Saturday, September 24, 2011

சிறு கவிதைகள் - தொகுப்பு 15


ஒலியும் வலியும்
ஓடிக் கொண்டிருக்கிறது 
மாட்டு வண்டி!
சீராக வரும் குளம்பொலி!
சீராக வரும் சலங்கை மணிச் சத்தம்!
சீராக இல்லாமல் வண்டிச் சுமை 
மாட்டின் கழுத்தில் அதிகமாய்...

ஒரே ஒரு பிறவியிலே
உணவுகள் எத்தனையோ!
ஒரே வயிறு!
காட்சிகள் எத்தனையோ!
இரண்டே விழிகள் !
ஒலிகள் எத்தனையோ!
இரண்டே செவிகள்!
எண்ணங்கள் எத்தனையோ!
ஒரே மனம்!
ஆசைகள் எத்தனையோ!
ஒரே பிறவி! 

மழை
குளித்தது சென்னை !
அழுக்காயினர் சென்னை மக்கள்! 

Thursday, September 1, 2011

சம்பவங்கள் - பாம்பு படம்/ வாயில் என்ன இருக்கு/ட்ரைவிங் = செஸ்

பாம்பின் நிலை
வெளியே கிளம்பிக் கொண்டிருந்தோம்.  ஹோட்டலுக்கா அல்லது பூங்காவிற்கா என்று நினைவில்லை. நான் கேமராவை எடுத்து வைத்துக் கொள்ளச் சொன்னதும் கேமரா எடுத்து வைக்கப்பட்டது பையில். திடீரென்று கேமராவில் ஞாபக அட்டை இருக்கிறதா என்று சந்தேகம் வரவே, எடுத்துப் பார்த்தால்... கேமராவில் ஞாபக அட்டை இல்லை. உடனே வேறு ஒரு பொருளிடம் விருந்தாளியாய்ப் போயிருந்த ஞாபக அட்டையை எடுத்துக் கேமராவில் போட்டு விட்டுச் சொன்னேன், "நல்லவேளை, ஞாபகம் வந்தது. இல்லையேன்றால் நம்ம நெலம பாம்பு மாதிரி ஆகியிருக்கும்". "எப்படி?" என்ற  கேள்விக்கு நான் சொன்ன பதில்,"படம் எடுக்க முடியும். ஆனா ஸ்டோர் பண்ண முடியாது!"

ட்ரைவிங் = செஸ்



சென்னையில் வேலைக்குச்  சேர்ந்த புதிதில், அலுவலகத்திலிருந்து திரும்பும் போது நண்பர் ஒருவர் பைக்கில் லிஃப்ட் கொடுத்தார். அப்போதிருந்த ட்ராஃபிக் அப்போது எனக்குப் பயங்கரமாகத் தோன்றியது. நண்பர் வேகமாக வண்டியை ஓட்டினாரா இல்லை எனக்கு அப்படித் தெரிந்ததா என்று தெரியவில்லை. நான் நண்பரை சிறிது மெதுவாக ஓட்டச் சொல்லிவிட்டு,"ட்ரைவிங் என்பது ஒரே நேரத்தில் பல பேருடன் செஸ் விளையாடுவது மாதிரி. கவனமாக விளையாட வேண்டும்" என்றேன். நான் சொல்லி முடிக்கும் போது, எங்கள்(?) பைக்கின் முன் போன கார் பிரேக் போட, நண்பரும் சடன் பிரேக் போட்டார். "இந்த விளையாட்டுல ஆப்போனன்ட் மூவ் பண்ணாட்டாக் கூடப் பிரச்சன தான்!" என்று என் உரையை முடித்தேன். 



வாயில் என்ன இருக்கு?
ஒரு நாள் நான் கேட்ட கேள்வி ஒன்றுக்கு விஷால் தெளிவில்லாமல் புரியாத மாதிரி பதில் சொன்னான். "ஏண்டா கேட்டா ஒழுங்கா சொல்ல வேண்டியது தான, பெப் பெப்புங்கிற...வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க..?" என்று கேட்டேன். அவன் "ஆமாம்!" என்று சொன்
னான். அன்று விநாயகர் சதுர்த்தி.

My Mobile clicks on Vinayakar Chathurthi day morning