Wednesday, January 5, 2011

எனது அமெரிக்கப் பயணம்-ட்ராயில் தங்கியிருந்த போது ... பகுதி 5



அன்று இரவு நான் வழக்கமான கடையில் சாப்பிடவில்லை.அதற்குள் அது சலித்துவிட்டது. ஹோட்டலின் அருகில் வேறு ஏதாவது கடை இருக்கிறதா என்று நம்பிக்கையின்றித் தேடினேன்.நல்ல வேளை, என் அதிர்ஷ்டம் ... இருந்தது. அதுவும் பெரிதாக இருந்தது. அதில் பெரிது பெரிதாகப் பல டி.விக்கள் சுவர்களில் அங்கங்கே இருந்தன. 

  ஒரு டி.வியில் பேஸ் பால் விளையாட்டும்,இன்னொன்றில் ரக்பியும் லைவாக ஓடிக் கொண்டிருந்தன. ரக்பியில் மலை போன்ற ஆட்கள் ஒரு பந்திற்காக முட்டி மோதிக் கொள்வதைப் பார்க்கும் போது, ஐயோ பாவம், ஒரு பந்திற்காக இத்தனை அடிதடியா,பேசாம ஆளுக்கொன்னு வாங்கிக் கொடுத்து விடலாம் என்று தோன்றியது. அந்த விளையாட்டுகளால் கவரப்படாமல் நான் ரிஷி போல் அமர்ந்திருந்தேன்,Odd man out. இதை ‘Ignorance is bliss' என்றும் அழைக்கலாம். 

  இந்தியாவே பைத்தியமாய்க் கொண்டாடும் கிரிக்கெட்டையே நாம
 சீண்டுறதில்ல.இது தெரியாம,ஒரு நா ஆபிஸ் நேரத்தில, கூட வேல பாக்குற பையன் வேகமா ஓடி வந்து, மூச்சிரைக்க, ‘சார்! ஸ்கோர் என்ன’னு கேட்டான்.  நான் இரக்கமில்லாம, ‘யாரும் யாரும் விளயாட்றாங்க’னு தெரிஞ்சுக்கலாமேன்னு ஆர்வத்தில அவன் கிட்டயே கேட்டேன்.
 அவன் அழாத குறையா ஆயிட்டான்.அவன் என்னை நாடு கடத்த முயற்சி பண்ணான்னு தெரியல.

  நான் வழக்கமாகச்(?!) சாப்பிட்டுக் கொண்டிருந்த கடையில் முதல் நாள் மட்டும் தான் வெஜ் பர்கர் கிடைத்தது. அதனால் தான் கடை மாறினேன். இந்தக் கடையில் வெஜ் பர்கர் என்று தயங்கிய படி கேட்டேன், எங்கே வடிவேலு போல தலையைத் திருப்பி ‘ந்ந்நோ’ சொல்லி விடுவானோ என்று பயந்த படி. ஆனால் இங்கு ‘என்ன மாதிரி வேண்டும்’ என்று பதில் கேள்வி வந்தது. பசியில் கர்புர் என்ற வயிற்றை அந்த பர்கர் அடக்கியது. 

  குளிரில் நடை போட்டு ஹோட்டலை நெருங்கிய போது, பில் வாங்கிக் கொள்ளாதது ஞாபகம் வந்து ஓடிப் போய்ப் காத்திருந்து பில் வாங்கி வந்தேன்.  நான் பர்கர் சாப்பிடும் போஸில் எடுத்த புகைப்படத்தை வைத்து ஆபிஸில் ஃபினான்ஸ்  பில் செட்டில்மெண்ட் பண்ண முடியாதே!

  2 மணி நேரத்தூக்கத்தில் எழுந்து விட்டேன். இன்று ஊருக்குக் கிளம்ப வேண்டிய நாள். ஆறு மணிக்கு ஹோட்டலை விட்டு வெளியே வந்தேன். வெள்ளைக்காரர்கள் அதிகம் வாழும் தேசம் வெள்ளை தேசமாக ஆகியிருந்தது. இரவு முழுதும் பனி பெய்திருக்கிறது.’நம்ம கிட்ட சொல்லவேயில்லயே!’ ஒரு வண்டி பனியை அகற்றிக்கொண்டிருந்தது.அந்த வண்டிக்காரருக்கு எப்போதும் பனி நேரத்தில் பணி, சில் நேரம் பணி நேரத்தில் பனி.முந்தைய இரவு பனி விழும் இரவாய் இருந்திருக்கிறது. ஆனால் நனைந்தது நிலவு இல்லை,பூமி. மொபைல் கேமராவால் கிச்சுக் கிச்சுக் என்று படம் எடுத்தேன்,விரும்பிய திசைகளில். தரையில் வெண்பனிப் படலத்தில் என் பெயரை எழுதிப் படம் எடுத்தேன். பேராசை இல்லாவிட்டாலும் எனக்குப் பெயராசை உண்டு.


சாப்பிட்டு விட்டுக் பயணப் பெட்டிகளைத் தயாராக்கி வெளியே வந்தேன். வண்டி தயாராகக் காத்திருந்தது.காலந்தவறாமை அமெரிக்காவில் குடிபெயரும் இந்தியர்களுக்கும் ஒட்டிக் கொள்கிறது.முன்பு குறிப்பிட்ட கேரளா நண்பர் தான் வந்திருந்தார். அவரிடம் நான் மலையாளம் வாசிப்பேன்,புரியவும் செய்வேன்  என்று சொன்னபோது, பேசுவீர்களா என்றார். 'வச்சுட்டாருடா ஆப்பு!'.கொறச்சு அறியுமேன்றேன். வாசிக்கு வாசிக்கத் தெரியும் என்பதால் அவர் வண்டியை ஓட்டிக்கொண்டே எழுதிக்காண்பிக்க முடியாதே!


கேரளா நண்பர் சொந்த வாடகைக் கார் கம்பெனி நடத்துகிறார். அவரும் வண்டி ஓட்டுகிறார். அமெரிக்கா வந்து 30 வருடங்கள் ஆகிவிட்டதாம்.அவரின் கேரள ஆங்கிலத்தில் கொஞ்சம் அமெரிக்கன் ஆங்கில பாணிப் பேச்சு கலந்திருந்தது வித்தியாசமாக இருந்தாலும் எனக்குப் பிடித்திருந்தது.அவர் பேச்சில் அதிகமாக வாகனம் சார்ந்த உதாரணங்கள் வந்தன.பொதுவாக வாகனம் ஓட்டும் தொழிலில் இருப்பவர்களுக்குப் பொது விவரம் அதிகம்.உலகின் பல இடங்களிலும் நடப்பதைத் தெரிந்து கொள்ள World TV பார்ப்பதாய்ச் சொன்னார்.


 இந்திய அமெரிக்க வாழ்க்கை முறைகளைப் பற்றிப் பேசிச் சென்றதில் சீக்கிரம் ஏர்ப்போர்ட் சென்று விட்டோம். 

Next Page> http://venkatramvasi.blogspot.in/2011/01/1_07.html

Sunday, January 2, 2011

எனது அமெரிக்கப் பயணம்-ட்ராயில் தங்கியிருந்த போது... பகுதி 4

  காலை 6 மணிக்கே சாப்பிடும் இடம் களை கட்டி இருந்தது. அந்த ஹோட்டலில் தங்கி இருக்கும் பலர், ஹோட்டல் ஊழியர்களிடம் பழகுவதைப் பார்த்தால், அவர்கள் அங்கே நிரந்தரமாத் தங்கியிருப்பதாகத் தெரிந்தது.


சாப்பிடுபவர்களின் உடைகளைப் பார்த்தால் அவர்கள் துணி,சோப்பு,ஆடை போன்ற விளம்பரப் படங்களில் ஒரே நேரத்தில் நடித்து விட்டு நேரே சாப்பிட வந்தது போல் இருந்தது.நம் ஊரில் நம் ஆட்கள் கல்யாண நாள்,பிறந்த நாளில் 
ஓரளவு பளிச்சென்றிருப்பார்கள்.
    
  அதைவிட இன்னொரு முக்கியமான விசயம்.சாப்பிடுபவர்களிடம் இருந்த நிதானம். ஒரே நேரத்தில் தட்டை நிரப்பி சர்க்கஸில் பேலன்ஸ் வித்தை போல் நடக்கவில்லை. அவர்களின் ஒழுங்கும் கட்டுப்பாடும் ஆச்சரியப்படுத்தின. தட்டை எடுத்துக் கொண்டு உட்கார வரும் போது அவர்களின் சிறு வயது உருவம் தெரிவது போல் உண்ர்ந்தேன்.ஐந்தில் வளைந்தது ஐம்பதில் வளைகிறதோ?. அவர்கள் சாப்பிடும் போது அவசரப்படவில்லை. இருவரோ, நால்வரோ பேசிக்கொண்டு சாப்பிடுபவர்கள் பேச்சையும் சாப்பாட்டையும் ரசிக்கிறார்கள். அவசரமாய் சாப்பாட்டை முடித்து விட்டு புவி சூடாதலைத் தடுக்கும் பொத்தானை அழுத்த ஓடப் போவதில்லை என்று தெரிந்திருக்கிறார்கள்.

  
காலை உணவிற்குப் பல வகைகள் இருந்தன. எல்லாவற்றிலும் கொஞ்சம் சுவைத்து விடுவது என்று முடிவெடுத்தேன். நான் முடிவெடுத்துட்டேன்னா நானே சொன்னாலும் மாத்திக்க மாட்டேன். ”சே! இங்க வந்தும் த்மிழ்ப்பட பஞ்ச் டயலாக் பாதிப்பு போலயே!” எனக்கும் அன்று ஒன்றும் அவசரமில்லை. 
  
 அந்த அறையில் இருந்த தொலைக்காட்சியில் பார்த்த செய்திகள் இரண்டு.
 1) அமெரிக்காவின் வரலாற்றில் இதுவரை குறைந்த பட்ச வெப்ப நிலை -80 F 
 (-62   C). இது கண்டிப்பாக நெஞ்சை உறைய வைக்கும் தகவல் தான்.
 2) அமெரிக்காவில் ஒரு தனி நபர் 28 gallons (106 liters) ரத்த தானம் செய்திருக்கிறார், 50 வருடங்களில். ஒவ்வொரு முறை தானம் செய்யும் போதும் பெருமைப் படுவதாகச் சொல்கிறார் அவர். 
   
  மல்டி க்ரெய்ன் டோ நட் என்ற அய்ட்டத்தை குச்சி வைத்துக் குத்தாத குறையாக வெறுமனே தின்று முடித்தேன். வேறு உணவை எடுக்கச் சென்ற போது அதே மல்டி க்ரெய்ன் டோ நட்டிற்கு ஒரு பாட்டி ஐந்து வகையான சிறு பாக்கெட்களில் உள்ள பேஸ்ட்களைத் தடவி அலங்காரம் பண்ணி அதை மிருதுவாக்கித் தின்று கொண்டிருந்தாள். அந்த நேர்த்தியான அலங்காரத்தைப் பார்த்த போது, இந்தப் பாட்டி சென்னை வந்து ஒரு கல்யாண வீட்டில் வெத்திலை பாக்கு போட நேர்ந்தால், கண்டிப்பாக வெத்திலையை முதலில் தின்று விட்டுப் பிறகு பாக்கைக் கொஞ்ச நேரம் சப்பி விட்டுக் கடைசியில் நாக்கில் சுண்ணாம்பைத் தடவ மாட்டாள் என்று தெரிந்தது. வெத்திலை பாக்கு தின்னும் முறையை நம் மக்களைப் பார்த்தோ, இல்லை அவர்களிடம் கேட்டோ தெரிந்து கொண்டிருப்பாள்.  
   
  ஒரு இடத்தில் அச்சுப் பாத்திரம் போல் ஒன்று சூடாக இருந்தது. அது Waffles செய்யும் உபகரணம். பக்கத்தில் ஒரு பேஸ்ட் பாக்கெட் இருந்தது. அருகில் ஒட்டியிருந்த குறிப்பைப் பார்த்தேன். அது ”பேஸ்ட்டை ஊற்றுங்கள்,மூடியை மூடுங்கள்,Waffles தயாரானதும்,ஒரு கரண்டியால் எடுத்து விடுங்கள்.சூடு ஜாக்கிரதை” என்றது. Waffles ஒரு அமெரிக்க அச்சுப் பனியாரம். நம் நாட்டு ஹோட்டலில் நம்மைக் காலை வேலையில் இது மாதிரி, பனியாரம் சுட்டுச் சாப்பிடச் சொன்னால், கொஞ்ச நாளில் ஹோட்டல் போய் அந்த இடத்தில் பனியாரக் கடை வந்து விடும். ஒரு வழியாகக் காலை உணவ்வ்வ்வு (கொஞ்சம் அதிகமாக உண்டதால் இத்தனை ’வ்’ ) முடிந்தது. 

 அந்த ஹோட்டலில் Wi-fi வசதி இருந்தது. அதுவும் ஃப்ரீ தான். என் ஆண்ட்ராய்ட் மொபைலின் மூலம் அந்த வசதியைப் பயன்படுத்தி இணையத்தில் இணைய முடிந்தது. தினமும் இரவு 60 நிமிடங்கள் long distance calls இலவசம். Gym ஒன்றும் இருந்தது.உள்ளே போய் அரசு ஆய்வு அதிகாரி போல் எல்லாக் கருவிகளையும் பார்த்து விட்டு வந்தேன். ’ஒரே நாளில் அர்னால்ட் ஆகலாம்’ என்ற புத்தகம் இதுவரை வெளிவரவில்லை(இனி வரலாம்!).இது தவிர மதிய நேரத்தில் சினிமா காட்டி, பாப் கார்னும் கோக்கும் தருவார்களாம். இண்டெர்நெட்,ம்ற்றும் ஷட்டில் வசதி பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன். இப்படி வசதிகள் இருப்பதால் தான், அடிச்சுத்தொரத்தினால் கூடப் போகாத மாதிரிப் பலர் இங்கு தங்குயிருக்கிறார்கள்.   
   
  அன்று அலுவலத்திற்குச் சென்ற போது நான் சந்திக்கச் சென்றவர்கள், வெளியே சென்றிருந்தனர். தனியே காத்திருந்தேன்.மதியம் jimmy johns gourmet sandwich ஆர்டர் செய்து வரவழைத்து,சாப்பிடக் கொடுத்தார்கள். வாவ்! ஜிம்மி ஜான்ஸ் சாண்ட்விச் கடைக்கு நான் ஹூஸ்டனில் இருந்த போது போயிருக்கிறேன். அந்தக் கடையின் சுவற்றில் உள்ள போஸ்டர்களில் நல்ல கருத்துக்கள் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டிருந்தன. எல்லாவற்றையும் படித்து விட்டுத்தான் கடையை விட்டு வெளியே வந்தேன். மேலும் அந்த சாண்ட்விச்சின் சுவை ஞாபகத்தில் இருந்தது. அது மீண்டும் சாப்பிடக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்ந்தேன்.கீழே உள்ள இணைய தளத்தில் ஜிம்மி ஜான்ஸ் ஃபோட்டோவும் அங்குள்ள ஒரு போஸ்டரின் வாசகங்களும்.
சந்திக்க வேண்டியவர்களைச் சந்தித்து விட்டு மீண்டும் ஹோட்டலுக்கு ஒரு நண்பரின் உதவியால் வந்து சேர்ந்தேன். 



  கிக் பேக்கில் மாலை நேரத்துச் சாப்பாட்டை முடித்தேன். அதே நாச்சோஸ், அதே சல்சா... போங்கப்பா! 'History repeats' என்று சொல்வார்கள் அது அடுத்தடுத்த நாள் சாப்பாட்டில் நடந்தால் வயிற்றெரிச்சல் தான். 
 ஷட்டில் வசதியைப் பயன் படுத்திச் சற்றுத் தொலைவிலிருந்த Radio shack எலக்ட்ரானிக்ஸ் கடைக்குப் போனேன். வண்டியை ஓட்ட வந்த இளைஞன் நான் ஏற்கனவே சோமபானம் கலக்கிக் கொடுக்கும் பணியிலிருந்ததைப் பார்த்திருந்தேன். அவனிடம் ’வாட் டைம் இட் இஸ்’ என்று கேட்க அவன் ‘இட்ஸ் Cold டைம்’ என்று சொல்லிச் சிரித்தான். ’என்னிடமே ஜோக்கா?. தம்பி!அப்புறம் நான் ஜோக் சொல்ல ஆரம்பிச்சா நீ ஹோட்டலை விட்டே ஓடிருவ’.அமெரிக்கர்கள் புதியவர்களிடம் முதல் பேச்சை இப்படியாக ஜோக் அடித்து ஆரம்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இதை Ice breaker என்று சொல்கிறார்கள். இதை நம் தேசத்தில் செய்தால் Tooth breaker என்றாகி விடும்.

அவனை பாரில் பார்த்ததைச் சொன்ன போது அவன் ‘நான் ரிஷப்சனில் இருப்பேன், பாரில் இருப்பேன், சமையல் செய்வேன், ஷட்டில் வண்டி ஓட்டுவேன்’ என்றான். ‘Multi tasking' என்றேன். அதை ஆமோதித்துச் சிரித்தான்.
Radio shack கடையில் பொருள் வாங்கி விட்டு, ஹோட்டலுக்கு ஃபோன் பண்ண ஓசி ஃபோன் கேட்டேன். நான் ஃபோன் விலைக்குக் கேட்பதாய் நினைத்துக் கடைக்காரன் சில புது மாடல் ஃபோன்களை டேபிள் மேல் போட்டு எது வேண்டுமென்றான். "If anything can go wrong, it will" என்ற Murfey's law ஞாபகம் வருகிறதா? 
  
 வண்டி வரும் வரை அந்தக் கடையின் வெளியே காத்திருந்தேன். அந்தக் குளிருக்கு நான் போட்டிருந்த ஜெர்கின் சாதாரணமாக இருந்தது. குளிரில் நடுங்கினாலும் மீண்டும் கடைக்குள் போய் குளிருக்கு ஒதுங்க மனமில்லை. இப்படி பைசா பெறாத வில் பவர் சோதனை செய்து கொள்வதுண்டு.சிறிது நேரத்தில் வண்டி வந்து என்னை ’மீட்டு’ச் சென்றது.   
  

Next Page> http://venkatramvasi.blogspot.in/2011/01/blog-post_05.html

எனது அமெரிக்கப் பயணம்-ட்ராயில் தங்கியிருந்த போது... பகுதி 3


  இரவு 9 மணி ஆகியிருந்தது. ஷட்டில் வசதி 8 மணி வரை தான். அது எங்களுக்கு முன்பே தெரியும். நடந்து திரும்புவோம் என்று நான் சொன்னதை புனே நண்பன் ஏற்றிருந்தான். ஹோட்டலுக்கு நடக்க ஆரம்பித்தோம்.சாலையோரம் ப்ளாட்ஃபார்ம்கள் வெள்ளையாகப் பனியால் மூடப்பட்டிருந்தன. 
  கோல மாவை ஒரு சீராகக் கொட்டி வைத்தது போலிருந்தது பனி. பொமரேனியன் போலச் சாதுவாகப் படுத்திருந்தது.கொஞ்சத்தைக் கையிலெடுத்தேன்.வெறுங்கையில்!.சிறு வயதில் விளக்கு தீபத்தைத் தொட்டு, பாடம் கற்றுக் கொண்டது போன்ற அனுபவம் மீண்டும் அதற்கு எதிர்மாறான வெப்பத்தில் கிடைக்கப் போகிறதென்று தெரியாமல்..

  பனி எடை குறைவாக இருந்தது.கோல மாவின் எடையை எதிர்பார்த்தால் ரவையின் எடை மாதிரி இருந்தது. ஆச்சரியமாகக் குளிர்ச்சியே இல்லை.”என்னாங்கடா!”.மேலும் வைத்திருப்பதில் ஆர்வம் இல்லாததால் கீழே உதிர்த்தேன்.உதிர்த்த பின்னும் பனி விரல்களில் பட்ட இடங்களில் ஈரம் இருந்தது. அந்த ஈரத்தின் குளிர்ச்சி விர்ர்ர்ரென்று இழுத்தது. என் மொத்த உருவத்தையும் என் விரல்களுக்குள் இழுக்கப் பார்க்கும் முயற்சி மாதிரி.”அடப் பாவிகளா” என்று விவேக் பாணியில் சொல்லி வடிவேல் பாணியில் “வ்வுவுவுவூவூ....” என்று கத்துவது போன்ற நிலைமை. தமிழ் சினிமாவில் பாடல் காட்சிகளில் கதாநாயகனும் நாயகியும் பனியில் பாடி,ஆடி,ஓடி..பனியை ஒருவர் மேல் ஒருவர் எறிந்து விளையாடுவர். (உ-ம் வா வா வா கண்ணா வா பாடல், ரஜினி அமலா நடித்தது)அவர்கள் அக்காட்சியில் க்ளௌஸ் அணிந்திருப்பதை நான் கவனிக்காதது அவர்கள் தவறல்ல.
   
  வரும் வழியில் ஸ்டார் பக்ஸில் காஃபி மோக்கா குடித்தோம்.அன்று நான் ஸ்டார் பக்ஸில் நுழைந்தது காஃபி மோக்காவிற்காக என்பதைவிட குளிரிலிருந்து கொஞ்ச நேரம் தப்புவதற்காக..
   ஹோட்டல் எதிரில் வந்து விட்டோம். சாலையில் சில வண்டிகள் பாறிச் சீய்ந்து கொண்டிருந்தன.இல்லை சீறிப்பாய்ந்து கொண்டிருந்தன.மன்னிக்கவும்.குளிரின் நடுக்கத்தால் வார்த்தைகள் குளறி விட்டன. சாலையைக் கடப்பது சிறிது சிரமமாக இருந்தது. ஒரு கார் 
வந்து கொண்டிருக்கும் போதே புனே நண்பன் குறுக்கே ஓடலாம் என்றான். நான் அவனிடம் எனது கொள்கையைச் சொன்னேன். ”நான் செய்தியில் வருகிறேனென்றால் அதை நான் பார்க்க வேண்டும்!”. ஒரு வழியாக சாலையைச் சமயம் பார்த்து ஓடிக் கடந்தோம். இருவரும் அந்த அல்ப வீரச் செயலைச் செய்து முடித்தற்கு “We are daring Indians" என்று பாராட்டிக் கொண்டோம்.
  
  ஹோட்டலின் பக்கத்துக் கடையில் இருவரும் சாப்பிடும் போது புனே நண்பன் மிகவும் சந்தோசமாக இருந்தான். தான் வந்து இரண்டு வாரத்தில் இன்று தான் இரவில் நடந்திருக்கிறேனென்றும், இது ஒரு அட்வென்ச்சர் இரவென்றும் சொன்னான். நான் அவனின் இமெயில் விலாசத்தை வாங்கிக் கொண்டு எங்கள் அறைகளுக்குச் சென்றோம். மறு நாள் காலை அவன் செக் அவுட் செய்து வேறு பகுதிக்குச் செல்ல வேண்டும்.
      நான் இரண்டு மணி நேரம் தான் தூங்கியிருப்பேன்.சென்னை போய்ச் சேர்ந்தபின் இரவில் தூக்கம் வராமல் முழித்திருப்பதைவிட ட்ராயில் முழித்திருப்பது என்று முடிவு செய்தேன்.கீழே வந்து ரிசப்சன் பக்கத்தில் காபி எடுத்துக் கொண்டேன். அதிகாலை 4 மணிக்குக் காபி கிடைக்கும் அமெரிக்க ஹோட்டல் வாழ்க. கத்திச் சொல்லவில்லை.நினைத்துக் கொண்டேன்.அந்த நேரத்திலும் ரிசப்சனிஷ்ட் பரப்பரப்பாகக் காலை உணவுகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.கிச்சனிலும் ஆள் இருப்பது தெரிந்தது. ரிசப்சனிஷ்ட் என்றவுடன் கொடியிடையாளைக் கற்பனை பண்ணிக் கொள்ள வேண்டாம். அவள் ஒருத்தியே இரண்டு சுமோ பயில்வான்களை,நம் கிராமத்துத் திருவிழாக்களில் சிலர் சிறுவர்களைத் தூக்கிச் செல்வது போலத் தோளுக்கொருவராகத் தூக்க முடியும்.துளிக்கூட அசராமல் இரவு முழுதும் வேலை பார்க்கும் அவர்களிடம் “Don't you know Bongu?" என்று கேட்கலாம் போல் இருந்தது. 
    
   இன்டெர்நெட் வசதியைப் பயன்படுத்தி இப்பயணக் கட்டுரையின் ஒரு பகுதியைத் தட்டச்சு செய்தேன். அந்த இன்டெர்நெட் வசதி இலவசம் என்பது என்னை அதனைப் பயன்படுத்தத் தூண்டியது. இலவசம் என்றதும் பரவசம். மூச்சு விட அரசாங்கம் காசு கேட்டால் நாம் ம் கட்டியே வாழப்பழகி விடுவோம்.இலவசம் என்பதால் ஆழ இழுத்து மூச்சு விடாமல் மேலோட்டமாக வேக வேகமாகப் விட்டுக்கொண்டிருக்கிறோம்.அன்று நான் 6 மணிக்கே பஃபே ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு வந்து விட்டேன். காரணம் அந்த நேரத்தில் அமெரிக்க மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம். (அட,உண்மை தாங்க! நம்பாமல் மானிட்டரிலிருந்து பின் வாங்கிய தலையை திரும்ப முன்னே கொண்டு வரவும்.நன்றி!)

Next Page> http://venkatramvasi.blogspot.in/2011/01/4.html

எனது அமெரிக்கப் பயணம்-ட்ராயில் தங்கியிருந்த போது... பகுதி 2


8.15 மணிக்கு வந்த வண்டியை ஓட்டிச்சென்றவர் நம் கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏர்ப்போர்ட் போகும் போது பின்னர் கிடைத்தது.

  அன்று அலுவலக வேலைச் சந்திப்பு நாள் முழுதும் நடந்தது. காலை நேர இடைவேளையின் போது பனி விழுந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். வெயில் வெளிச்சத்தில் பனி விழுவது அழகாக இருந்தது. படங்களில் நாம் ஸ்லோ மோஷன் காட்சி பார்த்து ரசிக்கிறோம். பனி விழுவது இயற்கையின் ஸ்லோ மோஷன். இந்தக் காட்சியை நான் பார்த்து ரசித்தது சில நொடிகளே. பணியால் பனியை மேலும் ரசிக்க முடியவில்லை. மீண்டும் அலுவல் சந்திப்பு. சந்திப்பு மாலை முடியும் போது.. பனியும் முடிந்திருந்தது. ஹூம். வாழ்க்கையில் பல விசயங்கள் இப்படிக் கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கதையாய் இருக்கிறது.
     
  மாலை மீண்டும் ஹோட்டலில் இறக்கி விடப்பட்டேன். நாள் முழுதும் நடந்த சந்திப்பு என்னைச் சோர்வடையச் செய்திருந்தது.நான் தங்கியிருந்த ஹோட்டலில் மாலை 5.30 மணி-7 மணி வரை கிக் அவுட் என்று பெயரிடப்பட்ட சிற்றுண்டி நேரம். Mexican ஸ்நாக்ஸான Nachos (வத்தல் போல),தொட்டுக் கொள்ள சல்சா,யலபினொ ஊறுகாய்.இது தவிர நான் வெஜ் சாசேஜ்கள். 
    
  ஆர்வமில்லாமல் நாச்சோஸ் தின்று முடித்து..  ”அடுத்து என்ன பண்றது?..ஆள் தெரியாத ஊரில யாரையும் கடி போட முடியலையே!” என்று நினைக்கும் போது..மாநிற இந்திய இளைஞன் ஒருவனைப் பார்த்தேன். நிறமும் முக அமைப்பும் அவன் ஒரு காரைக்குடி கார்த்திகேயனாக இருப்பான் என்று நினைக்க வைத்தது. ஆனால் அவன் புனேயைச் சேர்ந்தவன் என்று விசாரித்த போது தெரிந்தது. நானும் அவனும் உடனடி நண்பர்களானோம்.எங்கள் நிலைமை எங்களைச் சந்தேகப்பட வாய்ப்பளிக்கவில்லை.எதிர்காலத்தில் மனிதர்கள் வேறு கிரகங்களுக்குப் போக ஆரம்பித்து..ஏலியன்களுடன் வர்த்தகம் செய்தால். தொலை தூரக் கிரகத்தில் சந்தித்துக் கொள்ளும் இரண்டு மனிதர்கள் நட்பாவார்கள், எந்த நாடு என்று பயப்படாமல்.
  
    இருவரும் சேர்ந்து ஹோட்டலின் ஷட்டில் வசதியைப் பயன்படுத்திச் சற்று தொலைவிருந்த ஒரு மாலுக்குச்(சாமர்செட் மால்) சென்றோம். டெம்போ ட்ராவலர் போன்ற வண்டி. இறக்கி விட்டு வண்டி சென்று விடும். நாம் கால் செய்தால், திரும்ப வந்து அழைத்துச் செல்கின்றனர்.இதன் பெயர் ஷட்டில். ஹோட்டலில் இருந்து 5 மைல் தொலைவிற்குள் இந்த வசதி ஃப்ரீ. கஸ்டமர்களுக்கு எப்படியெல்லாம் வசதி பண்ணலாமென்று ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ. (இருக்காது. அவர்கள் ஹோட்டல் ரூம்லயே யோசிச்சிருப்பாங்க!)

   
  மாலைச் சுற்றிப் பார்த்தபடி அரட்டையடித்துக் கொண்டு சென்றோம். புனே நண்பன் புலால் உண்ணாதவன். அவன் அமெரிக்காவிற்கு முதல் தடவை வந்திருக்கிறான். சார்ட்டட் அக்கௌண்டண்ட். திருமணமானவன். ஜெர்மன் கம்பெனியில் வேலை. புதிதாய் வரும் இந்தியர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி எங்கள் பேச்சு திரும்பியது.
  அவன் டாய்லெட்டைக் கேட்ட போது ரெஸ்ட் ரூமைக் காட்டியிருக்கிறார்கள். “No.No. I don't want to take rest" என்றானாம். பிறகு தன் தவறு புரிந்த போது சிரிப்பு வந்ததாம். நானும் என் பங்குக்கு கீழே உள்ள அமெரிக்க வித்தியாசங்களைச் சொன்னேன்.
->அமெரிக்காவில் க்ரவுண்ட் ஃப்ளோர் கிடையாது. மிதக்கும் வீடுகளைக் கற்பனை செய்ய வேண்டாம்.அது ஃபர்ஸ்ட் ஃப்ளோர் என்று அழைக்கப் படுகிறது.
-> லிஃப்ட் இங்கு எலிவேட்டர்.
-> சாலையில் வண்டிகள் வலது ஓரமாகச் செல்கின்றன(கீப் ரைட்).
-> சுவிட்சை மேலே அழுத்தினால் ஆன்.கீழே அழுத்தினால் ஆஃப்.  
-> டாக்ஸி இங்கு கேப் (Cab)
-> லாரி இங்கு ட்ரக்
  கீழே உள்ள வலை தளத்தில் அமெரிக்க பிரிட்டிஷ் கலாச்சார, மொழி (ஸ்பெல்லிங், உச்சரிப்பு, வார்த்தை) வித்தியாசங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
  மொழி மாறுபாடுகளால், சிலர் நெளிந்த சம்பவங்கள் கீழே...
  
   புனே நண்பனை அவன் காமெராவில் புகைப்படம் எடுத்தேன். ஒரு ட்ரிக் ஷாட்டில் மேலெ எட்டாத உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்த கிறிஸ்மஸ் அலங்காரத்தை அவன் பிடித்திருப்பது போல் நான் எடுத்த படம் அவனை ஆச்சரியப் படுத்தியது. நீங்க ஒரு இஞ்சினியர், அதனால நல்லா 
ஃபோட்டோ எடுக்கிறீங்க என்றான். 
    அவன் ஷூ வாங்க வேண்டுமென்று சொல்ல... பல ஷூக் கடைகளுக்கு நடந்தோம். நடந்து நடந்து.. அவன் போட்டிருந்த ஷூக்களும் என் செருப்புகளும் தேய்ந்தன.மாலில் இருந்து கிளம்பும் வரை அவன் ஷூ வாங்கவே இல்லை.

Next Page> http://venkatramvasi.blogspot.in/2011/01/3.html