Sunday, October 9, 2011

சிறு கவிதைகள் - தொகுப்பு 17


பிலிம் காட்டுதல்! 
பள்ளிப் பருவத்துச்
சொத்துக்கள் பலவற்றில்
கட்டுக் கட்டான
பிலிம்களும் அடங்கும்.
கருப்பு வெள்ளை பிலிம்கள்.
கலர் பிலிம்கள்.
பளபளப்பாய்...
வழுவழுப்பாய்...

பிலிமைக் கொடுத்தும்
கொளல் வேண்டும் நட்பு.
பிலிம்களால் சண்டைகள்.    
பிலிம்களால் சமரசங்கள்.
கமல் கொடுத்து
ரஜினி வாங்கும்
பிலிம் பரிமாற்றங்கள்.
விளையாட்டுகளில் தோற்றவன்
தரும் பணயமாய் பிலிம்கள்.
காசுக்கு வாங்கும் பிலிமில்
எழுத்து வந்தால் ஏமாற்றம்.

கண்ணாடி திருப்பிவிட்ட
சூரியஒளி வீட்டுச்சுவற்றில்.
குறுக்கே லென்ஸ்.
பிலிமின் பிம்பம்  

சுவற்றில் பெரிதாய்.
அந்தக்கால ஹோம் தியேட்டர்!.
எடிசனை மிஞ்சிய சந்தோசம்.

காலப் போக்கில்
காணாமல் போனவை...
பிலிம்களும் சிறுவனும்.

வாழ்க்கை  விளையாட்டா?

வாழ்க்கை பரமபதமில்லை!

முழுக்க அதிர்ஷ்டத்தை

மட்டும் நம்பியிருக்க.

வாழ்க்கை சதுரங்கமில்லை!.

முழுக்க அறிவை

மட்டும் நம்பியிருக்க.

வாழ்க்கை சீட்டு விளையாட்டு!

கலைத்துப் பிரித்ததில்

கிடைத்த சீட்டுக்களைக்

கையாள்வதில் இருக்கிறது

வெற்றியும் தோல்வியும்.


சரஸ்வதி பூஜை

புத்தகங்களிடமிருந்து

 விடுதலை.

 கொண்டாடும்

 பிள்ளைகள்.


மின்வெட்டு
மின்சாரம்

தடைப்பட்டால் 

முடங்கிப்

போகிறோம்.

நாமும்

எந்திரன் தான்.






கல்வெட்டில் பொறியுங்கள்
வரும் போது
நேரம் காட்டும்.
செலவைக் குறைக்கும்.
இயற்கைக் காற்றை
சுவாசிக்க வைக்கும்.
மனதில் தத்துவச்
சிந்தனைகள் தோன்றவைக்கும்.
நாம் யாரென
உணர வைக்கும்.
வீட்டில் ஒருவரோடு
ஒருவரைப் பேசவைக்கும்.
பெரியவர்களைக் குழந்தைகளுடன்
விளையாட வைக்கும்.
புத்தகங்கள் படிக்க வைக்கும்.
கவிதையெழுத வைக்கும்.
போகும் போது
மகிழ்ச்சியில் குதிக்கவைக்கும்.

இத்தனை சிறப்பிருந்தும்
நீ வெறுக்கப்படுவதேன் மின்வெட்டே!

No comments:

Post a Comment