Sunday, December 25, 2011

சிறு கவிதைகள் - தொகுப்பு 23

முதியவர்

ஒரு காலையில்
பாதையில் ஒரு
கிழவரைக் கண்டேன்.
கண்டதும் சிலிர்த்தேன்.
எலும்புகளின் மேல்
சுருங்கிய தோலும்
சுருங்கிய தோலுக்குள்ளே
மறைந்திருந்த நரம்புகளும்...
ஒட்டிய கன்னம்
கருமை காணாமல்
போன கருவிழிகள்.

எடை சிறுத்து
நடை தளர்ந்து
உடை கனத்து...
நூறைத் தாண்டுமோ வயது?
அந்த வயதில் இருப்பதே அதிசயம்.
நடப்பது நடக்கிற காரியமில்லை.
நடமாடும் சரித்திரம்.
வாழ்க்கையை எப்படி
 கடந்திருப்பார் அவர்?
ஓடின எண்ணங்கள்.

படிக்காத அறிவாளியோ?
படித்த பாமரனோ?
காதலியை மணந்தவரோ?
மனைவியைக் காதலித்தவரோ?
நண்பர்கள் ஏணியாகினரோ?
நண்பருக்கு ஏணியானாரோ?
பகைவரால் பயன் பெற்றாரோ?
நண்பரால் ஏமாந்தவரோ?
நம்பிக்கையாய் வாழ்ந்தவரோ?
நம்பிக்கை பற்றிப் படித்தவரோ?

வெற்றிகளால் தோற்றவரோ?
தோல்விகளால் வென்றவரோ?
சந்திப்பவரைச் சிந்திக்கவைத்தவரோ?
சிந்திப்பவரைச் சந்தித்தவரோ?
எதிர்பார்ப்புகளால் ஏமாந்தவரோ?
ஏமாற்றங்களை எதிர்பார்த்தவரோ?
பிள்ளைகளை வளர்த்துப் 
பிள்ளைகளால் வளர்க்கப்பட்டவரோ?
வாழ்வைப் பிடித்து வாழ்ந்தாரோ?
இல்லை நடித்து வாழ்ந்தாரோ?

ஒரு கடிகாரக் கடை

பல கடிகாரங்கள்.
சதுரமாய்...
வட்டமாய்...
பெரிதாய்...
சிரிதாய்...
ஆனால் ஒரே நேரம்.


 சில கடிகாரங்கள்
ரோஜாவைப் போல்
முட்களோடு...

 உடல் பருமனால்
மெல்ல்ல்ல நகரும்
சின்ன முள்.
உயரமாய் 
பெரியமுள்
மெதுவாய் நடக்கும்.
ஓய்வேயில்லை,
ஆனாலும்
சுறுசுறுப்போடு நொடிமுள். 

சில கடிகாரங்கள்
தாமரை போல்
முள்ளில்லாமல்.
நேரத்தில் எண்கள் மாறும்.
எண்களில் நேரம் காட்டும்.

கடிகாரங்களின்
அழகை ரசிக்க
நேரம் போதாது.

வெளியேறும் சமயம்
நேரத்திற்கு வராத
கடையின் பணியாளரைக்
காரமாய்க் கடிந்தார்
கடிகாரக் கடை முதலாளி.


No comments:

Post a Comment