Wednesday, January 12, 2011

எனது அமெரிக்கப் பயணம்-டெட்ராய்ட்டிலிருந்து டல்லாஸிற்கு - பகுதி 2


டெட்ராய்ட் விமான நிலையத்திலெடுத்த புகைப்படங்கள்

விமானம் கிளம்பத் தயாரானது. ‘On your march' . ரன்வேயில் கபில்தேவ் போல ஓடி ஜிவ்வென்று மேலே எழும்பிய போது ‘ ரெக்க கட்டிப் பறக்குதடா அமெரிக்கன் ஏர்லைன்சுப் பிளேனு’ என்று பாடத் தோன்றியது. 
சற்று உயரம் போனதும், கீழே பார்த்தால், மேகங்கள்,மேகங்கள்... வானம் முழுதும் மேகங்கள். நான் முன்பு எழுதிய கவிதை வரிகள் ஞாபகம் வந்தது. (ஞாபகம்லாம் வந்திருக்காது.புருடா(எந்த மொழி வார்த்தை?).கவிதைத் திணிப்பு! ) “பஞ்சு முகில்கள், மஞ்சம் இடுங்கள், நான் கெஞ்சும் தூக்கம் கொடுங்கள்”. எவ்வளவோ வசதிகளைப் பூமியில் செய்து தந்த இறைவன் மேகங்களில் குதித்து விளையாட முடியாமல் படைத்து விட்டாரே. அப்புறம் Cloud Computing அர்த்தம் மாறி விடும். 
  

Wi-fi on board என்றது ஒரு ஸ்டிக்கர். ஆனால் மொபைலில் இண்டெர்நெட் வேலை செய்யவில்லை. வயர்லெஸ் கனெக்சன் வேலை செய்யாத்தால வயர் போட்டு எனக்குக் கனெக்சன் கொடுங்க என்று கேட்டு அடம் பிடித்திருக்க வேண்டும். 
  வெள்ளைக் காரர்கள் எல்லாரும் நாம் ஹாலிவுட் படங்களில் பார்க்கும் ஆட்கள் போல் இருப்பதில்லை. அவர்கள் வெள்ளை முகங்களில் நமக்குத் தெரிந்த பூ விற்கும் குருவம்மா, வாட்ச்மேன் முனுசாமி, ராமநாதன் வாத்தியார், விமலா டாக்டர் ஆகியவர்களின் சாயலும் தெரிகிறது. அமெரிக்கர்கள் நிற வித்தியாசம் இல்லாமல் கறுப்பு உடைப் பிரியர்களாய் இருக்கிறார்கள்.
 விமானத்தில் என் முன்சீட்டின் பின்னே, என் முன்னே இருந்த ஒரு ஃப்ரீ மேகஜினில் (இப்போது அது என் வீட்டில்) பல விற்பனைப் பொருட்களின் விவரங்கள் தமாசாகவும்,கொஞ்சம் ஓவராகவும் இருந்தன. 
ஒன்று நாயைக் குறிப்பிட்ட இடத்தில் மூச்சா போக வைக்குமாம். 
ஒன்று நல்ல தூரத்தில் இருப்பவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்க உதவுமாம். 

   தள்ளு வண்டியில் திங்க/குடிக்க எடுத்து வந்தார்கள். என்னிடம் என்ன வேண்டுமென்று கேட்க, நான் ’நாம ஏதாவது சொல்ல, முதல்ல பில்ல நீட்டிட்டு அப்புறம் பொருள நீட்டுவாளோ’ என்று பயந்த படி, ‘ஆப்பிள் ஜூஸ்’ என்றேன். அதில் ‘ஜூஸ்’ எனக்கே கேட்கவில்லை. அவள் கொடுத்த முகபாவனையைக் கொண்டு வர வேண்டுமென்றால், சென்னை மளிகைக் கடை ஒன்றில் போய் ‘யானை இருக்கா?’ என்று கேட்க வேண்டும். 
பக்கத்து ஆசாமி எடுத்துச் சொல்ல, ஆப்பிள் ஜூஸ் கிடைத்தது பில் இல்லாமலேயே.ஜூஸ் குடித்த படி பக்கத்து ஆசாமி என்ன புத்தகம் படிக்கிறார் என்று பார்த்தேன். Brad Thor எழுதிய Athena project என்ற கதை. அது ஒரு த்ரில்லர் என்று இதை எழுதுவதற்கு முன்னர் கூகுல் மூலம் தெரிந்து கொண்டேன்.   

  நான் பிளேனில் ஏறுவதற்காக ஏர்ப்போர்ட்டில் காத்திருந்த போது ஒரு பெரிய கருப்பன்(நம்ம வச்ச காரணப் பெயர்) புத்தகம் ஒன்றை மும்மரமாகப் படித்துக் கொண்டிருந்தான். பின்னால் போயிருந்த போது கடைசி வரிசையில் பெரிய கருப்பனைப் பார்த்தேன். அப்படி என்ன படிக்கிறானென்று பார்த்தேன். அந்தப் பக்கத்தில் போட்டிருந்த ஒரு தலைப்பு ‘Ignorant shit'. 

   காத்து வண்டி இறங்கப் போவதாக அறிவித்தார் பைலட் அழகான உச்சரிப்பில், தெளிவான நடையில்.
தரை இறங்கக் கீழே இறங்கிக் கொண்டிருக்கும் போது.. கீழே தெரிந்த காட்சி ஏற்கனவே பார்த்த மாதிரி இருந்தது. அது கூகுல் மேப்ஸ் சாட்டிலைட் வியூ.
சில சமயம் இயற்கையைப் பார்க்கும் போது செயற்கை போல் தெரிகிறது.
  
பிளேனின் டயர்கள் தரையைத் தொட்டது கூடத் தெரியவில்லை. பைலட் சின்ன வயதில் பேப்பர் பிளேன் விட்டு ரொம்ப விளையாடியிருப்பார் போல. 
மீண்டும் டல்லாஸ் விமான நிலையம். விமான நிலையத்தில் Wi-fi  வசதி இருந்தது.ஆனால் ப்ரௌஸ் பண்ணினால் தொங்கி வழிந்தது. 
Blue tooth வசதியைப் பயன்படுத்தி, விமான நிலையக் கம்ப்யூட்டரிடமிருந்து ஒரு ஃபைலை வாங்கினேன். 3 விளம்பரங்கள் திரும்பத் திரும்ப ஓடி ஏளனம் செய்தன. 

Next Page> http://venkatramvasi.blogspot.in/2011/01/blog-post_15.html

1 comment:

  1. அவள் கொடுத்த முகபாவனையைக் கொண்டு வர வேண்டுமென்றால், சென்னை மளிகைக் கடை ஒன்றில் போய் ‘யானை இருக்கா?’ என்று கேட்க வேண்டும்.

    பயனகுரிப்பை, நகைச்சுவை ததும்ப சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் ..

    http://sathivenkat.blogspot.in/2012/02/blog-post.html

    ReplyDelete