ஒரு ஆட்டோவின் பின் புறம் எழுதியிருந்த பெயர்ஸ்ரீகருப்பாயி
இந்தப் பெயர் என்னைக் கவர்ந்ததின் காரணம், இது கிராமமும் நகர நாகரீகமும் கலந்த கலவை போன்ற பெயர்.
இன்னொரு ஆட்டோவின் பின்புறம் பார்த்த வாசகம்.
காந்தி நாட்டுக்குப் பாடு பட்டார்
நாம் காந்தி நோட்டுக்குப் பாடுபடுகிறோம்
ஹெல்மெட் போட்டவர்
காலை நேரம் அண்ணா நகர் சாலை ஒன்றில், நல்ல போக்குவரத்து நேரத்தில், ஒரு ஹெல்மெட் சாலை நடுவே கிடந்தது. நான் என் ஆட்டோ ஓட்டுநரிடம் சொன்னேன் 'ஹெல்மெட் போடுங்கன்னு சொன்னத யாரோ தப்பாப் புரிஞ்சிக்கிட்டாங்க போலிருக்கு. ஒருத்தர் ஹெல்மெட் போட்டதால, இந்தப் பக்கமா ஹெல்மெட் போடாமப் போகும் பலருக்கு ஆபத்து.'
சிறுமியும் கொண்டைக்காரரும்...
அந்த ஷேர் ஆட்டோவில் நான் முதலில் ஏறிப் பின்சீட்டில் உட்கார்ந்தேன். ஆட்டோ பக்கத்தில் நின்றிருந்த,கருப்பு நிற மனிதரின் ஜீன்ஸ், லேப்டாப் பேக் இவைகளைவிட அவரின் குடுமி என்னை அவரைக் கவனிக்க வைத்தது. பத்தாம் வகுப்பு தமிழையா சொன்ன ' மயிருள்ள மகராசி அவுத்தும் விட்டுக்குவா அள்ளியும் முடிஞ்சுக்குவா' ஞாபகம் வந்தது.ஆனால் ஒரு மாற்றம்,இவர் மகராசன்!
அவரின் குடுமி சிறியது அல்ல. பாதி மண்டை வெல்லம் அளவு இருந்தது. மூக்குத்தியும் தோடும் போடாமல் கொண்டை போட்ட ஒரு தெக்கத்திப்பெண்ணின் முகம் போல் இருந்தது அவரது முகம். அது அவரின் தன்னம்பிக்கையையும் தனித்துவத்தையும் காட்டியது. அவரும் இப்போது ஷேர் ஆட்டோவில் ஏறி விட்டார். இப்படித் தனித்துவம் கொண்டவர்கள் மற்றவர்களுக்குச் சந்தோஷத்தை,உற்சாகத்தை அளிக்கிறார்கள்.
இப்போது ஒரு பெண் தன் சிறு மகளுடன் ஏறினாள். அவர்கள் சென்னையைச் சொந்த ஊராகக் கொண்டவர்கள் என்பது அவர்கள் சொல்லாமலேயே தெரிந்தது. அந்தச் சிறுமி எல்கேஜி கூடச்சேர்ந்திருப்பாளா என்பது சந்தேகம் தான்.அவ்வளவு சிறுமி. அவளின் பாப் கட் ஒரு கவிதை. முடி வெட்டியவரைப் பாராட்டத் தோன்றியது. அந்தச் சிறுமி மெல்லத் திரும்பி என்னைப் பார்த்தாள். அவள் கண்கள் துறுதுறுவென்றிருந்தன. அவை அவளுக்குக் குசும்பு அதிகம் என்று காட்டின. என் வாழ்க்கையில் ஒரு சிறுமியைப் பார்த்து நான் பயந்ததில்லை. அன்று பயந்தேன். அவளுக்கு என்ன தோன்றுகிறதோ அதைப் பட்டென்று கேட்டு விடுவாள் என்று தெளிவாகத் தெரிந்தது. முன்பு பார்த்த கல்லூரிப் பணி இந்த அறிவைக் கொடுத்திருந்தது. நமக்கேன் வம்பு என்று நான் பார்வையைத் திருப்பிக் கொண்டேன்.
மற்ற ஆட்களும் ஏறினார்கள். வண்டி கிளம்பிவிட்டது.
நான் அந்தச் சிறுமியை மரியாதையோடும் அன்போடும் பார்த்துக் கொண்டிருந்தேன். சிக்னலில் வண்டி நின்றபோது அந்தச் சிறுமி டிரைவரிடம் சொன்னாள் 'ஏன் வண்டி நிக்குது.வேகமாப் போங்க'. இதை மழலையில் மாற்றிக்கொள்ளுங்கள். பயணிகளிடம் உதார்விட்டுக் கொண்டிருந்த அந்த டிரைவரே நெளியும்படி நேர்ந்தது.
அந்தச் சிறுமி பற்றிய எனது கணிப்பு சரியாகிக் கொண்டிருந்தது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
வண்டி சிக்னலில் இருந்து மீண்டு,மீண்டும் ஓடத் தொடங்கியது. இப்போது அந்தச் சிறுமியின் பார்வை அவளுக்கு வலது புறத்தில் இருந்த குடுமி அங்கிள் மேல் விழுந்தது. அடுத்து நடக்குப் போகும் கூத்து என் ஞான திருஷ்டிக்குத் தெரிந்து என்னைச் சீட்டின் நுனிக்குக் கொண்டு வந்தது.
சிறுமி குடுமி அங்கிளின் முகத்தைப் பார்த்தாள். பின் முகத்திற்குச் சற்று பின்னே இருந்த குடுமியைப் பார்த்தாள்.ஏற்கனவே பலரால் பார்க்கப்பட்ட குடுமி சிறுமியாலும் பார்க்கப்பட்டது. இரண்டு முறை மாறி மாறிப் பார்த்து விட்டுச் சிறுமி குடுமி அங்கிளிடம் கேட்டே விட்டாள். 'நீங்க ஏன் குடுமி வச்சிருக்கிங்க?நீங்க ஆம்பள தான!'.
அடப்போங்கய்யா! இதுக்கு மேல என்னால ஃபார்மலாகச் சொல்ல முடியல.எனக்குச் சிரிப்பு பொத்துக்கிட்டு வந்துச்சு.இதத் தான எதிர்பாத்தேன்.
'நீங்க ஏன் கொண்ட போட்ருக்கீங்க' அப்டினு கேப்பான்னு நெனச்சேன். ஆனா அவ துல்லியமா குடுமின்னு கேட்டதும் அடேங்கப்பான்னு ஆச்சரியப்பட்டேன். சிரிக்கிறது ஈசி.சிரிப்ப அடக்கிறது ரொம்ப ரொம்பக் கஷ்டம். நான் சிரிச்சு குடுமிக்காரர நோகடிக்க விரும்பல. சிரிப்ப அடக்க வாட்சப் பாக்கிற மாதிரி நடிச்சேன்.கண்ண மூடிக்கிட்டு தூங்கிற மாதிரி நடிச்சேன். குடுமிக்காரர் ப்ரஸ் கான்ஃபரன்ஸில் நிருபர் கேள்விக்கு மினிஸ்டர் பதில் சொல்ற மாதிரி அந்தப் பிள்ள கிட்டச் சொன்னது, 'எனக்கு முடி இருக்கு வச்சிருக்கேன்'.கேள்விக்கு வந்த சிரிப்பை அடக்கச் சிரமப்பட்டதை விட, அந்த பதிலுக்கு வந்த சிரிப்பை அடக்க, அதிகமாகச் சிரமப்பட்டேன்.
அன்றைய தினம் குடுமிக்காரராலும் சிறுமியாலும் கலகலப்பாக ஆனது. |
|
|
|
|
|
|
Very Nice! I specially liked "காந்தி நாட்டுக்குப் பாடு பட்டார்
ReplyDeleteநாம் காந்தி நோட்டுக்குப் பாடுபடுகிறோம்" :) Keep writing more and more, Ji!
வாசி சார் இலை மறை காயாக வெளிப்படுத்திய விஷயங்கள் எத்தனை பேருக்கு புரிந்தது என்று தெரியவில்லை. நான் கவனித்தது மேலும் பாராட்டுவது
ReplyDelete1 . "சிறுமி" எழுத்து அளவு எவ்வளவு குறைத்திருக்கிறார் பாருங்கள். அந்த அளவுக்கு சிறுமியாம்.
2 . அவர் முன்பே நினைத்த பழமொழியை ('மயிருள்ள மகராசி அவுத்தும் விட்டுக்குவா அள்ளியும் முடிஞ்சுக்குவா') அப்படியே கொண்டைகாரர் எதிரொலித்ததது.
நன்றி கல்யாணகுமார், இந்தப் பாராட்டுகளுக்கு! இவை மேலும் நுணுக்கமாக எழுதத் தூண்டுகின்றன.
ReplyDeleteவாசி சார் அருமை. நூற்றுக்கு நூறு உண்மை. உங்கள் அழகான தமிழ் நடைக்கு ஒரு சலாம்
ReplyDeleteநன்றி. சந்திரா !!
Delete