Thursday, April 19, 2012

சிறு கவிதைகள் -சுழற்சிகள்/மின்விசிறிகள்/தமிழ்/கூடா நட்பு/காப்பி/விட்ட குறை/பொய்க்காட்சி/ஆறறிவு

சுழற்சிகள்
மரங்களிலிருந்து
விதைகள் விழுந்து
விதைகளிலிருந்து
மரங்கள் வரும்.
கடல் நீர்
ஆவியாகி
மேகம் சேர்ந்து
மழையாய் மீண்டும்
கடல் சேரும்.
மனிதர் மறைந்து
மனிதர் விழுந்து
மனிதர் வளர்ந்து
மனிதர் மறைந்து...
இதுவும் சுழற்சி தான்.

மின்விசிறிகள்
ஒரே மாதிரியிருந்தாலும்,
மின்விசிறியின்
சத்தமும் காற்றும்
ஒரே போலிருப்பதில்லை.
திரையரங்கில்.
தேர்வெழுதும் நேரத்தில்.
அரசாங்க அலுவலகத்தில்.
கோயிலில்.
மருத்துவரின் அறையில்.
இந்தக் கவிதையெழுதும்
நேரத்திலும்.

தமிழ் அழியாது!
 உலகின்
கடைசித் தமிழன்
ஆங்கிலத்தில்
நினைக்கத்
தொடங்கும் வரை.

விட்ட குறை
முடிக்கப் படாமல்
இடையில் விடப்பட்ட
நாட்குறிப்பு சொன்னது.
"என்னை எழுதி
வீணானதை விட
எழுதாமல் வீணான
நேரம் அதிகம்."

கூடா நட்பு
இனத்தை
அழிப்பது தெரியாமல்
ட்ரான்ஸ்மிஷன் டவரில்
கூடிப் பேசிப்
பாடி மகிழும்
பறவைகள்.


காப்பி
பறவை கண்டு
விமானம்.
மீன் கண்டு
படகு.
எதிரொலி கேட்டு
வானொலி.
மனிதன் தேர்வில்
மட்டும் காப்பி
அடிக்கக் கூடாது.

பொய்க்காட்சி
 தூரத்துக் காக்கை
கரையும் போது
விலகிச் சேரும்
பின்னிறக்கைகள்
வாய் போல் தோன்றின.
வெளிச்சம் பொய்.
இருட்டில்
காக்கையும் பாலும்
நிறத்தால் 
ஒன்று தான்.
இருட்டும் பொய்.

 ஆறறிவு
ஏனெனத் தெரியாது
கூவும் குயில்.
ஏனெனத் தெரியாது
ஆடும் மயில்.
ஏனெனத் தெரியாது
கீச்சிடும் குருவி.
பாவம்.
பகுத்தறிவில்லாப்
பறவைகள்.
ஏனெனத் தெரியாது
வாழும்
பகுத்தறிவுள்ள
மனிதர்கள்.


2 comments:

  1. மின்விசிறிகள் ரொம்ப நல்லாஇருக்கு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிருஷ்ணன்!

      Delete