருவதும்
ஒரே சாலை.
ஒரே வாகனம்.
நேரம் வேறு.
போகும் திசை வேறு.
வேறுபடும் வெளிச்சம்.
மாறுபடும் வாகனக் கூட்டமும்,
பயண நேரமும்.
காலையில் வீடு
உடன் பயணிப்பதில்லை.
மாலையில் அலுவலகம்
அடம்பிடித்து
உடன் வருகிறது. 


முதுமை
எங்கள் பிறப்புக்குப் பிறர்
காத்திருந்தார்கள்.
எங்கள் இறப்புக்குக் 
நாங்கள் காத்திருக்கிறோம்.
சிலருக்கு வேறு சிலரும்.

கருவேப்பிலையாய்
வறுபட்டு வதங்கி
மணம் தந்து
ஒதுங்கிக் கிடக்கிறோம்.

குழந்தைகள் நடக்கையில் 
தாங்கிப் பிடித்தோம்.
எங்களில் பலரைக்
தாங்கிப் பிடிப்பது
கைத்தடி மட்டுமே!.

படிக்க வைத்தோம்.
பட்டங்கள் வாங்க வைத்தோம்.
எனினும் பிள்ளைகளால்
எங்கள் மனதில் ஓடும்
வரிகளைப் படிக்க 
முடிவதில்லை.

பழைய பாடல்,
பழங்காலப் பொருட்கள்
பிடிக்கும் உலகில்
பழைய மனிதரைப்
பிடிக்காதா? 

நடக்க முடியாத 
வயதில்
நடந்து வந்த 
பாதையை
நினைத்தபடி கிடக்கிறோம்.

நோய்களின் 
மாநாட்டுப் பந்தலாய்...
பொய்யாகிக் 
கொண்டிருக்கும் மெய்.

கேட்கும் திறன்
குறைந்தாலும்
பிறரின் 
நம்பிக்கையற்ற
பேச்சு கேட்காதென்ற 
நிம்மதி.

பார்வை குறைந்தாலும்
பொறாமை பரவிய
முகங்கள் தெரியாதென்ற
திருப்தி. 

எதிர்பார்ப்பில்லை.
ஏமாற்றமில்லை.
உணர்ந்து கழியும் 
நொடிப் பொழுதுகள். 

உடம்பைப் புரிந்து
கொண்டோம்.
மனதைப் புரிந்து
கொண்டோம்.
மனிதரைப் புரிந்து
கொண்டோம்.

வாழ்வைப் 
புரிந்து கொண்டோம். 
கடிகாரம் பார்க்காமல்
காலம் வரக் காத்திருக்கிறோம்.
வாழ்க்கை சுகமானது!










Thursday, April 19, 2012

சிறு கவிதைகள் -சுழற்சிகள்/மின்விசிறிகள்/தமிழ்/கூடா நட்பு/காப்பி/விட்ட குறை/பொய்க்காட்சி/ஆறறிவு

சுழற்சிகள்
மரங்களிலிருந்து
விதைகள் விழுந்து
விதைகளிலிருந்து
மரங்கள் வரும்.
கடல் நீர்
ஆவியாகி
மேகம் சேர்ந்து
மழையாய் மீண்டும்
கடல் சேரும்.
மனிதர் மறைந்து
மனிதர் விழுந்து
மனிதர் வளர்ந்து
மனிதர் மறைந்து...
இதுவும் சுழற்சி தான்.

மின்விசிறிகள்
ஒரே மாதிரியிருந்தாலும்,
மின்விசிறியின்
சத்தமும் காற்றும்
ஒரே போலிருப்பதில்லை.
திரையரங்கில்.
தேர்வெழுதும் நேரத்தில்.
அரசாங்க அலுவலகத்தில்.
கோயிலில்.
மருத்துவரின் அறையில்.
இந்தக் கவிதையெழுதும்
நேரத்திலும்.

தமிழ் அழியாது!
 உலகின்
கடைசித் தமிழன்
ஆங்கிலத்தில்
நினைக்கத்
தொடங்கும் வரை.

விட்ட குறை
முடிக்கப் படாமல்
இடையில் விடப்பட்ட
நாட்குறிப்பு சொன்னது.
"என்னை எழுதி
வீணானதை விட
எழுதாமல் வீணான
நேரம் அதிகம்."

கூடா நட்பு
இனத்தை
அழிப்பது தெரியாமல்
ட்ரான்ஸ்மிஷன் டவரில்
கூடிப் பேசிப்
பாடி மகிழும்
பறவைகள்.


காப்பி
பறவை கண்டு
விமானம்.
மீன் கண்டு
படகு.
எதிரொலி கேட்டு
வானொலி.
மனிதன் தேர்வில்
மட்டும் காப்பி
அடிக்கக் கூடாது.

பொய்க்காட்சி
 தூரத்துக் காக்கை
கரையும் போது
விலகிச் சேரும்
பின்னிறக்கைகள்
வாய் போல் தோன்றின.
வெளிச்சம் பொய்.
இருட்டில்
காக்கையும் பாலும்
நிறத்தால் 
ஒன்று தான்.
இருட்டும் பொய்.

 ஆறறிவு
ஏனெனத் தெரியாது
கூவும் குயில்.
ஏனெனத் தெரியாது
ஆடும் மயில்.
ஏனெனத் தெரியாது
கீச்சிடும் குருவி.
பாவம்.
பகுத்தறிவில்லாப்
பறவைகள்.
ஏனெனத் தெரியாது
வாழும்
பகுத்தறிவுள்ள
மனிதர்கள்.


Wednesday, April 18, 2012

சிறு கவிதைகள் - வெயில் காலம்/ஏதோ நினைவுகள்

வெயில் காலம்
உருக்கும்
உச்சி வெயில்.
அனல் காற்று.
சுடும் தரை
'ஐயோ தாங்கல!'
சொல்லாமல் சொல்லும்
முக பாவங்கள்.
உஷ்ணம்
உலகை வெறுக்க வைக்கும்
கொடும்பகல் முடிந்து
இரவானால்...
வீசும் இளங்குளிர் காற்று,
உலகை நேசிக்க வைக்கும்.
மோர் சாதம்.
மாங்கா ஊறுகாய்.
செம்பு நிறைய தண்ணீர்.
உடல் குளிர்ந்து
மனம் குளிரும்.
முரண்பாடே வாழ்க்கை.

ஏதோ நினைவுகள்
'''பிறர் நினைப்பதை
இனி பொருட்படுத்தாதே!
மகள் வரைவதைப்
பாராட்டியதில்லை இதுவரை.
பார்வையற்ற மாணவர்க்கு
வாசித்துக் காட்ட
ஒரு முறையேனும்
போயிருக்கலாம்.
முடிந்தால் நாளை!.
இன்னும் கொஞ்சம்
பேசியிருக்கலாம்
அம்மாவிடம்.
சிடுமூஞ்சி எனப்பயந்த
சித்தரஞ்சன்
கோபித்ததில்லை
இப்போது வரை.
பொறியியலில் சிவில்
பிடித்திருந்தும்
மெக்கானிகல்
எடுத்திருக்கக் கூடாது.
பிரியம் காட்டுபவரிடம்
கோபிக்கக்காதே!.'''

"மூணு நாள்
தாங்குமாம்.
பையன் கிளம்பிட்டான்.
கண்ணு அசையுது.
பெரியவர் ஏதோ 
நினைக்கிறார் போல!"

Sunday, February 26, 2012

சிறு கவிதைகள் - தொகுப்பு 25 ( படமா பாடமா?/பொம்மை மனிதன்)

 படமா பாடமா?

சூரியன் உதயம்.
மஞ்சள் வெயில்.
நாணும் வானம்.
மின்னும் மேகம்.
அதுவரை கண்டிரா அற்புதம். 
இயற்கையைச் செயற்கையாய்
பதிவு செய்ய
கேமரா எடுத்து
மாடியில் நின்றேன்.
வானத்தைக் கேமராவின்
கண்ணால் பார்த்துப்
பொத்தானை அழுத்தினேன்.
சார்ஜ் குறைவென்று
படமெடுக்க மறுத்தது கேமரா.
மஞ்சள் வெயில் அற்புதத்தை
வெறுங்கண்ணால் பார்த்து விட
வானம் நோக்கினேன்.
மாறி விட்டிருந்தது வானம்.
போய்  விட்டிருந்தது மஞ்சள் வெயில்.
காத்திருக்காது காலம்.
நிலையானதில்லை வெயில் நிறம்.
வாழ்வைப் புரிந்து
வாழத் தொடங்குமுன்
சார்ஜ் குறைந்துவிடும்
மனித வாழ்வில்
இது புதிதில்லை.

பொம்மை மனிதன்

பெருங்கடை.
வாசலில் பெரும்பொம்மை.
டாட்டா காட்டும் பொம்மை .
குழந்தைகளுக்குக் கை கொடுக்கும்.
பொம்மையின் கையை
வெட்கச்சிரிப்போடு
குழந்தை தொடும்.
சின்ன பயம் போய்
பெரிய சந்தோசம் பெரும்.

புகைப்படத்திற்குப் போஸ்
கொடுக்கும் பொம்மை.
சிரித்த முகம் பொம்மைக்கு.
மனது சிரிக்கும் பார்ப்பவர்க்கு.
வண்ண உடைப் பொம்மை.
உயரமான குண்டு பொம்மை.

நெடுநேரம் நின்று நடந்து ஆடி
மகிழ வைத்த பொம்மை.
இரவில் உருமாறும் மனிதனாய்.
பசியில் களைத்த
மெலிந்த மனிதன்.
சாதாரண உடை.
வேர்வைப் புழுக்கத்தால்
நச நசத்த உணவைத்
தேடும் உடல்.
உடல் களைத்தாலும்
உள்ளம் களைக்கவில்லை
பிறரை மகிழ வைத்த
காரணத்தால்.

Saturday, February 25, 2012

சிறு கவிதை - பேருந்துப்பாட்டு


இரவு நேரம்
கடற்கரையை ஒட்டிய சாலை
விரையும் பேருந்து
ஜன்னலோர இருக்கை
முகத்தை வருடும் காற்று
பூமியிலும் கொஞ்சம் சொர்க்கம்


பேருந்தில் ஒலித்த
இளையராஜா பாடல்கள்.
சென்னையை நோக்கி நான்.
என்னை நோக்கிப் பாடல்.


காதில் கிச்சு கிச்சு
மூட்டும்
இக்காலப் பாடல்கள்.
இதயத்திற்குச்
சாமரம் வீசும்
ராஜாவின் பாடல்கள்.


எஸ்.பி.பி, எஸ்.ஜானகியின்
காதல் பாட்டு
தாலாட்டானது.
ராஜாவின் கட்டளையால்!.


பாட்டுக் கேட்டுக் கொண்டு
தூங்கினேனா?
தூங்கியபடி
பாட்டுக் கேட்டேனா?
விடை தெரியாமல்
முழித்தேன்!


பேருந்தை விட்டு
இறங்கினேன்.
மனம் பாட்டோடு
பயணம் தொடர்ந்தது.

Sunday, February 12, 2012

சிறு கவிதை - எதைக் கவிதை பாட?

திறமையை பாதிக்கும்
வறுமையைப் பாடவா?
வறுமையை வளர்க்கும்
திறமையைப் பாடவா?

பழமையை விரட்டும்
புதுமையைப் பாடவா?
புதுமையை வெறுக்கும்
பழமையைப் பாடவா?

முதுமையை நினைக்காத
இளமையைப் பாடவா?
இளமையை மறந்த
முதுமையைப் பாடவா?

பொய்மையை உடைக்கும்
உண்மையைப் பாடவா?
உண்மையை ஒளிக்கும்
பொய்மையைப் பாடவா?

கண் மையைப் பூசும்
பெண்மையைப் பாடவா?
பெண்மையைக் கூட்டும்
கண் மையைப் பாடவா?

வன்மையைத் தூண்டும்
மென்மையைப் பாடவா?
மென்மையைச் சீண்டும்
வன்மையைப் பாடவா?

மடமையை ஒழிக்கும்
கடமையைப் பாடவா?
கடமையை மறக்கும்
மடமையைப் பாடவா?

Saturday, February 11, 2012

சிறு கவிதைகள் - தொகுப்பு 24

பயங்கள்
சிறு வயதில்
பயமுறுத்திய
பிள்ளை பிடிக்கும்
பூச்சாண்டிகள்
காணாமல் போயினர்
வயதானதும்.

சாப்பிடாவிட்டால்
கண்ணில் மிளகா
வைக்கும்
மீசைக்காரத் தாத்தாவும்
காற்றோடு போய்விட்டார்
காலப்போக்கில். 

அவர்களிடமான
பயத்தை 
நிரப்பி விடுகிறோம்
அவரவர்க்குப் பிடித்த
பயங்களால்.

சோம்பலைச் சாம்பலாக்கு!
நீல வானத்தைச்
சுவராக்கி
ஊக்குவிக்கும்
வாசகச் சுவரொட்டிகளை,
நட்சத்திரங்களை
மறைக்காமல் ஒட்டலாம்.
பூமியின் தரைப்பரப்பில்
ஓர் இம்மி விடாமல்
படித்தவுடன்
நரம்பு முறுக்கேறும்
வரிகளை எழுதலாம்.
உலகக் கடல்களின்
மேலெல்லாம்
பொங்கியெழ வைக்கும்
உரைகளை நுரைகளால்
மிதக்க விடலாம்.
இத்தனை செய்யினும்
இன்னும் எத்தனை
செய்யினும்
உன் சோம்பலைச்
சாம்பலாக்கும்
எரிபொருள்
உன்னிடம் மட்டுமே!

வாழ்க்கையை
வீணாய்க் கழித்தால்
வயதானதும்,
உடல் உட்கார்ந்திருந்தாலும் 
மனசாட்சி விரட்டும்.
அவமானம் துரத்தும்.

உன்னைப் பார்த்து
எறும்புகள் சோர்ந்து 
விடலாமா?

இழுத்தால் இழுபடும்
வில்லாய் இருக்காதே!
சீறிப்பாயும் அம்பாய் இரு!

Sunday, January 1, 2012

சிறு கவிதைகள் - என் இனிய 2011

என் இனிய 2011

கண்ணுக்குத் தெரியாமல்
வந்தாய்,
மெல்ல வளர்ந்தாய்,
கண்ணிமைக்கும்
நேரத்தில் விரைந்தாய்.

உன் காலத்தில்
உன் மதிப்பு
புரிந்தோர் சிலர்.
மனிதரின் மதிப்புக்கும்
அதே நிலை.

காலத்திற்கும்
காலம் உள்ளதா?.
உன் காலம்
கடந்து போனது.

பள்ளிப் பருவத்தில்
கூடப் படித்தவரைத்
பல் போன வயதில்
காண நேரலாம்.
மீண்டும் உன்னைக்
காண முடியாது.




தினம் நான்கென்று
படித்திருந்தாலும்
உன் காலத்தில்
திருக்குறளைக்
கரைத்தே குடித்திருக்கலாம்.

நீ வந்ததைக்
கொண்டாடினோம்.
நீ போனதற்கு
வருந்தவில்லை.

வந்த போது
பிறந்த குழந்தைகள்
போகும் போது
நடக்கத் தொடங்கியிருக்கும்.

வந்த போது
நடை தொடங்கியவர்கள்
தொடர்ந்து நடந்திருந்தால்
போகும் போது
எடை குறைந்திருப்பார்கள்.

வந்த போது
புகையை நிறுத்தியவர்கள்
போகும் போது
அதை விடுவதை விட்டிருப்பார்கள்.

வந்த போது
சேமிக்கத் தொடங்கியவர்கள்
போகும் போது
செலவு குறைத்திருப்பார்கள்.

வந்த போது
நம்பிக்கை கொண்டவர்கள்
போதும் போது
வெற்றி கொண்டிருப்பார்கள்.

உன் காலத்து
உயர்வான செயல்களை
வருங்காலத்தில்
தொடர்வோம்.
உன் காலத்து
பயனற்ற செயல்களை
வருங்காலத்தில்
துறப்போம்.





Sunday, December 25, 2011

சிறு கவிதைகள் - தொகுப்பு 23

முதியவர்

ஒரு காலையில்
பாதையில் ஒரு
கிழவரைக் கண்டேன்.
கண்டதும் சிலிர்த்தேன்.
எலும்புகளின் மேல்
சுருங்கிய தோலும்
சுருங்கிய தோலுக்குள்ளே
மறைந்திருந்த நரம்புகளும்...
ஒட்டிய கன்னம்
கருமை காணாமல்
போன கருவிழிகள்.

எடை சிறுத்து
நடை தளர்ந்து
உடை கனத்து...
நூறைத் தாண்டுமோ வயது?
அந்த வயதில் இருப்பதே அதிசயம்.
நடப்பது நடக்கிற காரியமில்லை.
நடமாடும் சரித்திரம்.
வாழ்க்கையை எப்படி
 கடந்திருப்பார் அவர்?
ஓடின எண்ணங்கள்.

படிக்காத அறிவாளியோ?
படித்த பாமரனோ?
காதலியை மணந்தவரோ?
மனைவியைக் காதலித்தவரோ?
நண்பர்கள் ஏணியாகினரோ?
நண்பருக்கு ஏணியானாரோ?
பகைவரால் பயன் பெற்றாரோ?
நண்பரால் ஏமாந்தவரோ?
நம்பிக்கையாய் வாழ்ந்தவரோ?
நம்பிக்கை பற்றிப் படித்தவரோ?

வெற்றிகளால் தோற்றவரோ?
தோல்விகளால் வென்றவரோ?
சந்திப்பவரைச் சிந்திக்கவைத்தவரோ?
சிந்திப்பவரைச் சந்தித்தவரோ?
எதிர்பார்ப்புகளால் ஏமாந்தவரோ?
ஏமாற்றங்களை எதிர்பார்த்தவரோ?
பிள்ளைகளை வளர்த்துப் 
பிள்ளைகளால் வளர்க்கப்பட்டவரோ?
வாழ்வைப் பிடித்து வாழ்ந்தாரோ?
இல்லை நடித்து வாழ்ந்தாரோ?

ஒரு கடிகாரக் கடை

பல கடிகாரங்கள்.
சதுரமாய்...
வட்டமாய்...
பெரிதாய்...
சிரிதாய்...
ஆனால் ஒரே நேரம்.


 சில கடிகாரங்கள்
ரோஜாவைப் போல்
முட்களோடு...

 உடல் பருமனால்
மெல்ல்ல்ல நகரும்
சின்ன முள்.
உயரமாய் 
பெரியமுள்
மெதுவாய் நடக்கும்.
ஓய்வேயில்லை,
ஆனாலும்
சுறுசுறுப்போடு நொடிமுள். 

சில கடிகாரங்கள்
தாமரை போல்
முள்ளில்லாமல்.
நேரத்தில் எண்கள் மாறும்.
எண்களில் நேரம் காட்டும்.

கடிகாரங்களின்
அழகை ரசிக்க
நேரம் போதாது.

வெளியேறும் சமயம்
நேரத்திற்கு வராத
கடையின் பணியாளரைக்
காரமாய்க் கடிந்தார்
கடிகாரக் கடை முதலாளி.


Saturday, December 10, 2011

சிறு கவிதைகள் - தொகுப்பு 22


பூமி வண்டி

பூமி ஒரு வண்டி.
சற்றே பெரிய...
சக்கரமில்லா வண்டி.
விதிகளைக் கடைபிடிப்பதால்
விபத்தின்றிச் செல்லும் வண்டி.
ஒரே பாதை.
கிளம்பிய இடத்திற்கே
திரும்ப வந்து
நிற்காது மீண்டும்
செல்லும் வண்டி.

வண்டி புகை விடாது.
பயணிகள் விடுவர்.
இலவசப் பயணம்.
பயணம் முடியும் போது  
டிக்கெட் வாங்கினால் போதும்.
ஓட்டுநர் மாயமாய்... 
முன்பதிவில்லை.
காத்திருப்போர் பட்டியலில்லை.
பழைய பயணிகளைப்
பற்றிய குறிப்புகளுண்டு.
எதிர்காலப் பயணிகள்
யாரெனத் தெரியாது.
சுமையின்றித் தொடங்கும்.
பயணத்தின் இடையில்
சேமித்த சுமைகளை
எடுத்துச் செல்ல
அனுமதி இல்லை.

மேல் பகுதியும்
கீழ்ப்பகுதியும் குளிர் வசதி.
பல கடல் நீச்சல்குளங்கள்.
கூரையில்லை.
மழையில் நனைந்தால்,
பயணிகளே பொறுப்பு.
ஒரு நாளில்
பாதி நேரம்
வெளிச்சம் வரும்.

பயணம் பயணிகளால் தொடங்கும்.
முன்னறிவிப்புமின்றி பயணம்
நிறுத்தப்படலாம்.
சில சமயம் பயணிகளாலும்
முடியும் பயணம்.
பயணத்தில்...
புத்தகம் படிக்கலாம்.
பாட்டுக் கேட்கலாம்.
நண்பர்களாகலாம்.
பேசிப்பழகலாம்.
வேடிக்கை பார்க்கலாம்.

ஜன்னலில்லை.
கரம்,சிரம்,புறம் நீட்டலாம்.
குழந்தைகளாய் விளையாடலாம்.
பாடம் படிக்கலாம்.
இளைஞர்களாகி மணம் புரியலாம்.
வயதாகி ஓய்வெடுக்கலாம்.
பயணிகள் உருமாறும் பயணமிது.
பயணம் சுகமானதா?
இல்லை அலுப்பானதா?
பயணிகளின் மனதில்.
வண்டியில் எங்கும் பயணிக்கலாம்.
பயணத்தில்...
கோபப்படலாம்.
வெறுப்போடிருக்கலாம்.
சுயநலமாயிருக்கலாம்.
உதவிகள் செய்யலாம்.
மகிழ்விக்கலாம்.

சில சமயம்
வண்டி அதிர்ந்து
பயணிகள் பாதிக்கப்படலாம்.
பயணத்தை வசதியாக்க
எடுத்த முயற்சிகள்
வண்டியை அதிகமாய்
அதிரவைக்கலாம்.
வண்டியைப் பாதுகாப்போம்.
இப்போதைய பயணிகளுக்காவும்.
எதிர்காலப் பயணிகளுக்காகவும்.
***
ஜெயமும் பயமும்!


செயற்கையாய்
பனிக்கட்டியை வீட்டுக்குள்
கொண்டு வந்ததை
ஜெயமென்றோம்.
இயற்கையாய்
பனிப்பிரதேசம்
வீட்டுக்குள் வருமென
பயமென்கிறோம்.


Saturday, December 3, 2011

சிறு கவிதைகள் - தொகுப்பு - 21

பின்னோக்கிய பயணம்

தெளிவற்ற பார்வை
வாயில் வழியும் ஜொள்ளு!  
தடுமாறும் நடை...
பார்ப்பவர்க்கு விழும் பயம்.
உளறல் மொழி
அவிழும் உடை
தன்னை அறியாமை...
அன்று குழந்தை.
இன்று 'குடி'மகன்.







பக்கத்தில் தூரமாய்...

பேருந்தில்
முன் பக்கத்து
இருக்கைக்காரரின் சட்டை
கண்ணைப் பறிக்கும்.
சாப்பாட்டுக் கடையில்
பக்கத்து மேஜையின்
சாப்பாடு எச்சில்
ஊற வைக்கும்.
சாலை நிறுத்தத்தில்
பக்கத்து வாகனம்
பிடித்த வண்ணத்தில்
பள பளவென மின்னும்.
பக்கத்தில் இருப்பவர்
மட்டும்
எப்போதும் நிம்மதியாய்
இருப்பதாய்த் தோன்றினால்...
அது உண்மையாகக்
கூட இருக்கும்.

துளித் துளியாய்...

வீட்டுக் குழாயில்
தண்ணீர் சொட்டியது.
வைரம் போன்ற துளிகள்...
கொஞ்சம் கொஞ்சமாய்
வளர்ந்து...பெரிதாகி
மின்னத் தொடங்கிச்
சற்று நேரத்தில்
அமைதியாய் விழும்.
கீழே குழியில் 
தேங்கிய தண்ணீர்
மத்தளமாகி
வசீகரிக்கும் ஓசை
'டுமுல்க்' என்று கிளம்பும்.
சில துளிகளில்
'ஒளியும் ஒலியும்'
ரசித்த நான்
'வயலும் வாழ்வும்'
நினைவுக்கு வரவே
குழாயை மூடினேன்.

Sunday, November 13, 2011

சிறு கவிதைகள் - தொகுப்பு 20


ஊனம்
உடலிலா ஊனம்?
பார்வை இல்லாததா?
செவித்திறன் இல்லாததா?
கை,கால் இல்லாததா?
பேச்சு இல்லாததா?
உடல் குறைகள் இருந்தும்
சாதித்தோர் பலர்..
கனவு கலைக்க
ஊனத்தால் முடியாது.
இலட்சியம் தகர்க்க 
ஊனத்தால் முடியாது.
நம்பிக்கை முறிக்க
ஊனத்தால் முடியாது.
உடலில் குறையின்றி
மனதில் குறையுள்ளோர்
தமக்குத் தாமே
தடையாவர்.
மனதில் இருப்பதே ஊனம்.

கவிதையும் காதலும்
காதலிக்காத கவிஞனில்லை.
கவிதையெழுதாக் காதலரில்லை.
காதலும் ஒரு கவிதை.
கவிதையும் ஒரு காதல்.
காதல் பாடும் கவிதை.
கவிதை பாடும் காதல்.
கவிதையில் இலக்கியம்.
இலக்கியத்தில் காதல்.
படித்துப் பார்க்கப்படும் கவிதை.
பார்த்துப் படிக்கப்படும் காதல்.

முதல் கவிதை
எப்போது வந்தது.
முதல் காதல்
வந்த போது...
மௌன மொழியில்
காற்றுக் காகிதத்தில்
உருவமற்ற எழுத்தில்
எழுதப் பட்டிருக்கும்.
கவிதையும் காதலும்
விக்கலைப் போல்...
நிறுத்தவே முடியாதவை.
மென்மைக் கலைகள்.
மனதின் படைப்புகள்.  
படைத்தவர் காலம் முடியினும்
படைப்பின் காலம் முடியாது.

எத்தனை பக்கம்
அத்தனை ரசிக்கலாம்.
வார இதழ்களில் கவிதை இருக்கும்.
ஈர இதழ்களில் காதல் இருக்கும்.
கவிதையின் நடை ரசனை.
காதலரின் நடையும் தான்.
கவிதையில் வரிகள்.
முகம் தெரிந்து முகவரி
தெரியாக் காதலுண்டு.
வார்த்தைகள் இரண்டிலும் ரசிக்கப்படும்.
உயிரும் மெய்யும் கலந்தவை.
புரியாக் கவிதையுண்டு.
புரியாக் காதலுண்டு.

மரபுக்கவிதையுண்டு.
புதுக்கவிதையுண்டு.
மரபுப்படி காதல் என்றும் புதிது.
பத்திரிக்கையில் கவிதைகள்.
வென்ற காதலும்
தோற்று மாண்ட காதலும்
வேறு வேறு பத்திரிக்கைகளில்.
காதலில் தோல்வி
தாடியில் முடியலாம்.
கவிதையில் வெற்றி
தாடியில் தொடங்கலாம்.
பொருளுக்காகக் கவிதை .
பொருள் துறக்கும்
உண்மைக் காதல்.

மழை
பெய்யாத போது
நனைய ஏங்குவோம்.
நனையும் போது
ஒதுங்க ஓடுவோம்.

அருகில் நனைந்தபடி ஓடுவர்.
குடையில் இடமிருக்கும்.
மனதில் இருக்காது.

பெரும்பாலும்...
வீட்டில் இல்லாமல்
வெளியில் இருக்கும் போது 
மழை அடிக்கும்.
குடை வீட்டில் இருக்கும்.




அநேகமாய்...
அதிகமாய் நனைவது
வானிலை அறிக்கை
பார்த்தவராயிருக்கும்.




பகலில் மழையின்
பிண்ணனி இசை.
இரவில் தவளைகளின்
ராக ஆலாபனை.
தவளையின் குரலைத்
தவளை ரசிக்கும் வரை
தவளைகள் இனம் வாழும்.

Friday, October 28, 2011

சிறு கவிதைகள் - தொகுப்பு 19


தீபாவளி

வெடிகுண்டுகள் ...
ராக்கெட்டுகள் ...
புல்லெட் வெடிகள் ...
மனிதர் எரிக்கும் வெடிகள்.
அழகான வண்ணமயமான
தீக்கங்குகளின் தூறல்கள்.
சிதறும் ஒளித் தூள்கள்
தொடரும் ஒலிகளின் நடனம்.
குழந்தைகள், பெரியவர்
மனதில் மத்தாப்பு.
உற்சாகக் கூச்சல்கள்.
இன்னும் வேண்டுமென்ற
எதிர்பார்ப்புகள்.

வெடிகுண்டுகள் ...
ராக்கெட்டுகள் ...
புல்லெட்டுகள் ...
மனிதரை எரிக்கும் வெடிகள்.
யுத்த பூமிகளில் வெடிக்கையில்...
அச்சுறுத்தும் தீப்பிழம்புகள்.
நெஞ்சை நிறுத்தும் பேரொலிகள்.
அந்தத் தீக்கட்டிகளும்,
பெருத்த ஓசைகளும்...
குழந்தைகள், பெரியவர்
மனதில் உயிர்பயம்..
மரண ஓலங்கள்.
இன்றோடு முடியட்டுமென்ற
ஏக்கங்கள்.

உலகில் போர்கள் ஒழியட்டும்
தீபாவளி பரவட்டும்.

Sunday, October 23, 2011

சிறு கவிதைகள் - தொகுப்பு 18


காலையில்
அதிகமாகிறதோ
புவி ஈர்ப்பு விசை? 
எழ முயற்சிக்கையில்
இழுக்கிறதே 
படுக்கை!



****
பின்னிரவில்
கண் விழித்தேன்.
குடியிருப்புக் காவலாளி
லத்தியால் தரை தட்டும்
'தட் தட்' ஓசை...
காவலாளி
தூங்காமலிருப்பதை
மட்டும் உணர்த்தவில்லை.
அதனைக் கேட்பவர்கள்
தூங்காமலிருப்பதையும் தான்.

****

எல்லைகள்
மீன்தொட்டி மீன்களுக்குக்
எல்லை கண்ணாடிகள்.
குளத்து மீன்களுக்கு
எல்லை குளக்கரை.
கடல் மீன்களுக்குக்
எல்லை கடற்கரை.
சமுத்திரத்து மீன்களுக்கு
எல்லை அதன் கரை.
எல்லையற்ற சுதந்திரம்
இல்லை இல்லை.
****

பைத்தியம்
பரட்டைத் தலை.
கரிய அழுக்கு உடல்.
கந்தலாடை.
கிழிந்த சாக்கில்
சேமித்த குப்பைகள்.
தெளிவில்லா நடை.
வெயில் மழை
பாராத தெருவோரப்
படுக்கை.
தீவிர சிந்தனை.
அவ்வப்போது புன்னகை
பிறர் பார்வையில்
நீ பைத்தியம்.
உன் பார்வையில்
பிறர்.


****




தினந்தோறும் மத்தாப்பு.
தீபாவளியன்று இல்லை.
வெல்டிங் 
வேலைச் சிறுவன்.