Saturday, July 23, 2011

சம்பவங்கள் - சென்னை வீடு/டைட்டனா/அங்கிள்

 சென்னை வீடு
ஒரு முறை என் மாணவ நண்பன் ஒருவனைச் சொந்த ஊருக்குக் கூட்டிச் சென்றிருந்தேன். அவன் சென்னையைச் சேர்ந்தவன். என்னுடைய பாட்டி அவனிடம் 'நீ எந்த ஊரப்பா?' என்று கேட்க, அவன், 'நான் மெட்ராஸ் பாட்டி' என்றான். 'நானும் மெட்ராஸ்ல இருந்திருக்கேம்பா!' என்று பாட்டி சொன்னவுடன், நண்பன் 'மெட்ராஸ்ல வீடு எங்க பாட்டி?' என்று ஆர்வமாகக் கேட்டான். வந்த பதில் என்னை முகத்தை வேறு பக்கம் திருப்ப வைத்தது. ' ரோட்ட ஒட்டி வீடுப்பா!'. அங்கிருந்து அடுத்த அறைக்கு வந்தவுடன் அவன் சொன்னான் 'உங்களுக்குக் கடி ஜோக் எங்க இருந்து வந்ததுன்னு இப்ப எனக்குத் தெரிஞ்சிருச்சு!' . பொதுவாக என் கடிகளைக் கூட 'ரசிக்கும்' அவன் அன்று ஆடிப்போய் விட்டான்.

டைட்டனா

 கல்லூரிப் படிப்பு முடித்து வேலை தேடும் காலம். திண்டுக்கல் டு தேனி செல்லும் பேருந்தில் நான். என் அண்ணனின் நண்பர் அந்தப் பேருந்தில் ஏறினார். என்னைப் பார்த்ததும் என் அருகில் உட்கார்ந்தார். அவரை முந்தின நாள் தான் என் அண்ணன் அறிமுகம் செய்திருந்தார். வண்டி கிளம்பிப் போய்க்கொண்டிருந்தது. அண்ணனின் நண்பரைக் கடி போட முயற்சித்து, பேருந்தின் சத்தம் அதிகமாக இருந்ததால் முயற்சி வீணாகக் கூடாதென்று அமைதியாகி விட்டேன். என் இரண்டு கைகளும் முன் சீட்டின் பார் கம்பி மேல் இருந்தன. நாம தான் பஸ்ஸுக்குள்ளயே பைக் ஓட்டுவோமுள்ள! அண்ணனின் நண்பர் திடீரென்று என் இடது கையைக் காண்பித்து ஏதோ கேட்டார். எனக்குச் செம கோபமாக வந்தது. அண்ணன் ஃப்ரெண்டு  கேனத்தனமாக் கேக்கிறாரா,இல்ல லொல்லு பண்றாரா?'. முறைத்துக் கொண்டு "என்ன கேட்டீங்க" என்றேன் விஜயகாந்த் பாணியில்.
அவர் கொஞ்சம் நெளிந்தபடி "உங்க வாட்சக் காமிச்சு 'டைட்டனா'னு கேட்டேன் என்றார். 'ஆமா' என்றபடி கோபம் குறையாமல் அவர் மூக்குக்கு அருகில் என் வாட்சைக் கொண்டு போனேன். அடுத்து அவர் கேட்டார், "நான் கேட்டது உங்க காதில எப்படி விழுந்தது. என்ன ஒரு பைத்தியக்காரனப் பாக்கற மாதிரி பாத்தீங்களே?". வெளிப்படையான கேள்வி. தெளிவான கேள்வி. நான் சொன்னேன், "என் காதில 'ரைட் ஹேண்டா'னு விழுந்தது". 

அங்கிள்

முன்பு ஒரு முறை உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவரின் மகனுக்கு அப்போது இரண்டு வயதிருக்கும். கொஞ்சம் முரட்டு சுபாவம் கொண்ட பையன். அவன் பிறந்து பதினைந்தாவது நாள் நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ஒரு காலை அழுத்தி தொண்ணூறு டிகிரி கோணம் திரும்பியவன். அவனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று "போடா" என்று சொல்லி விட்டான். (சொன்னது பிறந்து பதினைந்தாம் நாளில் இல்லை இரண்டு வயதில்!) என்னையே நான் திட்டிவிட்டால் கோபத்தில் என்னையே அடித்து விடுவேன். பயப்பட வேண்டாம். அது மாதிரி நடந்ததில்லை. ஒரு பேச்சுக்குச் சொன்னேன். கோபக்கார மாமாவைப் பக்கத்தில் நின்று "போடா" சொல்லக்கூடாதென்று அன்று அவன் கற்றுக் கொண்டான். கனல் கண்ணன் ஜாகுவார் தங்கம் பாணியில் சில பல அடிகள் அவனுக்குக் கிடைத்தன. அவன் பெருங்கூச்சல் போட்டு அழுதான். அந்தப் பயலுக்கு அழுகையும் வீரமான முரட்டு அழுகை தான்.  மனசு கேட்காமல் அவனைப் பக்கத்தில் இழுத்து "மாமாவத் திட்டலாமா.இனிமே இந்த மாதிரித் திட்டக்கூடாது!" என்று எடுத்துச் சொன்னேன். அவன் அழுகை குறைந்து, "அங்கிள்" என்று ஏதோ திட்டும் குரலில் முரட்டுத்தனமாகச் சொன்னான். பரவாயில்லையே அடிச்ச அடியில ஆங்கிலம் வருதே என்று நினைத்தேன். அவன் அங்கிள் என்று சொன்னது அவன் அப்பாவிற்கு ரொம்ப சந்தோசம். அது என் வருத்தமாகப் போவது எனக்குத் தெரியாமல் நானும் புலகாங்கிதமடைந்து(சந்தோசம் தான்.காங்கிரஸில் சேருவதில்லை) சிரித்தபடி இருந்தேன். அவன் அப்பா அவனிடம் கேட்டார், "அங்கிள்னா என்னடா கார்த்தி?". முரட்டுப் சிறுவன் சொன்ன பதில் "நாயி!". என் கோபம் 'கோபாம்' ஆகி அவன் அப்பா மேல் விழுந்தது. "ஏங்க அவன் தான் அங்கிள்னு சொன்னான்னு சந்தோசமா போயிருப்பேன்ல. அத எதுக்குங்க அர்த்தமெல்லாம் கேட்டீங்க"

2 comments:

  1. I liked the 'uncle' episode. slapping self line was excellent.

    ReplyDelete