Sunday, January 2, 2011

எனது அமெரிக்கப் பயணம்-ட்ராயில் தங்கியிருந்த போது... பகுதி 2


8.15 மணிக்கு வந்த வண்டியை ஓட்டிச்சென்றவர் நம் கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏர்ப்போர்ட் போகும் போது பின்னர் கிடைத்தது.

  அன்று அலுவலக வேலைச் சந்திப்பு நாள் முழுதும் நடந்தது. காலை நேர இடைவேளையின் போது பனி விழுந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். வெயில் வெளிச்சத்தில் பனி விழுவது அழகாக இருந்தது. படங்களில் நாம் ஸ்லோ மோஷன் காட்சி பார்த்து ரசிக்கிறோம். பனி விழுவது இயற்கையின் ஸ்லோ மோஷன். இந்தக் காட்சியை நான் பார்த்து ரசித்தது சில நொடிகளே. பணியால் பனியை மேலும் ரசிக்க முடியவில்லை. மீண்டும் அலுவல் சந்திப்பு. சந்திப்பு மாலை முடியும் போது.. பனியும் முடிந்திருந்தது. ஹூம். வாழ்க்கையில் பல விசயங்கள் இப்படிக் கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கதையாய் இருக்கிறது.
     
  மாலை மீண்டும் ஹோட்டலில் இறக்கி விடப்பட்டேன். நாள் முழுதும் நடந்த சந்திப்பு என்னைச் சோர்வடையச் செய்திருந்தது.நான் தங்கியிருந்த ஹோட்டலில் மாலை 5.30 மணி-7 மணி வரை கிக் அவுட் என்று பெயரிடப்பட்ட சிற்றுண்டி நேரம். Mexican ஸ்நாக்ஸான Nachos (வத்தல் போல),தொட்டுக் கொள்ள சல்சா,யலபினொ ஊறுகாய்.இது தவிர நான் வெஜ் சாசேஜ்கள். 
    
  ஆர்வமில்லாமல் நாச்சோஸ் தின்று முடித்து..  ”அடுத்து என்ன பண்றது?..ஆள் தெரியாத ஊரில யாரையும் கடி போட முடியலையே!” என்று நினைக்கும் போது..மாநிற இந்திய இளைஞன் ஒருவனைப் பார்த்தேன். நிறமும் முக அமைப்பும் அவன் ஒரு காரைக்குடி கார்த்திகேயனாக இருப்பான் என்று நினைக்க வைத்தது. ஆனால் அவன் புனேயைச் சேர்ந்தவன் என்று விசாரித்த போது தெரிந்தது. நானும் அவனும் உடனடி நண்பர்களானோம்.எங்கள் நிலைமை எங்களைச் சந்தேகப்பட வாய்ப்பளிக்கவில்லை.எதிர்காலத்தில் மனிதர்கள் வேறு கிரகங்களுக்குப் போக ஆரம்பித்து..ஏலியன்களுடன் வர்த்தகம் செய்தால். தொலை தூரக் கிரகத்தில் சந்தித்துக் கொள்ளும் இரண்டு மனிதர்கள் நட்பாவார்கள், எந்த நாடு என்று பயப்படாமல்.
  
    இருவரும் சேர்ந்து ஹோட்டலின் ஷட்டில் வசதியைப் பயன்படுத்திச் சற்று தொலைவிருந்த ஒரு மாலுக்குச்(சாமர்செட் மால்) சென்றோம். டெம்போ ட்ராவலர் போன்ற வண்டி. இறக்கி விட்டு வண்டி சென்று விடும். நாம் கால் செய்தால், திரும்ப வந்து அழைத்துச் செல்கின்றனர்.இதன் பெயர் ஷட்டில். ஹோட்டலில் இருந்து 5 மைல் தொலைவிற்குள் இந்த வசதி ஃப்ரீ. கஸ்டமர்களுக்கு எப்படியெல்லாம் வசதி பண்ணலாமென்று ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ. (இருக்காது. அவர்கள் ஹோட்டல் ரூம்லயே யோசிச்சிருப்பாங்க!)

   
  மாலைச் சுற்றிப் பார்த்தபடி அரட்டையடித்துக் கொண்டு சென்றோம். புனே நண்பன் புலால் உண்ணாதவன். அவன் அமெரிக்காவிற்கு முதல் தடவை வந்திருக்கிறான். சார்ட்டட் அக்கௌண்டண்ட். திருமணமானவன். ஜெர்மன் கம்பெனியில் வேலை. புதிதாய் வரும் இந்தியர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி எங்கள் பேச்சு திரும்பியது.
  அவன் டாய்லெட்டைக் கேட்ட போது ரெஸ்ட் ரூமைக் காட்டியிருக்கிறார்கள். “No.No. I don't want to take rest" என்றானாம். பிறகு தன் தவறு புரிந்த போது சிரிப்பு வந்ததாம். நானும் என் பங்குக்கு கீழே உள்ள அமெரிக்க வித்தியாசங்களைச் சொன்னேன்.
->அமெரிக்காவில் க்ரவுண்ட் ஃப்ளோர் கிடையாது. மிதக்கும் வீடுகளைக் கற்பனை செய்ய வேண்டாம்.அது ஃபர்ஸ்ட் ஃப்ளோர் என்று அழைக்கப் படுகிறது.
-> லிஃப்ட் இங்கு எலிவேட்டர்.
-> சாலையில் வண்டிகள் வலது ஓரமாகச் செல்கின்றன(கீப் ரைட்).
-> சுவிட்சை மேலே அழுத்தினால் ஆன்.கீழே அழுத்தினால் ஆஃப்.  
-> டாக்ஸி இங்கு கேப் (Cab)
-> லாரி இங்கு ட்ரக்
  கீழே உள்ள வலை தளத்தில் அமெரிக்க பிரிட்டிஷ் கலாச்சார, மொழி (ஸ்பெல்லிங், உச்சரிப்பு, வார்த்தை) வித்தியாசங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
  மொழி மாறுபாடுகளால், சிலர் நெளிந்த சம்பவங்கள் கீழே...
  
   புனே நண்பனை அவன் காமெராவில் புகைப்படம் எடுத்தேன். ஒரு ட்ரிக் ஷாட்டில் மேலெ எட்டாத உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்த கிறிஸ்மஸ் அலங்காரத்தை அவன் பிடித்திருப்பது போல் நான் எடுத்த படம் அவனை ஆச்சரியப் படுத்தியது. நீங்க ஒரு இஞ்சினியர், அதனால நல்லா 
ஃபோட்டோ எடுக்கிறீங்க என்றான். 
    அவன் ஷூ வாங்க வேண்டுமென்று சொல்ல... பல ஷூக் கடைகளுக்கு நடந்தோம். நடந்து நடந்து.. அவன் போட்டிருந்த ஷூக்களும் என் செருப்புகளும் தேய்ந்தன.மாலில் இருந்து கிளம்பும் வரை அவன் ஷூ வாங்கவே இல்லை.

Next Page> http://venkatramvasi.blogspot.in/2011/01/3.html

2 comments:

 1. வாசி
  வலைபூல் பின்னி பெடல் எடுகிரிங்க...
  கலக்கல்... கல்லுரி நாட்கள் நினைவு வருகிறது...
  செல்வா

  ReplyDelete
 2. நன்றி,செல்வா!

  ReplyDelete