Saturday, July 30, 2011

சிறு கவிதைகள் - தொகுப்பு 10நடிப்பு

சொந்த வசனம்!
ஒளிப்பதிவில்லை!
அரங்கமில்லை!
பிண்ணனி இசையில்லை!
ரீடேக்குகள் இல்லை!
'ஸ்டார்ட் கட் ஆக்‌ஷன்' இல்லை!
வாழ்க்கையை
வாழ்வதாய் நடிக்க!

வாழ்க்கை

பிறப்பு . . .
ஒரு சுமை!
ஒரு வலி!
ஒரு அழுகை!
இறப்பு . . .
சில வலிகள்!
சில அழுகைகள்!
சில சுமைகள்! குற்ற அறிவியல்

இனி சங்கிலி இழுத்தால்
ரயில் மட்டுமல்ல...
பைக்குகளும் 
நிற்க வேண்டும்!

Saturday, July 23, 2011

சம்பவங்கள் - சென்னை வீடு/டைட்டனா/அங்கிள்

 சென்னை வீடு
ஒரு முறை என் மாணவ நண்பன் ஒருவனைச் சொந்த ஊருக்குக் கூட்டிச் சென்றிருந்தேன். அவன் சென்னையைச் சேர்ந்தவன். என்னுடைய பாட்டி அவனிடம் 'நீ எந்த ஊரப்பா?' என்று கேட்க, அவன், 'நான் மெட்ராஸ் பாட்டி' என்றான். 'நானும் மெட்ராஸ்ல இருந்திருக்கேம்பா!' என்று பாட்டி சொன்னவுடன், நண்பன் 'மெட்ராஸ்ல வீடு எங்க பாட்டி?' என்று ஆர்வமாகக் கேட்டான். வந்த பதில் என்னை முகத்தை வேறு பக்கம் திருப்ப வைத்தது. ' ரோட்ட ஒட்டி வீடுப்பா!'. அங்கிருந்து அடுத்த அறைக்கு வந்தவுடன் அவன் சொன்னான் 'உங்களுக்குக் கடி ஜோக் எங்க இருந்து வந்ததுன்னு இப்ப எனக்குத் தெரிஞ்சிருச்சு!' . பொதுவாக என் கடிகளைக் கூட 'ரசிக்கும்' அவன் அன்று ஆடிப்போய் விட்டான்.

டைட்டனா

 கல்லூரிப் படிப்பு முடித்து வேலை தேடும் காலம். திண்டுக்கல் டு தேனி செல்லும் பேருந்தில் நான். என் அண்ணனின் நண்பர் அந்தப் பேருந்தில் ஏறினார். என்னைப் பார்த்ததும் என் அருகில் உட்கார்ந்தார். அவரை முந்தின நாள் தான் என் அண்ணன் அறிமுகம் செய்திருந்தார். வண்டி கிளம்பிப் போய்க்கொண்டிருந்தது. அண்ணனின் நண்பரைக் கடி போட முயற்சித்து, பேருந்தின் சத்தம் அதிகமாக இருந்ததால் முயற்சி வீணாகக் கூடாதென்று அமைதியாகி விட்டேன். என் இரண்டு கைகளும் முன் சீட்டின் பார் கம்பி மேல் இருந்தன. நாம தான் பஸ்ஸுக்குள்ளயே பைக் ஓட்டுவோமுள்ள! அண்ணனின் நண்பர் திடீரென்று என் இடது கையைக் காண்பித்து ஏதோ கேட்டார். எனக்குச் செம கோபமாக வந்தது. அண்ணன் ஃப்ரெண்டு  கேனத்தனமாக் கேக்கிறாரா,இல்ல லொல்லு பண்றாரா?'. முறைத்துக் கொண்டு "என்ன கேட்டீங்க" என்றேன் விஜயகாந்த் பாணியில்.
அவர் கொஞ்சம் நெளிந்தபடி "உங்க வாட்சக் காமிச்சு 'டைட்டனா'னு கேட்டேன் என்றார். 'ஆமா' என்றபடி கோபம் குறையாமல் அவர் மூக்குக்கு அருகில் என் வாட்சைக் கொண்டு போனேன். அடுத்து அவர் கேட்டார், "நான் கேட்டது உங்க காதில எப்படி விழுந்தது. என்ன ஒரு பைத்தியக்காரனப் பாக்கற மாதிரி பாத்தீங்களே?". வெளிப்படையான கேள்வி. தெளிவான கேள்வி. நான் சொன்னேன், "என் காதில 'ரைட் ஹேண்டா'னு விழுந்தது". 

அங்கிள்

முன்பு ஒரு முறை உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவரின் மகனுக்கு அப்போது இரண்டு வயதிருக்கும். கொஞ்சம் முரட்டு சுபாவம் கொண்ட பையன். அவன் பிறந்து பதினைந்தாவது நாள் நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ஒரு காலை அழுத்தி தொண்ணூறு டிகிரி கோணம் திரும்பியவன். அவனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று "போடா" என்று சொல்லி விட்டான். (சொன்னது பிறந்து பதினைந்தாம் நாளில் இல்லை இரண்டு வயதில்!) என்னையே நான் திட்டிவிட்டால் கோபத்தில் என்னையே அடித்து விடுவேன். பயப்பட வேண்டாம். அது மாதிரி நடந்ததில்லை. ஒரு பேச்சுக்குச் சொன்னேன். கோபக்கார மாமாவைப் பக்கத்தில் நின்று "போடா" சொல்லக்கூடாதென்று அன்று அவன் கற்றுக் கொண்டான். கனல் கண்ணன் ஜாகுவார் தங்கம் பாணியில் சில பல அடிகள் அவனுக்குக் கிடைத்தன. அவன் பெருங்கூச்சல் போட்டு அழுதான். அந்தப் பயலுக்கு அழுகையும் வீரமான முரட்டு அழுகை தான்.  மனசு கேட்காமல் அவனைப் பக்கத்தில் இழுத்து "மாமாவத் திட்டலாமா.இனிமே இந்த மாதிரித் திட்டக்கூடாது!" என்று எடுத்துச் சொன்னேன். அவன் அழுகை குறைந்து, "அங்கிள்" என்று ஏதோ திட்டும் குரலில் முரட்டுத்தனமாகச் சொன்னான். பரவாயில்லையே அடிச்ச அடியில ஆங்கிலம் வருதே என்று நினைத்தேன். அவன் அங்கிள் என்று சொன்னது அவன் அப்பாவிற்கு ரொம்ப சந்தோசம். அது என் வருத்தமாகப் போவது எனக்குத் தெரியாமல் நானும் புலகாங்கிதமடைந்து(சந்தோசம் தான்.காங்கிரஸில் சேருவதில்லை) சிரித்தபடி இருந்தேன். அவன் அப்பா அவனிடம் கேட்டார், "அங்கிள்னா என்னடா கார்த்தி?". முரட்டுப் சிறுவன் சொன்ன பதில் "நாயி!". என் கோபம் 'கோபாம்' ஆகி அவன் அப்பா மேல் விழுந்தது. "ஏங்க அவன் தான் அங்கிள்னு சொன்னான்னு சந்தோசமா போயிருப்பேன்ல. அத எதுக்குங்க அர்த்தமெல்லாம் கேட்டீங்க"

Friday, July 22, 2011

சிறு கவிதைகள் - தொகுப்பு 9

புற முதுகு காட்டி ஓடப் 
பயிற்சியெடுக்கும்
நேரத்தில் கொஞ்சம்
போர் புரியப் பழகலாம்!


பேன் பார்க்கும் 
பாட்டியிடம்
கொல்லாமை பற்றிய 
பிரசங்கம் செல்லாது!


நதியில் மிதந்து செல்லும் இலை!
இலை மீதொரு எறும்பு!
எறும்பின் துடிதுடிப்பு அறியாது
நதி போகும் போக்கில் இலை!
நீ இலையா இல்லை எறும்பா?
உன் முடிவில்!
பிரபஞ்சத்தில் எறும்புக்கும்
இலைக்கும் வேறுபாடில்லை
அதன் முடிவில்!

Wednesday, July 13, 2011

சிறு கவிதைகள் - தொகுப்பு 8

அழகும் அசிங்கமும்
அழகு  படுத்தப் 
பசைகளை அப்பி
முகத்தை
அசிங்கமாக்கும்
அழகு நிலையங்கள்கவிதை
அதிகமாய் எழுதப்படும்...
குறைவாய் பிரசுரிக்கப்படும்...
மிகக் குறைவாய் படிக்கப்படும்...
பல புரியப்படும்...
சில ரசிக்கப்படும்.திருஷ்டி
புதிதாய் மாட்டப்பட்டது திருஷ்டிப்படம்.
பார்த்தவர் சொன்னார்...
'படம் நல்லாயிருக்கே!
எப்படித்தான் கிடைக்குதோ
உங்களுக்குன்னு ?'

Sunday, July 10, 2011

VIBES 360 degrees @ NIFT Chennai - ஒரு சிறப்புப் பார்வை

சில நாட்கள் முன்பு கல்லூரி மாணவ நண்பன் விவேகானந்தனிடமிருந்து வந்த ஒரு மின்னஞ்சல் என்னை ஈர்த்தது. அது சென்னை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியில் நடக்கப் போகும் நிகழ்ச்சி ஒன்றுக்கான பாஸ் பற்றியது. நிகழ்ச்சியின் ஸ்பான்சர் CADD-ன் சகோதரி நிறுவனமான Dream zones. அதில் விவேகானந்தன் Country Head. அவரை  தொலைக்காட்சியில் (சன் நியூஸ், தூர்தர்சன்) வேலை வாய்ப்பு பற்றிய நிகழ்ச்சியில் சில முறை பார்த்த போது என் மகன்களிடம் பெருமையோடு 'இவர் என் ஸ்டூடண்ட்' என்று சொல்லியிருக்கிறேன்.

அந்த மின்னஞ்சலைப் படித்த போது நான் அந்த நிகழ்ச்சிக்குப் போவேனென்று நினைக்கவில்லை. பிரசவத்திற்கு இலவசம் என்று ஆட்டோவில் போட்டிருப்பதைப் பார்த்து இலவசமாயிருந்தும் பயன்படுத்த முடியவில்லையே என்று ஆண்கள் நினைக்கும் நாடு. ஓசி பாஸை விடுவோமா?
 வடநாட்டிலிருந்து வந்திருந்த ஒரு நண்பருக்கு உதவ முயற்சி செய்து நானும் கலந்து கொள்ளும்படி ஆயிற்று. அந்த நிகழ்ச்சிக்கு நான் எனது முகப்புத்தகப் படங்களில் இருக்கும் ஜிப்பா,கூலிங்கிளாஸ் சகிதம் சென்றேன்.
நண்பர்களுடன் உள்ளே நுழைந்த போது அரங்கம் அடுத்த நிகழ்ச்சிக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. கூட்டம் நிரம்பி வழிந்தது!(கூட்டமென்ன திரவமா?). ஸ்டேஜ் வியூ நன்றாக இருந்தது.ஸ்டேஜை வலது பக்கம் திரும்பியபடியே பார்ப்பது போலிருந்தது எனது இருக்கையின் அமைப்பு. ஒரு ஸ்டேஜில் கழுத்து வலிக்க ஆரம்பித்தது. வேறொரு பரேடில் சிலர் ஒரே பக்கம் பார்த்து சல்யூட் அடித்தபடி நிற்பர்.உட்கார்ந்தபடி அதே திரும்பல் நிலை எனக்கு ஃபேஷன் பரேடில்.  "பார்த்தல் யாருக்கும் எளியதாம் அரியதாம் பார்த்த வண்ணம் செயல்".
PRESS என்று சில இருக்கைகளில் போட்டிருந்தும், நல்லவேளை யாரும் அவைகளைப் பிரஸ் பண்ணவில்லை.

   ஒரு இளைஞர் பெரிய உருவத்தில், அழகுக் குடுமியோடு ஒரு கோல்ஃப் பை மாதிரி ஒன்றைக் கொண்டு வந்தார். அந்தப் பையிலிருந்து இன்னொரு பையை எடுத்தார். அதிலிருந்து இன்னொரு பையை எடுத்தார். அதிலிருந்து ஒரு அட்டகாசமான கேமராவை எடுத்தார்.விலை உயர்ந்ததென்று சொல்லாமல் தெரிந்தது.என் பிரமிப்பு, அதன் விலையைப் பற்றியெல்லாம் சட்டை செய்யாமல் அவர் அதன் லென்ஸை சட்டையின் கீழ் பகுதியால் கவிதை நயத்தோடு துடைத்த போது  நொறுங்கிவிட்டது.

பீட் குருஸ் என்ற பங்களூரு இசைக்குழு அரங்கை அதிர வைத்தார்கள்.அவர்களின் 'ஹை வே டு மடகாஸ்கர்' அமர்க்களம். பதினொரு பேர் கொண்ட குழு. ஒரு பேஸ் கிடார், இரண்டு டிட்ஜரிடூ (Didgeridoo - ஆஸ்திரேலியப் பழங்குடி வாத்தியம்-See pic below), ஒரு ஷேக்கர், மற்றவை ஜம்பே தாள வாத்தியம்.

Beat gurus video from YT below.
http://www.youtube.com/watch?v=ZBS9BYAVJNw&feature=related
உடன் வந்த நண்பர் சொன்னார்,"இவங்க கிட்ட எவனாவது மாட்டினா தொலஞ்சான்"
  மேடையின் பக்க வாட்டிலிருந்து திடீரென்று பக்கா நேச்சுரல் லைட்டிங் போல் பளிச் ஒளி வரவே டக்கென்று திருப்பிப்பார்த்தேன்.உடனே ஏமாந்தேன். அது சூரிய ஒளி தான். யாரோ கதவு திறக்க, என்ன நடக்கிறது (யார் நடக்கிறார்கள்?) என்ற ஆர்வத்துடன் சூரியன் எட்டிப்பார்த்தான்.மேடையை எடுக்காமல் கதவுப்புறம் எடுப்பதை நம் ரசனை புரியாமல் யாரோ அலட்சியமாகப் பார்த்தார்கள். எனக்குப் பிடித்த லைட்டிங் படம் கீழே! ஒரு புதிர் கண்ணாடி நண்பர் எந்தத் திசையில் பார்க்கிறார்? விடை தெரிய படத்தின் மீது சொடுக்குங்கள்.


என் கேமரா மூன்று படம் எடுத்து விட்டு சார்ஜில்லாமல் படுத்துவிட்டது.உடன் வந்த நண்பர்கள் தங்கள் நோகியா, சாம்சங் கேலக்சி டேப் ஆகியவற்றில் வரலாற்றைப்(?!) பதிவு செய்தார்கள்.

ரேடியோ ஒன் தொகுப்பாளினிகள் 2 பேர் மேடையேறி சிலரை மேடைக்கு வரவைத்து அவர்களைப் பூனை நடை நடக்கவிட்டது செம கலாட்டா.அதில் மிருதுளாவின் குரல் பரிச்சயமாயிருந்தது. நடன நிகழ்ச்சிகளில் ஆண்களே ஆட்ட நாயகர்கள். ஒரு பெண் கூட ஆடவில்லை. ஆண் உடைகள் குறைவாக அரங்கேற்றப் பட்டதால், பெண்களே அதிகமாக மேடையில் நடந்தார்கள்.அவர்களின் நடையே நடனமாக இருந்ததால் தனியாக நடனமெதற்கு என்று நினைத்திருக்கலாம்.உலக டிசைனர்கள் தினத்தை ஒட்டி இந்த நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.பல டிசைனர்கள் தோடுடைய செவியர்களாயிருந்தனர்.

அரங்கத்தில் இளமைத் துடிப்பும், நாகரிகமான உற்சாகமும் நிகழ்ச்சித் தலைப்புக்கேற்ப (வைப்ஸ்-வைப்ரஷன்ஸ்) இருந்தது. ஆடைகள் கடல், இசை, மிருகம், பைரேட்ஸ்,பஞ்ச பூதங்கள் என்று 36 வகை தீம்களில் வடிவமைக்கப்பட்டிருந்தன. ஸ்டோரி போர்ட், மூட் போர்ட் என்று அவைகளை விளக்கிய விதம் அருமை.

எல்லோரின் வடிவமைப்பும் பிடித்திருந்தாலும், கோபி என்றவரின் வடிவமைப்பு என்னை மிகக்கவர்ந்தது.பெண் பூனை நடையாளர்கள் யாரும் கீழே விழவில்லை.இத்தனைக்கும் அவர்களின் ஹீல்ஸ் நெட்டமாக நிறுத்தப்பட்ட சி.டி உயரம் இருந்தன.

இருபது சொச்சம் மாடல்களே திரும்பத் திரும்ப வந்தாலும் அலுப்புத் தட்டவில்லை. ஏனென்றால் ஆடைகள் வேறு,வடிவங்கள் வேறு.
சில பிரபலங்கள்  (தொலைக்காட்சி,சினிமா) கலந்து கொண்டார்கள்.   

போட்டியின் முடிவை அறிவிக்கப் போகும் நேரம் மனம் சீக்கிரம் கிளம்பவில்லை என்றால் கூட்டத்தில் மாட்டுவாய் என்றது.
அரங்கத்தை விட்டு வெளியே வந்து கேட்டை நெருங்கிய போது அங்கிருந்த ஒரு பணிப்பையன் 'வெளிய போயிட்டா திரும்ப உள்ள வர முடியாது சார்!' என்றான். பரவாயில்லை என்று சைகையில் சொன்னேன். அவன் சொன்னது மனித வாழ்விற்கும் பொருந்துவதாகத் தோன்றவே சிரிப்பு வந்தது.

Saturday, July 2, 2011

சம்பவங்கள் - சுருக்கம் போச்சு/ வயலின்/தாடி


சுருக்கம் போச்சு


விஷாலுக்கு 2 வயதிருக்கும் போது, நான் அய்ர்ன் பண்ணிக் கொண்டிருந்தேன். அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்த அவனை என்னருகில் உட்கார வைத்தேன். அவனுக்கு சும்மா உட்காருவது கடியாயிருக்கக்கூடாது(?!) என்று, நான் என்ன செய்கிறேனென்று அவனுக்குச் சொல்ல ஆரம்பித்தேன். ‘இங்க பார்! சட்டையில சுருக்கமாயிருக்கு! அப்பா அயர்ன் பாக்ஸ வச்சுச் தேய்க்கிறேன்’. விளம்பரத் தமிழில் நான் சொல்லிக் கொண்டிருப்பதை ஏனோ மிக அமைதியாக உம் கொட்டாமல் கேட்டுக் கொண்டிருந்தான். என் பாணிக் கடியை நான் கேட்கப் போகும் அபாயம் எனக்கு அப்போது தெரியவில்லை. ‘இப்ப பாரு, சுருக்கமெல்லாம் போயிருச்சு பாரு!’ என்று தேவையேயில்லாமல் ரொம்ப சந்தோசமாய்ச் சொன்னேன். சொல்லி முடித்தவுடன் விஷால் கேட்டான், ‘எங்ஙே போச்சு?’.அதெல்லாம் தெரிஞ்சா நான் அய்ர்ன் பண்ணிக்கிட்ருப்பேனா, சந்திரன்ல இருந்து சில பல ராக்கெட்கள பூமிக்கு விட்டுக்கிட்ருப்பேன். ஐன்ஸ்டீன், நியூட்டன், எடிசன் மூணு பேரும் டீக்கட பெஞ்ச்ல ஒக்காந்து வடை தின்னபடி யோசிக்க வேண்டிய விஷயமது.  ‘ஆஹா! கிளம்பிட்டாய்யா, கிளம்பிட்டாய்யா!’ எனது கடிகள் மற்றவர்களுக்கு எப்படி இருந்திருக்குமென்று அன்று தான் எனக்குப் புரிந்தது. விஷால் ஒரு வாரம் திடீர் திடீரென்று என்னிடம் ‘எங்ஙே போச்சு?’ என்று கேட்டு, என்னை அவன் கேள்வியிலிருந்த ஙே போல விழிக்க வைத்தான். சுருக்கங்கள் எங்ஙே போகிறதென்று உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்! ('ஏனப்பு 'சுருக்கம்' போன கதய இம்புட்டு 'விரிவா' சொல்றீக?'  "சரி.சரி.அதான் முடிச்சுட்டேன்ல!").

 

வயலின்

கல்லூரிப் பணியில் நான்கு வருடங்கள் முடித்து நான் சென்னை வந்த சமயம், ஒரு மதிய நேரம் மியூசிக் அகாடமிக்குப் போனேன். இலவசம் தான் என்றாலும் சங்கீத சேவைக்காக 50 ரூபாய் டிக்கெட் வாங்கினேன். பெரிதாகக் கூட்டமில்லை. கன்னியாகுமரியின் வயலின் கச்சேரி. அவர் பெயர் அன்று எனக்குத் தெரியாது. என் வரிசை காலியாயிருந்தது. எனக்கு முன் சீட்டில் ஒரு பெரியவர் இருந்தார். அவர் வரிசையும் காலி. அவருக்குக் கேள்வி ஏதாவது கேட்க வேண்டுமென்றால் என்னைத்தான் கேட்டாக வேண்டும். கச்சேரி ஆரம்பித்ததும் அவருக்கு ஒரு கேள்வி வந்தது. திரும்பி என்னிடம் கேட்டார் "வயலின் வாசிக்கறது யாரு?". சொல்ல நினைத்த பதிலைச் சொல்லாமல் நல்ல பிள்ளையாகத் தெரியாது என்று சொன்னேன். மனதில்  நினைத்த பதில், "அதோ நடுவில உட்கார்ந்திருக்கிற லேடி தான்!".   ஒரு பெரியவரைக் கொலைகாரராக்க விருமபாததால் அதைச் சொல்லவில்லை. 
    இச்சம்பவத்தை ஒரு நண்பரிடம் சொன்னபோது அவர் சொன்னது, 
"நீங்க அதோ அவரு தான்னு மிருதங்கம் வாசிக்கறவரக் காட்டியிருந்தா எழுந்து ஓடியிருப்பாரு!


தாடி
கல்லூரிப் படிப்பு காலத்தில் ஒரு முறை என் முகத்தில் நான்கு நாள் தாடி. வெள்ளிக்கிழமை கேன்டீனில் என்னைப் பார்த்த ஒரு ஜீனியர் (ஜான்சன்,தூத்துக்குடி), " என்ன சார் தாடி வளர்க்கறீங்க?' என்றான். என் பதில் "நான் வளர்க்கல, அதுவா வளருது!". அடுத்த வாரம் நான் தாடி டெலீட் செய்யப்பட்டு பளிச்சென்ற முகத்தோடு இருந்தேன். கேன்டீனில் அதே ஜான்சன் என்னிடம் கேட்டான். "என்ன சார் தாடிய எடுத்துட்டீங்க?". என் பதில், " நான் எடுக்கல, ஆள் வச்சு எடுத்தேன்!"

கவிதை - நேரம்

நேரம் மெல்லக் குறைந்து 
வயதாகக் காத்திருப்பதா
மனித வாழ்க்கை?நேரம் பற்றிச் சிந்திக்க நேரமில்லை!
நேரம் உணரப்படும் நேரங்கள்!
காய்ச்சலில் படுத்த நேரம். . .
மின்வெட்டான நேரம். . .
தோல்வி கண்ட நேரம். . .

 
மனிதர்கள் நடமாடும் மணற்கடிகாரங்கள்!
மணல் முடிந்தால் நேரமாகாது,.. 
நேரம் முடிந்தால் மண் போகும் கடிகாரங்கள்!
                                            

நேரத்தில் . . .
வருடங்கள், மாதங்கள்,
நாட்கள்,மணிகள்,
நிமிடங்கள்,நொடிகள். . .
இத்தனையிருந்தும். . .
நேரம் போவது தெரியவில்லை!
உருவமில்லாதது ஒரு காரணமா?
அன்புக்கும் தான் உருவமில்லை!

நேரம் போவது
தெரியத்தொடங்கினால். .
அது ஞானம் தொடங்கும் நேரம்...

நல்ல நேரம் . . .?
விழிப்புணர்வோடு அனுபவித்த நேரம்!
கெட்ட நேரம் . . .?
விழிப்புணர்வின்றிக் கழிந்த நேரம்!
நேரம் வருகிறதா?
அல்லது போகிறதா?
விடை மனதில்! 


'இறந்த' காலத்திற்கு அழாதே!
எதிர்காலத்தை எதிர்பார்க்காதே!
நிகழ்காலம் உனது!. அனுபவி!