Sunday, January 2, 2011

எனது அமெரிக்கப் பயணம்-ட்ராயில் தங்கியிருந்த போது... பகுதி 1


இந்தத் தொடரின் இப்பகுதி  மறைந்த எனது இயற்பியல் ஆசிரியர் திரு.தியாகராஜன் அவர்களுக்குச் சமர்ப்பணம்.


1) நள்ளிரவு நேரம் நான்

டெட்ராய்ட் ஏர்ப்போர்டில் இறங்கி,பேக்கேஜ் க்ளைம் பகுதிக்குச் சென்றேன். அங்கு என் பெயரைத் தப்பாக எழுதியிருந்த ஒரு ப்ளாகார்டை வைத்த படி ஒருவர் காத்துக் கொண்டிருந்தார். காரில் சென்று கொண்டிருந்த போது இந்தியாவில் எந்தப் பகுதியில் இருந்து வந்தவர் என விசாரித்தேன். அவர் தன் தாய் நாடு பங்களாதேஷ் என்றார்.வயது 50ஐ ஒட்டி இருக்கும். பிள்ளைகள் கல்லூரிப் படிப்பு படிக்கிறார்கள்.தாய் நாட்டுக்குத் திரும்பும் ஆசையிருந்தாலும், இனிப்போக முடியாது என்றார்.இங்கு குடிபெயர்ந்த பலர் இதே போல் சொல்வார்களே என்று தோன்றியது.
2) நான் தங்க வேண்டிய ஹோட்டலில் 
இறக்கி விடப்பட்டேன்.ரிசப்சனில் சாவி வாங்கும் போது,ஹோட்டல் பாருக்கான ட்ரிங்க்ஸ் அட்டை கொடுத்தாள்.மொட்டைத் தலையனுக்குச் சீப்பா? என் அறையில் பெட்டிகளை வைத்து விட்டு, பசியில் வயிறு தூங்காது என்று தெரிந்து...ரிசப்சனில் ஃபோனில் கேட்டேன் சாப்பாடு எங்கு கிடைக்குமென்று.பக்கத்துக் கடை 1 மணி வரை இருக்குமென்றாள்.பக்கத்துக் கடைக்குச் செல்ல ஹோட்டலின் வெளியே வந்து, கடுங்குளிரில் கால்கள் நடனமாடுவது எந்தப் பாட்டுக்கு என்று தெரியாமல், நடுங்கியபடி சற்றுத் தொலைவில் இருந்த ஒரு கதவு வழியாக நுழைந்து அந்தக் கடையில்(?) இடது வலது என்று திரும்பி,ரிசப்சன் போலிருந்த இடத்திற்கு வந்தால்...அந்த இடம் ஏற்கனவே பார்த்தது போலவே இருந்தது.இது Deja vu அனுபவம் என்று தோன்றுவதற்கு முன் நான் மீண்டும் எனது ஹோட்டல் ரிசப்சனுக்கே வந்திருக்கிறேனென்று தெரிந்தது.


3) திரும்பவும் ரிசப்சனிஷ்டிடம்
 போய்க் கேட்க சங்கடமாயிருந்தது. ஹோட்டலிருந்து பக்கத்துக் கடைக்கு ஒரு வழியிருப்பதாய் அவள் சொன்னது ஞாபகம் வந்து ஒரு வழியாய் அந்தக் கடைக்குப் போய்ச் சேர்ந்தேன்.அது ஒரு பார்.கண்ணைப் பறிக்கும் வண்ண
ஒளி விளக்குகளும், இசை ஓசையும்,நான் ஏற்கனவே அமெரிக்காவில் பார்த்திருக்கிற பார்களின் பார் ஸ்டேண்டர்ட் படி இருந்தது.

4) கடைப்பணிப்பெண் ஒருத்தி தான் மேரி என்றும்
 கூடப் பணியில் இருக்கும் ஆண் ஜெய்சன் என்றும் அறிமுகம் செய்து கொண்டாள்.நம்மூரில் ஒரு டீக்கடைக்குள் நுழைந்தவுடன் மாஸ்டர் “ஞான் மாதவன் இவன் மாரிமுத்து” என்று அறிமுகம் செய்து கொண்டால் எப்படி
இருக்குமென்று இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது. குடிக்கக் கோக்கும்,சாப்பிட வெஜ் பர்கரும் கேட்டேன். கோக் உடனே வந்தது.பர்கர் சிறிது தாமதம் ஆனது. மேரியிடம் நான் 26 மணி நேரம் பயணம்
செய்து வந்திருக்கிறேன் என்றேன். “You must be starving" என்றாள் (கற்பூர புத்தி).சீக்கிரம் வந்து சேர்ந்த பர்கர்களை நான் சீக்கிரமே தின்று முடித்தேன். 

5) என் மொபைல் ஃபோனில் 
அலாரம் வைத்தேன்.அதன் அலார இசையில் நான் இன்னும் ஆழ் தூக்கத்திற்குப் போக வாய்ப்பிருப்பதால்,ஹோட்டலில் உள்ள மேஜைக் கடிகாரத்தில் சிறிது முயற்சிக்குப் பின், அதிலும் அலாரம்
வைத்தேன்.அதில் இருட்டில் நேரம் பார்க்க வசதியாக  பின் ஒளியும்,மேலும் Jazz,Classical,Pop என F.M ரேடியோக்களுக்கான வசதியும் இருந்தன.காலை அலாரங்கள் அடிக்குமுன்னே முழித்து விட்டதில் நான் வருத்தப்படவில்லை. நான்கு மணி நேரத்தூக்கம் களைப்பைப் போக்கியிருந்தது.

6) என்னைப் பிக் அப் செய்ய 
வண்டி 8.15 மணிக்கு வரும். ஒரு வழியாகக் கிளம்பி, அவசர கதியில் காம்ப்ளிமெண்டரி  காலை உணவைச் சாப்பிட்டு 8.15க்கு ஹோட்டலை விட்டு வெளியில் வந்தேன்,அங்கு வண்டி காத்திருந்தது.  

Next Page> http://venkatramvasi.blogspot.in/2011/01/2_02.html

2 comments: