சுருக்கம் போச்சு
விஷாலுக்கு 2 வயதிருக்கும் போது, நான் அய்ர்ன் பண்ணிக் கொண்டிருந்தேன். அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்த அவனை என்னருகில் உட்கார வைத்தேன். அவனுக்கு சும்மா உட்காருவது கடியாயிருக்கக்கூடாது(?!) என்று, நான் என்ன செய்கிறேனென்று அவனுக்குச் சொல்ல ஆரம்பித்தேன். ‘இங்க பார்! சட்டையில சுருக்கமாயிருக்கு! அப்பா அயர்ன் பாக்ஸ வச்சுச் தேய்க்கிறேன்’. விளம்பரத் தமிழில் நான் சொல்லிக் கொண்டிருப்பதை ஏனோ மிக அமைதியாக உம் கொட்டாமல் கேட்டுக் கொண்டிருந்தான். என் பாணிக் கடியை நான் கேட்கப் போகும் அபாயம் எனக்கு அப்போது தெரியவில்லை. ‘இப்ப பாரு, சுருக்கமெல்லாம் போயிருச்சு பாரு!’ என்று தேவையேயில்லாமல் ரொம்ப சந்தோசமாய்ச் சொன்னேன். சொல்லி முடித்தவுடன் விஷால் கேட்டான், ‘எங்ஙே போச்சு?’.அதெல்லாம் தெரிஞ்சா நான் அய்ர்ன் பண்ணிக்கிட்ருப்பேனா, சந்திரன்ல இருந்து சில பல ராக்கெட்கள பூமிக்கு விட்டுக்கிட்ருப்பேன். ஐன்ஸ்டீன், நியூட்டன், எடிசன் மூணு பேரும் டீக்கட பெஞ்ச்ல ஒக்காந்து வடை தின்னபடி யோசிக்க வேண்டிய விஷயமது. ‘ஆஹா! கிளம்பிட்டாய்யா, கிளம்பிட்டாய்யா!’ எனது கடிகள் மற்றவர்களுக்கு எப்படி இருந்திருக்குமென்று அன்று தான் எனக்குப் புரிந்தது. விஷால் ஒரு வாரம் திடீர் திடீரென்று என்னிடம் ‘எங்ஙே போச்சு?’ என்று கேட்டு, என்னை அவன் கேள்வியிலிருந்த ஙே போல விழிக்க வைத்தான். சுருக்கங்கள் எங்ஙே போகிறதென்று உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்! ('ஏனப்பு 'சுருக்கம்' போன கதய இம்புட்டு 'விரிவா' சொல்றீக?' "சரி.சரி.அதான் முடிச்சுட்டேன்ல!").
வயலின்
கல்லூரிப் பணியில் நான்கு வருடங்கள் முடித்து நான் சென்னை வந்த சமயம், ஒரு மதிய நேரம் மியூசிக் அகாடமிக்குப் போனேன். இலவசம் தான் என்றாலும் சங்கீத சேவைக்காக 50 ரூபாய் டிக்கெட் வாங்கினேன். பெரிதாகக் கூட்டமில்லை. கன்னியாகுமரியின் வயலின் கச்சேரி. அவர் பெயர் அன்று எனக்குத் தெரியாது. என் வரிசை காலியாயிருந்தது. எனக்கு முன் சீட்டில் ஒரு பெரியவர் இருந்தார். அவர் வரிசையும் காலி. அவருக்குக் கேள்வி ஏதாவது கேட்க வேண்டுமென்றால் என்னைத்தான் கேட்டாக வேண்டும். கச்சேரி ஆரம்பித்ததும் அவருக்கு ஒரு கேள்வி வந்தது. திரும்பி என்னிடம் கேட்டார் "வயலின் வாசிக்கறது யாரு?". சொல்ல நினைத்த பதிலைச் சொல்லாமல் நல்ல பிள்ளையாகத் தெரியாது என்று சொன்னேன். மனதில் நினைத்த பதில், "அதோ நடுவில உட்கார்ந்திருக்கிற லேடி தான்!". ஒரு பெரியவரைக் கொலைகாரராக்க விருமபாததால் அதைச் சொல்லவில்லை.
இச்சம்பவத்தை ஒரு நண்பரிடம் சொன்னபோது அவர் சொன்னது,
"நீங்க அதோ அவரு தான்னு மிருதங்கம் வாசிக்கறவரக் காட்டியிருந்தா எழுந்து ஓடியிருப்பாரு!
தாடி
கல்லூரிப் படிப்பு காலத்தில் ஒரு முறை என் முகத்தில் நான்கு நாள் தாடி. வெள்ளிக்கிழமை கேன்டீனில் என்னைப் பார்த்த ஒரு ஜீனியர் (ஜான்சன்,தூத்துக்குடி), " என்ன சார் தாடி வளர்க்கறீங்க?' என்றான். என் பதில் "நான் வளர்க்கல, அதுவா வளருது!". அடுத்த வாரம் நான் தாடி டெலீட் செய்யப்பட்டு பளிச்சென்ற முகத்தோடு இருந்தேன். கேன்டீனில் அதே ஜான்சன் என்னிடம் கேட்டான். "என்ன சார் தாடிய எடுத்துட்டீங்க?". என் பதில், " நான் எடுக்கல, ஆள் வச்சு எடுத்தேன்!"
Dear Sir, Ungal skin Wrinkles Remove Seiya Mr.Vishal ungaluk Iron Box Treatment Kodukka Pogiran. Be carefull!
ReplyDelete:) ha haa. nandri
ReplyDelete