Sunday, October 23, 2011

சிறு கவிதைகள் - தொகுப்பு 18


காலையில்
அதிகமாகிறதோ
புவி ஈர்ப்பு விசை? 
எழ முயற்சிக்கையில்
இழுக்கிறதே 
படுக்கை!



****
பின்னிரவில்
கண் விழித்தேன்.
குடியிருப்புக் காவலாளி
லத்தியால் தரை தட்டும்
'தட் தட்' ஓசை...
காவலாளி
தூங்காமலிருப்பதை
மட்டும் உணர்த்தவில்லை.
அதனைக் கேட்பவர்கள்
தூங்காமலிருப்பதையும் தான்.

****

எல்லைகள்
மீன்தொட்டி மீன்களுக்குக்
எல்லை கண்ணாடிகள்.
குளத்து மீன்களுக்கு
எல்லை குளக்கரை.
கடல் மீன்களுக்குக்
எல்லை கடற்கரை.
சமுத்திரத்து மீன்களுக்கு
எல்லை அதன் கரை.
எல்லையற்ற சுதந்திரம்
இல்லை இல்லை.
****

பைத்தியம்
பரட்டைத் தலை.
கரிய அழுக்கு உடல்.
கந்தலாடை.
கிழிந்த சாக்கில்
சேமித்த குப்பைகள்.
தெளிவில்லா நடை.
வெயில் மழை
பாராத தெருவோரப்
படுக்கை.
தீவிர சிந்தனை.
அவ்வப்போது புன்னகை
பிறர் பார்வையில்
நீ பைத்தியம்.
உன் பார்வையில்
பிறர்.


****




தினந்தோறும் மத்தாப்பு.
தீபாவளியன்று இல்லை.
வெல்டிங் 
வேலைச் சிறுவன்.

No comments:

Post a Comment