Friday, October 28, 2011

சிறு கவிதைகள் - தொகுப்பு 19


தீபாவளி

வெடிகுண்டுகள் ...
ராக்கெட்டுகள் ...
புல்லெட் வெடிகள் ...
மனிதர் எரிக்கும் வெடிகள்.
அழகான வண்ணமயமான
தீக்கங்குகளின் தூறல்கள்.
சிதறும் ஒளித் தூள்கள்
தொடரும் ஒலிகளின் நடனம்.
குழந்தைகள், பெரியவர்
மனதில் மத்தாப்பு.
உற்சாகக் கூச்சல்கள்.
இன்னும் வேண்டுமென்ற
எதிர்பார்ப்புகள்.

வெடிகுண்டுகள் ...
ராக்கெட்டுகள் ...
புல்லெட்டுகள் ...
மனிதரை எரிக்கும் வெடிகள்.
யுத்த பூமிகளில் வெடிக்கையில்...
அச்சுறுத்தும் தீப்பிழம்புகள்.
நெஞ்சை நிறுத்தும் பேரொலிகள்.
அந்தத் தீக்கட்டிகளும்,
பெருத்த ஓசைகளும்...
குழந்தைகள், பெரியவர்
மனதில் உயிர்பயம்..
மரண ஓலங்கள்.
இன்றோடு முடியட்டுமென்ற
ஏக்கங்கள்.

உலகில் போர்கள் ஒழியட்டும்
தீபாவளி பரவட்டும்.

Thursday, October 27, 2011

Mobile clicks - October 2011

Texas Fiesta restaurant, Thousand Lights, Chennai


Ente Keralam restaurant, Anna nagar, Chennai


The Farm restaurant, Navalur, near Kelambakkam, Chennai 

At home 


Artifical furits/vegetables, Wood pecker , Furniture mart, Aminjikkarai, Chennai
Recent Art works made by me

Sunday, October 23, 2011

சிறு கவிதைகள் - தொகுப்பு 18


காலையில்
அதிகமாகிறதோ
புவி ஈர்ப்பு விசை? 
எழ முயற்சிக்கையில்
இழுக்கிறதே 
படுக்கை!****
பின்னிரவில்
கண் விழித்தேன்.
குடியிருப்புக் காவலாளி
லத்தியால் தரை தட்டும்
'தட் தட்' ஓசை...
காவலாளி
தூங்காமலிருப்பதை
மட்டும் உணர்த்தவில்லை.
அதனைக் கேட்பவர்கள்
தூங்காமலிருப்பதையும் தான்.

****

எல்லைகள்
மீன்தொட்டி மீன்களுக்குக்
எல்லை கண்ணாடிகள்.
குளத்து மீன்களுக்கு
எல்லை குளக்கரை.
கடல் மீன்களுக்குக்
எல்லை கடற்கரை.
சமுத்திரத்து மீன்களுக்கு
எல்லை அதன் கரை.
எல்லையற்ற சுதந்திரம்
இல்லை இல்லை.
****

பைத்தியம்
பரட்டைத் தலை.
கரிய அழுக்கு உடல்.
கந்தலாடை.
கிழிந்த சாக்கில்
சேமித்த குப்பைகள்.
தெளிவில்லா நடை.
வெயில் மழை
பாராத தெருவோரப்
படுக்கை.
தீவிர சிந்தனை.
அவ்வப்போது புன்னகை
பிறர் பார்வையில்
நீ பைத்தியம்.
உன் பார்வையில்
பிறர்.


****
தினந்தோறும் மத்தாப்பு.
தீபாவளியன்று இல்லை.
வெல்டிங் 
வேலைச் சிறுவன்.

Sunday, October 9, 2011

சிறு கவிதைகள் - தொகுப்பு 17


பிலிம் காட்டுதல்! 
பள்ளிப் பருவத்துச்
சொத்துக்கள் பலவற்றில்
கட்டுக் கட்டான
பிலிம்களும் அடங்கும்.
கருப்பு வெள்ளை பிலிம்கள்.
கலர் பிலிம்கள்.
பளபளப்பாய்...
வழுவழுப்பாய்...

பிலிமைக் கொடுத்தும்
கொளல் வேண்டும் நட்பு.
பிலிம்களால் சண்டைகள்.    
பிலிம்களால் சமரசங்கள்.
கமல் கொடுத்து
ரஜினி வாங்கும்
பிலிம் பரிமாற்றங்கள்.
விளையாட்டுகளில் தோற்றவன்
தரும் பணயமாய் பிலிம்கள்.
காசுக்கு வாங்கும் பிலிமில்
எழுத்து வந்தால் ஏமாற்றம்.

கண்ணாடி திருப்பிவிட்ட
சூரியஒளி வீட்டுச்சுவற்றில்.
குறுக்கே லென்ஸ்.
பிலிமின் பிம்பம்  

சுவற்றில் பெரிதாய்.
அந்தக்கால ஹோம் தியேட்டர்!.
எடிசனை மிஞ்சிய சந்தோசம்.

காலப் போக்கில்
காணாமல் போனவை...
பிலிம்களும் சிறுவனும்.

வாழ்க்கை  விளையாட்டா?

வாழ்க்கை பரமபதமில்லை!

முழுக்க அதிர்ஷ்டத்தை

மட்டும் நம்பியிருக்க.

வாழ்க்கை சதுரங்கமில்லை!.

முழுக்க அறிவை

மட்டும் நம்பியிருக்க.

வாழ்க்கை சீட்டு விளையாட்டு!

கலைத்துப் பிரித்ததில்

கிடைத்த சீட்டுக்களைக்

கையாள்வதில் இருக்கிறது

வெற்றியும் தோல்வியும்.


சரஸ்வதி பூஜை

புத்தகங்களிடமிருந்து

 விடுதலை.

 கொண்டாடும்

 பிள்ளைகள்.


மின்வெட்டு
மின்சாரம்

தடைப்பட்டால் 

முடங்கிப்

போகிறோம்.

நாமும்

எந்திரன் தான்.


கல்வெட்டில் பொறியுங்கள்
வரும் போது
நேரம் காட்டும்.
செலவைக் குறைக்கும்.
இயற்கைக் காற்றை
சுவாசிக்க வைக்கும்.
மனதில் தத்துவச்
சிந்தனைகள் தோன்றவைக்கும்.
நாம் யாரென
உணர வைக்கும்.
வீட்டில் ஒருவரோடு
ஒருவரைப் பேசவைக்கும்.
பெரியவர்களைக் குழந்தைகளுடன்
விளையாட வைக்கும்.
புத்தகங்கள் படிக்க வைக்கும்.
கவிதையெழுத வைக்கும்.
போகும் போது
மகிழ்ச்சியில் குதிக்கவைக்கும்.

இத்தனை சிறப்பிருந்தும்
நீ வெறுக்கப்படுவதேன் மின்வெட்டே!

Saturday, October 1, 2011

சிறு கவிதைகள் - தொகுப்பு 16

அதன் பின் அழியலாம் உலகம்
மெலிந்த உடல் வலிக்க,
ரிக்‌ஷா இழுத்து வாழ்வை இழுக்கும் 
முனுசாமி மகன்
படிப்பில் நடிப்பின்றி
வறுமை புரிந்து 
பாடமும் புரிந்து
வாழ்வைப் படிக்கிறான்.
அவனோர் நாள்,
முனுசாமியைப் பக்கத்தில்
வைத்துப் படகுக்கார் ஓட்டட்டும்... 
அதன் பின் அழியலாம் உலகம்.

தெருத்தெருவாய் அலைந்து
இடி மழை பாராது
இடியாப்பம் கூவி 
விற்கும் குமரப்பன்...
உடலில் அலுப்புண்டு
மனதில் இல்லை.
பெடல் மிதித்துப்
பின்னங்கால் வலி,
ஓட்டல் தொடங்கும் 
லட்சிய வெறியில்
மறத்துப் போனது!
அவனோர் நாள்,
ஓட்டல் தொடங்கட்டும். 
அதன் பின் அழியலாம் உலகம். 

கல்யாணக் கனவோடு
காத்திருக்கும் கல்யாணி
சுயம்வரத்திற்கு வந்த
ராஜகுமாரர்
புற அழகு மட்டும் 
தெரிந்த குருடராய்ப்
புறமுதுகு காட்டிப் 
போயினர்.
அக அழகு தெரியும்
காளையை அவள்
மணம் புரியட்டும்...
அதன் பின் அழியலாம் உலகம். 


மனிதர்கள் கனவுகள்
சுமக்கும் பெட்டிகள்.
கனவுகள் நிறைந்த 
வாழ்வு உலகமெங்கும்...
புறை தீர்ந்த கனவுகள் மெய்ப்படட்டும்.
அதன் பின் அழியலாம் உலகம்.