ஏர்ப்போர்ட்டில் செக் இன் லக்கேஜை கொடுக்குமிடத்தில் சேவையை இன்னும் ஆரம்பிக்கவில்லை. வேறு விமானத்தில் ஏறுபவர்களுக்கு அந்த சேவை கிடைத்தது. ஒரு பெண், விமான நிலைய அதிகாரியிடம் ‘How are you?’ என்று கேட்க, அவர் ’Crazy’ என்று பதிலலித்தார். சென்னையில் இந்தக் கேள்விக்கு கிரேசி மோகன் கூட இப்படிப் பதில் சொல்ல மாட்டார்.
எங்கள் விமானத்திற்கு செக் இன் லக்கேஜ் வாங்க ஆரம்பித்தார் ஒரு அம்மணி.வேறு ஒரு வெள்ளைக்காரக் குடும்பமும் நானும் மட்டும் தான் நின்றிருந்தோம். வெ.குடும்பம் நகர்ந்தவுடன் நான் என்று நினைத்துக் கொண்டிருக்கையில்...நான் நம்ம ஊர் போல் வரிசை முறையைக் கடைபிடிக்காமல் இருக்கிறேன் என்பதைக் கவனிக்கவில்லை. அம்மணி என்னிடம் ‘அந்த மஞ்சக் கோட்டுல போய் நில்லுங்க’ என்று ஒரு டீச்சரம்மா போல் சொல்ல நானும் மாணவன் போல் போய் நின்றேன். அமெரிக்காவில் 2 பேர் நின்றாலும் வரிசை வரிசை தான். நான் வீட்டில் என் இரு மகன்களிடம் ‘பசங்க எல்லாம் வரிசைல நில்லுங்க’ என்று விளையாட்டாகச் சொல்லுவேன்.இங்கு அது நடைமுறையில் உள்ளது.
இன்னும் ஒரு மணி நேரத்தை ஓட்ட வேண்டும். ஓரிடத்தில் ஒரு டீக்கடை சைஸ் இடத்தில் ஒருவர் பாப் பாடல் ஒலி கேட்டபடி (லேப் டாப்பில்), ஹை டெக்காக ஷூ பாலிஸ் போட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு காபிக் கடையைப் பார்த்தேன். பட்டியலில் காஃபி மோக்கா இருந்தது. வாங்கிக் குடித்தால் ஸ்டார் பக்ஸ் காஃபி மோக்கா மாதிரி இல்லை. ஏமாற்றத்தோடு, நன்கு கலக்கியபின் குடித்துப் பார்த்தேன்.நன்றாக இருப்பது மாதிரி இருந்தது. வேறு வழி!
விமான நிலையத்திலும் ஒரு T.G.I Friday's ரெஸ்டாரெண்ட் இருந்தது. என் ஹோட்டலின் பக்கத்துக் கடை.2 நாள் வாடகைக்குத் தங்கிட்டு இவ்வள்வு சொந்தம் கொண்டாடக் கூடாது.அந்தக் கடையின் உட்சுவற்றில் சில நல்ல வாசகங்கள் கொண்ட போஸ்டர் இருந்தது.எழுதிக் கொள்ள நினைத்தும், எழுதிக் கொள்ளாமல் விட்டிருந்தேன். அதே வாசகங்கள் இந்தக் கடையில் வெளிச் சுவற்றில் ஒட்டப் பட்டிருந்தன. இம்முறை எழுதிக் கொண்டேன். அமெரிக்கர்கள் வாழ்க்கைத் தத்துவத்தை சுருக்கமாகச் சொன்னது போல் அவையிருந்தன. அவை கீழே.
May we never be out of spirits.
To the good old days which you are having right now
Love to one, friendship to many and good will to all
I'm not afraid of tomorrow, for I have seen yesterday and I love today
You are not as young as you used to be but you are not as old as you are
டெர்மினலில் காத்திருந்த போது... சில புகைப்படங்களை எடுத்தேன். சிறிது நேரம் F.M radio மொபைலில் கேட்டேன். நான் ஹோட்டலில் இருந்த போது டி.வி பார்க்க முயன்று வெறுப்பில் அணைத்து விட்டேன். சுத்த ரம்பம். டி.வியை ஆன் பண்ணாமல் சும்மா பார்க்கக் கூட பிடித்திருந்தது. (அழகான L.C.D டி.வி.)என் அறையிலும் கிடைத்த நேரத்தில் F.M கேட்டேன். இசையாலும், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் குரலாலும் சொக்க வைக்கிறார்கள்.
விமானத்தில் ஏறும் போது பைலட்(?) ஒரு பயணியிடம் ‘How are you?' என்று கேட்டதற்கு வந்த பதில் ‘As decent as I am'. அதே கேள்விக்குப் பைலட் ‘Not bad' என்றார். ஒரு முறை நான் டாய்லெட்டில் ஒன்ஸ் போகும் போது, பக்கத்தில் ஒன்ஸ் போய்க் கொண்டிருந்த நண்பர் என்னைப் பார்த்து ‘எப்படி இருக்கிறீங்க?’ என்றார். நான் சிரித்துக் கொண்டே ‘இதக் கேக்கிறீங்களா’ என்றேன்.
விமானத்தில் எனக்கு ஜன்னலோர சீட். ’ஹையா ஜாலி!’. ஒரு அப்பாவி இந்தியன் வேடிக்கை பார்த்து விட்டுப் போகட்டும் என்று தொலை நோக்கோடு சீட் கொடுத்திருக்கிறார்கள்.
பஸ்ஸில் எப்போதுமே ஜன்னல் சீட் தான் எனக்குப் பிடிக்கும். முகத்தில் காற்று அடித்து, முடி கலைந்த படி போவது ஒரு தனி சுகம். சிறு வயதில் பஸ்ஸில் போகும் போது, முன்னால் உள்ள சில்வர் கம்பியை நான் பிடித்து இழுப்பதால் பஸ் வளைவில் கவிழாமல் காப்பாற்றப் படுவதாக நம்பியிருக்கிறேன். ஆனால் இந்த உண்மை எனக்கு மட்டும் தான் தெரியும். பாவம், மற்ற பயணிகளுக்குத் தெரியாது.
ஆனால் பிளேனில் மூஞ்சியில் காத்து அடிக்கனும்னு கேட்க முடியாது.வெளியில நிறையக் கிடைக்குமென்று சொல்லி, பிடித்துத் தள்ளி விட்டு விடுவார்கள்.
Next Page> http://venkatramvasi.blogspot.in/2011/01/1_11.html
|
window seat ah , window open paningala ? :) nice post sir !!
ReplyDeleteDeepak
When Windows 7 is running, one can open as many windows as one likes,but not even a single window in a flying plane
ReplyDelete