Sunday, November 13, 2011

சிறு கவிதைகள் - தொகுப்பு 20


ஊனம்
உடலிலா ஊனம்?
பார்வை இல்லாததா?
செவித்திறன் இல்லாததா?
கை,கால் இல்லாததா?
பேச்சு இல்லாததா?
உடல் குறைகள் இருந்தும்
சாதித்தோர் பலர்..
கனவு கலைக்க
ஊனத்தால் முடியாது.
இலட்சியம் தகர்க்க 
ஊனத்தால் முடியாது.
நம்பிக்கை முறிக்க
ஊனத்தால் முடியாது.
உடலில் குறையின்றி
மனதில் குறையுள்ளோர்
தமக்குத் தாமே
தடையாவர்.
மனதில் இருப்பதே ஊனம்.

கவிதையும் காதலும்
காதலிக்காத கவிஞனில்லை.
கவிதையெழுதாக் காதலரில்லை.
காதலும் ஒரு கவிதை.
கவிதையும் ஒரு காதல்.
காதல் பாடும் கவிதை.
கவிதை பாடும் காதல்.
கவிதையில் இலக்கியம்.
இலக்கியத்தில் காதல்.
படித்துப் பார்க்கப்படும் கவிதை.
பார்த்துப் படிக்கப்படும் காதல்.

முதல் கவிதை
எப்போது வந்தது.
முதல் காதல்
வந்த போது...
மௌன மொழியில்
காற்றுக் காகிதத்தில்
உருவமற்ற எழுத்தில்
எழுதப் பட்டிருக்கும்.
கவிதையும் காதலும்
விக்கலைப் போல்...
நிறுத்தவே முடியாதவை.
மென்மைக் கலைகள்.
மனதின் படைப்புகள்.  
படைத்தவர் காலம் முடியினும்
படைப்பின் காலம் முடியாது.

எத்தனை பக்கம்
அத்தனை ரசிக்கலாம்.
வார இதழ்களில் கவிதை இருக்கும்.
ஈர இதழ்களில் காதல் இருக்கும்.
கவிதையின் நடை ரசனை.
காதலரின் நடையும் தான்.
கவிதையில் வரிகள்.
முகம் தெரிந்து முகவரி
தெரியாக் காதலுண்டு.
வார்த்தைகள் இரண்டிலும் ரசிக்கப்படும்.
உயிரும் மெய்யும் கலந்தவை.
புரியாக் கவிதையுண்டு.
புரியாக் காதலுண்டு.

மரபுக்கவிதையுண்டு.
புதுக்கவிதையுண்டு.
மரபுப்படி காதல் என்றும் புதிது.
பத்திரிக்கையில் கவிதைகள்.
வென்ற காதலும்
தோற்று மாண்ட காதலும்
வேறு வேறு பத்திரிக்கைகளில்.
காதலில் தோல்வி
தாடியில் முடியலாம்.
கவிதையில் வெற்றி
தாடியில் தொடங்கலாம்.
பொருளுக்காகக் கவிதை .
பொருள் துறக்கும்
உண்மைக் காதல்.

மழை
பெய்யாத போது
நனைய ஏங்குவோம்.
நனையும் போது
ஒதுங்க ஓடுவோம்.

அருகில் நனைந்தபடி ஓடுவர்.
குடையில் இடமிருக்கும்.
மனதில் இருக்காது.

பெரும்பாலும்...
வீட்டில் இல்லாமல்
வெளியில் இருக்கும் போது 
மழை அடிக்கும்.
குடை வீட்டில் இருக்கும்.




அநேகமாய்...
அதிகமாய் நனைவது
வானிலை அறிக்கை
பார்த்தவராயிருக்கும்.




பகலில் மழையின்
பிண்ணனி இசை.
இரவில் தவளைகளின்
ராக ஆலாபனை.
தவளையின் குரலைத்
தவளை ரசிக்கும் வரை
தவளைகள் இனம் வாழும்.

1 comment:

  1. கவிதையும் கவிதை சொல்லும் பிம்பபும் மிக அருமை...

    ReplyDelete