அன்று இரவு நான் வழக்கமான கடையில் சாப்பிடவில்லை.அதற்குள் அது சலித்துவிட்டது. ஹோட்டலின் அருகில் வேறு ஏதாவது கடை இருக்கிறதா என்று நம்பிக்கையின்றித் தேடினேன்.நல்ல வேளை, என் அதிர்ஷ்டம் ... இருந்தது. அதுவும் பெரிதாக இருந்தது. அதில் பெரிது பெரிதாகப் பல டி.விக்கள் சுவர்களில் அங்கங்கே இருந்தன.
ஒரு டி.வியில் பேஸ் பால் விளையாட்டும்,இன்னொன்றில் ரக்பியும் லைவாக ஓடிக் கொண்டிருந்தன. ரக்பியில் மலை போன்ற ஆட்கள் ஒரு பந்திற்காக முட்டி மோதிக் கொள்வதைப் பார்க்கும் போது, ஐயோ பாவம், ஒரு பந்திற்காக இத்தனை அடிதடியா,பேசாம ஆளுக்கொன்னு வாங்கிக் கொடுத்து விடலாம் என்று தோன்றியது. அந்த விளையாட்டுகளால் கவரப்படாமல் நான் ரிஷி போல் அமர்ந்திருந்தேன்,Odd man out. இதை ‘Ignorance is bliss' என்றும் அழைக்கலாம்.
இந்தியாவே பைத்தியமாய்க் கொண்டாடும் கிரிக்கெட்டையே நாம
சீண்டுறதில்ல.இது தெரியாம,ஒரு நா ஆபிஸ் நேரத்தில, கூட வேல பாக்குற பையன் வேகமா ஓடி வந்து, மூச்சிரைக்க, ‘சார்! ஸ்கோர் என்ன’னு கேட்டான். நான் இரக்கமில்லாம, ‘யாரும் யாரும் விளயாட்றாங்க’னு தெரிஞ்சுக்கலாமேன்னு ஆர்வத்தில அவன் கிட்டயே கேட்டேன்.
அவன் அழாத குறையா ஆயிட்டான்.அவன் என்னை நாடு கடத்த முயற்சி பண்ணான்னு தெரியல.
நான் வழக்கமாகச்(?!) சாப்பிட்டுக் கொண்டிருந்த கடையில் முதல் நாள் மட்டும் தான் வெஜ் பர்கர் கிடைத்தது. அதனால் தான் கடை மாறினேன். இந்தக் கடையில் வெஜ் பர்கர் என்று தயங்கிய படி கேட்டேன், எங்கே வடிவேலு போல தலையைத் திருப்பி ‘ந்ந்நோ’ சொல்லி விடுவானோ என்று பயந்த படி. ஆனால் இங்கு ‘என்ன மாதிரி வேண்டும்’ என்று பதில் கேள்வி வந்தது. பசியில் கர்புர் என்ற வயிற்றை அந்த பர்கர் அடக்கியது.
குளிரில் நடை போட்டு ஹோட்டலை நெருங்கிய போது, பில் வாங்கிக் கொள்ளாதது ஞாபகம் வந்து ஓடிப் போய்ப் காத்திருந்து பில் வாங்கி வந்தேன். நான் பர்கர் சாப்பிடும் போஸில் எடுத்த புகைப்படத்தை வைத்து ஆபிஸில் ஃபினான்ஸ் பில் செட்டில்மெண்ட் பண்ண முடியாதே!
2 மணி நேரத்தூக்கத்தில் எழுந்து விட்டேன். இன்று ஊருக்குக் கிளம்ப வேண்டிய நாள். ஆறு மணிக்கு ஹோட்டலை விட்டு வெளியே வந்தேன். வெள்ளைக்காரர்கள் அதிகம் வாழும் தேசம் வெள்ளை தேசமாக ஆகியிருந்தது. இரவு முழுதும் பனி பெய்திருக்கிறது.’நம்ம கிட்ட சொல்லவேயில்லயே!’ ஒரு வண்டி பனியை அகற்றிக்கொண்டிருந்தது.அந்த வண்டிக்காரருக்கு எப்போதும் பனி நேரத்தில் பணி, சில் நேரம் பணி நேரத்தில் பனி.முந்தைய இரவு பனி விழும் இரவாய் இருந்திருக்கிறது. ஆனால் நனைந்தது நிலவு இல்லை,பூமி. மொபைல் கேமராவால் கிச்சுக் கிச்சுக் என்று படம் எடுத்தேன்,விரும்பிய திசைகளில். தரையில் வெண்பனிப் படலத்தில் என் பெயரை எழுதிப் படம் எடுத்தேன். பேராசை இல்லாவிட்டாலும் எனக்குப் பெயராசை உண்டு.
சாப்பிட்டு விட்டுக் பயணப் பெட்டிகளைத் தயாராக்கி வெளியே வந்தேன். வண்டி தயாராகக் காத்திருந்தது.காலந்தவறாமை அமெரிக்காவில் குடிபெயரும் இந்தியர்களுக்கும் ஒட்டிக் கொள்கிறது.முன்பு குறிப்பிட்ட கேரளா நண்பர் தான் வந்திருந்தார். அவரிடம் நான் மலையாளம் வாசிப்பேன்,புரியவும் செய்வேன் என்று சொன்னபோது, பேசுவீர்களா என்றார். 'வச்சுட்டாருடா ஆப்பு!'.கொறச்சு அறியுமேன்றேன். வாசிக்கு வாசிக்கத் தெரியும் என்பதால் அவர் வண்டியை ஓட்டிக்கொண்டே எழுதிக்காண்பிக்க முடியாதே!
கேரளா நண்பர் சொந்த வாடகைக் கார் கம்பெனி நடத்துகிறார். அவரும் வண்டி ஓட்டுகிறார். அமெரிக்கா வந்து 30 வருடங்கள் ஆகிவிட்டதாம்.அவரின் கேரள ஆங்கிலத்தில் கொஞ்சம் அமெரிக்கன் ஆங்கில பாணிப் பேச்சு கலந்திருந்தது வித்தியாசமாக இருந்தாலும் எனக்குப் பிடித்திருந்தது.அவர் பேச்சில் அதிகமாக வாகனம் சார்ந்த உதாரணங்கள் வந்தன.பொதுவாக வாகனம் ஓட்டும் தொழிலில் இருப்பவர்களுக்குப் பொது விவரம் அதிகம்.உலகின் பல இடங்களிலும் நடப்பதைத் தெரிந்து கொள்ள World TV பார்ப்பதாய்ச் சொன்னார்.
இந்திய அமெரிக்க வாழ்க்கை முறைகளைப் பற்றிப் பேசிச் சென்றதில் சீக்கிரம் ஏர்ப்போர்ட் சென்று விட்டோம்.
Next Page> http://venkatramvasi.blogspot.in/2011/01/1_07.html
No comments:
Post a Comment