Saturday, February 11, 2012

சிறு கவிதைகள் - தொகுப்பு 24

பயங்கள்
சிறு வயதில்
பயமுறுத்திய
பிள்ளை பிடிக்கும்
பூச்சாண்டிகள்
காணாமல் போயினர்
வயதானதும்.

சாப்பிடாவிட்டால்
கண்ணில் மிளகா
வைக்கும்
மீசைக்காரத் தாத்தாவும்
காற்றோடு போய்விட்டார்
காலப்போக்கில். 

அவர்களிடமான
பயத்தை 
நிரப்பி விடுகிறோம்
அவரவர்க்குப் பிடித்த
பயங்களால்.

சோம்பலைச் சாம்பலாக்கு!
நீல வானத்தைச்
சுவராக்கி
ஊக்குவிக்கும்
வாசகச் சுவரொட்டிகளை,
நட்சத்திரங்களை
மறைக்காமல் ஒட்டலாம்.
பூமியின் தரைப்பரப்பில்
ஓர் இம்மி விடாமல்
படித்தவுடன்
நரம்பு முறுக்கேறும்
வரிகளை எழுதலாம்.
உலகக் கடல்களின்
மேலெல்லாம்
பொங்கியெழ வைக்கும்
உரைகளை நுரைகளால்
மிதக்க விடலாம்.
இத்தனை செய்யினும்
இன்னும் எத்தனை
செய்யினும்
உன் சோம்பலைச்
சாம்பலாக்கும்
எரிபொருள்
உன்னிடம் மட்டுமே!

வாழ்க்கையை
வீணாய்க் கழித்தால்
வயதானதும்,
உடல் உட்கார்ந்திருந்தாலும் 
மனசாட்சி விரட்டும்.
அவமானம் துரத்தும்.

உன்னைப் பார்த்து
எறும்புகள் சோர்ந்து 
விடலாமா?

இழுத்தால் இழுபடும்
வில்லாய் இருக்காதே!
சீறிப்பாயும் அம்பாய் இரு!

1 comment:

  1. BAYANGAL :) arputham sir...
    first one is sema than 2nd

    ReplyDelete