சில நாட்கள் முன்பு கல்லூரி மாணவ நண்பன் விவேகானந்தனிடமிருந்து வந்த ஒரு மின்னஞ்சல் என்னை ஈர்த்தது. அது சென்னை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியில் நடக்கப் போகும் நிகழ்ச்சி ஒன்றுக்கான பாஸ் பற்றியது. நிகழ்ச்சியின் ஸ்பான்சர் CADD-ன் சகோதரி நிறுவனமான Dream zones. அதில் விவேகானந்தன் Country Head. அவரை தொலைக்காட்சியில் (சன் நியூஸ், தூர்தர்சன்) வேலை வாய்ப்பு பற்றிய நிகழ்ச்சியில் சில முறை பார்த்த போது என் மகன்களிடம் பெருமையோடு 'இவர் என் ஸ்டூடண்ட்' என்று சொல்லியிருக்கிறேன்.
அந்த மின்னஞ்சலைப் படித்த போது நான் அந்த நிகழ்ச்சிக்குப் போவேனென்று நினைக்கவில்லை. பிரசவத்திற்கு இலவசம் என்று ஆட்டோவில் போட்டிருப்பதைப் பார்த்து இலவசமாயிருந்தும் பயன்படுத்த முடியவில்லையே என்று ஆண்கள் நினைக்கும் நாடு. ஓசி பாஸை விடுவோமா?
வடநாட்டிலிருந்து வந்திருந்த ஒரு நண்பருக்கு உதவ முயற்சி செய்து நானும் கலந்து கொள்ளும்படி ஆயிற்று. அந்த நிகழ்ச்சிக்கு நான் எனது முகப்புத்தகப் படங்களில் இருக்கும் ஜிப்பா,கூலிங்கிளாஸ் சகிதம் சென்றேன்.
நண்பர்களுடன் உள்ளே நுழைந்த போது அரங்கம் அடுத்த நிகழ்ச்சிக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. கூட்டம் நிரம்பி வழிந்தது!(கூட்டமென்ன திரவமா?). ஸ்டேஜ் வியூ நன்றாக இருந்தது.ஸ்டேஜை வலது பக்கம் திரும்பியபடியே பார்ப்பது போலிருந்தது எனது இருக்கையின் அமைப்பு. ஒரு ஸ்டேஜில் கழுத்து வலிக்க ஆரம்பித்தது. வேறொரு பரேடில் சிலர் ஒரே பக்கம் பார்த்து சல்யூட் அடித்தபடி நிற்பர்.உட்கார்ந்தபடி அதே திரும்பல் நிலை எனக்கு ஃபேஷன் பரேடில். "பார்த்தல் யாருக்கும் எளியதாம் அரியதாம் பார்த்த வண்ணம் செயல்".
PRESS என்று சில இருக்கைகளில் போட்டிருந்தும், நல்லவேளை யாரும் அவைகளைப் பிரஸ் பண்ணவில்லை.
ஒரு இளைஞர் பெரிய உருவத்தில், அழகுக் குடுமியோடு ஒரு கோல்ஃப் பை மாதிரி ஒன்றைக் கொண்டு வந்தார். அந்தப் பையிலிருந்து இன்னொரு பையை எடுத்தார். அதிலிருந்து இன்னொரு பையை எடுத்தார். அதிலிருந்து ஒரு அட்டகாசமான கேமராவை எடுத்தார்.விலை உயர்ந்ததென்று சொல்லாமல் தெரிந்தது.என் பிரமிப்பு, அதன் விலையைப் பற்றியெல்லாம் சட்டை செய்யாமல் அவர் அதன் லென்ஸை சட்டையின் கீழ் பகுதியால் கவிதை நயத்தோடு துடைத்த போது நொறுங்கிவிட்டது.
பீட் குருஸ் என்ற பங்களூரு இசைக்குழு அரங்கை அதிர வைத்தார்கள்.அவர்களின் 'ஹை வே டு மடகாஸ்கர்' அமர்க்களம். பதினொரு பேர் கொண்ட குழு. ஒரு பேஸ் கிடார், இரண்டு டிட்ஜரிடூ (Didgeridoo - ஆஸ்திரேலியப் பழங்குடி வாத்தியம்-See pic below), ஒரு ஷேக்கர், மற்றவை ஜம்பே தாள வாத்தியம்.
Beat gurus video from YT below.
http://www.youtube.com/watch?v=ZBS9BYAVJNw&feature=related
உடன் வந்த நண்பர் சொன்னார்,"இவங்க கிட்ட எவனாவது மாட்டினா தொலஞ்சான்"
மேடையின் பக்க வாட்டிலிருந்து திடீரென்று பக்கா நேச்சுரல் லைட்டிங் போல் பளிச் ஒளி வரவே டக்கென்று திருப்பிப்பார்த்தேன்.உடனே ஏமாந்தேன். அது சூரிய ஒளி தான். யாரோ கதவு திறக்க, என்ன நடக்கிறது (யார் நடக்கிறார்கள்?) என்ற ஆர்வத்துடன் சூரியன் எட்டிப்பார்த்தான்.மேடையை எடுக்காமல் கதவுப்புறம் எடுப்பதை நம் ரசனை புரியாமல் யாரோ அலட்சியமாகப் பார்த்தார்கள். எனக்குப் பிடித்த லைட்டிங் படம் கீழே! ஒரு புதிர் கண்ணாடி நண்பர் எந்தத் திசையில் பார்க்கிறார்? விடை தெரிய படத்தின் மீது சொடுக்குங்கள்.
என் கேமரா மூன்று படம் எடுத்து விட்டு சார்ஜில்லாமல் படுத்துவிட்டது.உடன் வந்த நண்பர்கள் தங்கள் நோகியா, சாம்சங் கேலக்சி டேப் ஆகியவற்றில் வரலாற்றைப்(?!) பதிவு செய்தார்கள்.
ரேடியோ ஒன் தொகுப்பாளினிகள் 2 பேர் மேடையேறி சிலரை மேடைக்கு வரவைத்து அவர்களைப் பூனை நடை நடக்கவிட்டது செம கலாட்டா.அதில் மிருதுளாவின் குரல் பரிச்சயமாயிருந்தது. நடன நிகழ்ச்சிகளில் ஆண்களே ஆட்ட நாயகர்கள். ஒரு பெண் கூட ஆடவில்லை. ஆண் உடைகள் குறைவாக அரங்கேற்றப் பட்டதால், பெண்களே அதிகமாக மேடையில் நடந்தார்கள்.அவர்களின் நடையே நடனமாக இருந்ததால் தனியாக நடனமெதற்கு என்று நினைத்திருக்கலாம்.உலக டிசைனர்கள் தினத்தை ஒட்டி இந்த நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.பல டிசைனர்கள் தோடுடைய செவியர்களாயிருந்தனர்.
அரங்கத்தில் இளமைத் துடிப்பும், நாகரிகமான உற்சாகமும் நிகழ்ச்சித் தலைப்புக்கேற்ப (வைப்ஸ்-வைப்ரஷன்ஸ்) இருந்தது. ஆடைகள் கடல், இசை, மிருகம், பைரேட்ஸ்,பஞ்ச பூதங்கள் என்று 36 வகை தீம்களில் வடிவமைக்கப்பட்டிருந்தன. ஸ்டோரி போர்ட், மூட் போர்ட் என்று அவைகளை விளக்கிய விதம் அருமை.
எல்லோரின் வடிவமைப்பும் பிடித்திருந்தாலும், கோபி என்றவரின் வடிவமைப்பு என்னை மிகக்கவர்ந்தது.பெண் பூனை நடையாளர்கள் யாரும் கீழே விழவில்லை.இத்தனைக்கும் அவர்களின் ஹீல்ஸ் நெட்டமாக நிறுத்தப்பட்ட சி.டி உயரம் இருந்தன.
இருபது சொச்சம் மாடல்களே திரும்பத் திரும்ப வந்தாலும் அலுப்புத் தட்டவில்லை. ஏனென்றால் ஆடைகள் வேறு,வடிவங்கள் வேறு.
சில பிரபலங்கள் (தொலைக்காட்சி,சினிமா) கலந்து கொண்டார்கள்.
போட்டியின் முடிவை அறிவிக்கப் போகும் நேரம் மனம் சீக்கிரம் கிளம்பவில்லை என்றால் கூட்டத்தில் மாட்டுவாய் என்றது.
அரங்கத்தை விட்டு வெளியே வந்து கேட்டை நெருங்கிய போது அங்கிருந்த ஒரு பணிப்பையன் 'வெளிய போயிட்டா திரும்ப உள்ள வர முடியாது சார்!' என்றான். பரவாயில்லை என்று சைகையில் சொன்னேன். அவன் சொன்னது மனித வாழ்விற்கும் பொருந்துவதாகத் தோன்றவே சிரிப்பு வந்தது.
பிரசவத்திற்கு இலவசம் என்று ஆட்டோவில் போட்டிருப்பதைப் பார்த்து இலவசமாயிருந்தும் பயன்படுத்த முடியவில்லையே என்று ஆண்கள் நினைக்க, ஓசி பாஸை விடுவோமா? Super, Rasithaen :)
ReplyDeleteNandri!
ReplyDelete