Saturday, May 19, 2012

சிறு கவிதைகள் - நீர் சேமிக்க/வீடும் அலுவலகமும்/முதுமை

நீர் சேமிக்க...
தட தட வெனச் செல்லும்
தண்ணீர் லாரி.
'குடி நீர்' என்று எழுத்தில்
முன்புறம்,பின்புறம்,
பக்கவாட்டில்.
'மழை நீரைச் சேமிப்போம்'
டாங்கின் மேல்
கொட்டை எழுத்தில்.
'குடி நீர் உயிர் நீர்' என்று
ஒருபுறம் சிரிதாய்.
லாரியின் அடியில்...
நீர் ஒழுகி ஒழுகிப்
பயிரில்லாச் சாலையில்
சொட்டு நீர்ப்பாசனம்.
நீர் பற்றிய
லாரியின் போதனைகளை
லாரியே
கடைபிடித்து 'ஒழுகுகிறதா'?
ஏனோ சிரிப்பு வரவில்லை!.

வீடும் அலுவலகமும்
அலுவலகம்
போவதும்
வருவதும்
ஒரே சாலை.
ஒரே வாகனம்.
நேரம் வேறு.
போகும் திசை வேறு.
வேறுபடும் வெளிச்சம்.
மாறுபடும் வாகனக் கூட்டமும்,
பயண நேரமும்.
காலையில் வீடு
உடன் பயணிப்பதில்லை.
மாலையில் அலுவலகம்
அடம்பிடித்து
உடன் வருகிறது. 


முதுமை
எங்கள் பிறப்புக்குப் பிறர்
காத்திருந்தார்கள்.
எங்கள் இறப்புக்குக் 
நாங்கள் காத்திருக்கிறோம்.
சிலருக்கு வேறு சிலரும்.

கருவேப்பிலையாய்
வறுபட்டு வதங்கி
மணம் தந்து
ஒதுங்கிக் கிடக்கிறோம்.

குழந்தைகள் நடக்கையில் 
தாங்கிப் பிடித்தோம்.
எங்களில் பலரைக்
தாங்கிப் பிடிப்பது
கைத்தடி மட்டுமே!.

படிக்க வைத்தோம்.
பட்டங்கள் வாங்க வைத்தோம்.
எனினும் பிள்ளைகளால்
எங்கள் மனதில் ஓடும்
வரிகளைப் படிக்க 
முடிவதில்லை.

பழைய பாடல்,
பழங்காலப் பொருட்கள்
பிடிக்கும் உலகில்
பழைய மனிதரைப்
பிடிக்காதா? 

நடக்க முடியாத 
வயதில்
நடந்து வந்த 
பாதையை
நினைத்தபடி கிடக்கிறோம்.

நோய்களின் 
மாநாட்டுப் பந்தலாய்...
பொய்யாகிக் 
கொண்டிருக்கும் மெய்.

கேட்கும் திறன்
குறைந்தாலும்
பிறரின் 
நம்பிக்கையற்ற
பேச்சு கேட்காதென்ற 
நிம்மதி.

பார்வை குறைந்தாலும்
பொறாமை பரவிய
முகங்கள் தெரியாதென்ற
திருப்தி. 

எதிர்பார்ப்பில்லை.
ஏமாற்றமில்லை.
உணர்ந்து கழியும் 
நொடிப் பொழுதுகள். 

உடம்பைப் புரிந்து
கொண்டோம்.
மனதைப் புரிந்து
கொண்டோம்.
மனிதரைப் புரிந்து
கொண்டோம்.

வாழ்வைப் 
புரிந்து கொண்டோம். 
கடிகாரம் பார்க்காமல்
காலம் வரக் காத்திருக்கிறோம்.
வாழ்க்கை சுகமானது!










2 comments:

  1. the first two touches your thought,the third one touches your heart.

    ReplyDelete
    Replies
    1. Thanks for your comments,Indira madam!

      Delete