சமீபத்தில் நாரத கான சபாவில் ஒரு மாலை நேர நிகழ்ச்சிக்குச் சென்றேன். காலை ஹிந்து பத்திரிக்கையில் விளம்பரம் பார்த்த போது சௌம்யாவின் பாட்டும் ஊர்மிளாவின் பரதமும் என்று தெரிந்தது. நாரத கான சபாவின் படியே அழகு. சில புகைப்படங்களை எடுத்தேன் படிகளை, சில கோணங்களில். முன்பு படித்த ஜோக் ஒன்று ஞாபகம் வந்தது. அதில் உடல்நிலை சரியில்லாத ஹீரோவை நோய் படிப்படியாகக் குணமாவதைக் காட்ட படியில் இறங்கி வரச் சொல்வார் டைரக்டர். பால்கனி டிக்கெட் எடுத்த போது மணி 4.15.
இருக்கையில் அமர்ந்த போது திரை மூடியிருந்தது தெரிந்தது. திரையின் பின்புறமிருந்து இசைக் கருவிகளின் சத்தம் வந்து கொண்டிருந்தது.திரையின் பின்னே நடுவில் யார் இருக்கிறார் என்பதும் அவர் உட்கார்ந்திருக்கிறார் என்பதும் நமது துப்பறியும் மூளைக்குத் தெரிந்தது.
சௌம்யா கச்சேரியை ஆரம்பித்தார். சென்னைக்கு வந்த புதிதில் சௌம்யாவின் கச்சேரியை மியூசிக் அகாடமியில் கேட்டிருக்கிறேன். பாரதியார் பாடல்களைப் பாடி அவரின் ரசிகனாக்கிவிட்டார். அதே சமயம் நடந்த இன்னொரு நிகழ்ச்சியை கீழே உள்ள உரலியில் வயலின் பகுதியில் படியுங்கள்.
http://venkatramvasi.blogspot.com/2011/07/blog-post_02.html முதல் பாடல் "சாமி தய சூட மன்ச்சி" (கேதார கௌளை ராகம்). அவ்வப்போது சௌம்யா லேசாக இருமிக் கொண்டார். அவரின் குரல் அப்பவும் அருமை தான். அடுத்த பாடல் "ராகவா இன்டி காக்க",(ராகம் ?).அடுத்து "பவனுத ராகவா". பிறகு "பார்வதி நினு நே". "ரஞ்சனி நிரஞ்சனி", ஜிஎன்பியின் பாடல், ராகம் ரஞ்சனி,இனிமை. அதே ராகத்தில் ஒரு திரைப்படப்பாடல் இந்தா அந்தா என்றுவிட்டு கடைசியில் ஞாபகம் வரவில்லை. அந்தப் பாடலில் மேடையிலிருந்த சிஷ்யப் பிள்ளைகள் பாடிய "ரிகமதச",சௌம்யா நிறுத்திய போது தனியாகக் கேட்டது. அடுத்து "அன்னபூரே விஷாலாஷி", சாமா ராகம். "மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே" நினைவில் வந்து போனது. "ப்ரோவ பாரமா ரகுராமா" , பகுதாரி ராகம். செம வேகத்தில் பாடினார் சௌம்யா. அந்த வேகம்,கன்னுக்குட்டியின் துள்ளல்,அருவி,காட்டாறு போன்றவற்றை மனத்தில் கொண்டு வந்தன. "கருணே துசே","திருவைப் பணிந்து" தொடர்ந்து காதுகளைக் குளிர்வித்தன அரங்கின் ஏசியோடு இணைந்து.
முன்பு ஒரு முறை ஒரு கச்சேரியில், வயலின்காரர் வாசிக்கும் போது கச்சேரிக் கலைஞர் ஒரு கூல் டிர்ங்ஸ் பாட்டிலை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தார். அய்யோ குரல் என்னவாகுமென்று நான் துடித்தேன். கண்டிப்பாக அது குளிர்ச்சியாக இருக்காது என்று முடிவு செய்த போது, அவர் தனது புல்லாங்குழலை எடுத்து மீண்டும் வாசிக்கத் தொடங்கினார். அன்றிலிருந்து நான் மெய் மறந்து கச்சேரி கேட்பதை நிறுத்தி விட்டேன்.கச்சேரி நடக்கும் போதே சற்று தள்ளி உட்கார்ந்திருந்த ஒருவர் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். நடந்து கொண்டிருக்கும் கச்சேரியைப் பற்றிய விமர்சனம் இருக்கிறதா என்று தேடுகிறாரோ என்று தோன்றியது.
அடுத்து சிறிது இடைவேளை.அந்த நேரத்தில் செவிக்கு உணவில்லாததால் சிறிது வயிற்றுக்கும் ஈயப்பட்டது. இடைவேளைக்குப் பின்னர் ஊர்மிளா சத்யநாராயணா பரதம் ஆடினார். லைட்டிங் அருமையாக இருந்தது. ஊர்மிளாவின் உடையமைப்பு தலைகீழாக ஒரு மயில் இருப்பது போல் இருந்தது. ஜதி சொன்னவரின் குரல் வளம் அருமை. அவர் ததிங்கினத்தோம் போடுகிறார் என்று சொன்னால் அது உண்மையாக இருந்தாலும் வழக்கு என்ற வகையில் பொய்யாகிவிடும். பால்கனியிலிருந்து பார்க்கையில் ஊர்மிளாவை விட அவரின் பின்னால் சுவரில் தெரிந்த அவரின் நிழல் இரட்டையர்கள் நன்றாகத் தெரிந்தனர். சில நேரம் ஊர்மிளா ஒளியிலேயே சில்ஹவுட் போல் தெரிந்தார். பால்கனிகாரர்களுக்கு பைனாகுலர் வாடகைக்கு விட்டால் தேவலை. அதற்கென்று ரொம்ப முன்னால் உட்கார்ந்து பரதம் பார்த்தால் ஆடுபவர் காலைத் தூக்கினால் நம்மை உதைக்க வருவது போலிருக்கும்.
முன்புறம் ஒரு சிறு குடும்பம் உட்கார்ந்திருந்தது. அப்பா,அம்மா,சிறு பையன். பையன் அம்மாவிடம் பல கேள்விகள் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தான். அப்பாவும்,அம்மாவும் பேச ஆரம்பித்தால்,உடனே அம்மாவை டான்ஸைப் பார்க்கச் சொன்னான். சில தடவை இப்படி நடந்தது. திருவனந்தபுரம் பத்மநாத சுவாமி பற்றி ஒரு பாடலுக்கு கிருஷ்ணரின் லீலைகளை அழகாக அபிநயம் பிடித்துக் காட்டினார். வள்ளி நடனத்தில் உடையலங்காரம் நன்றாக இருந்தது. பார்வதி தேவியின் பல அவதாரங்களைப் பற்றிய நடனத்திற்கான பாடல் எட்டு ராகங்களில் அமைந்திருந்தது. ஏழு ராகம் கண்டு பிடிக்க முடிந்தது.எட்டாவது எட்டாக்கனியாகி விட்டது.மேடையிலிருந்த இரு ஆளுயரக் குத்து விளக்குகளின் ஒளிகள் நட்சத்திரங்கள் போல் மின்னின இருட்டை ஒட்டிய ஒளி அமைப்பின் போது. எங்கே அணைந்து விடுமோ என்று பயமுறுத்தியபடி இருந்த அவை கடைசி வரை ஒளிர்ந்தன. ஊர்மிளாவை டீன் ஏஜ் மங்கை என்று நான் சொல்ல,அருகிலிருந்தவர் "இல்லை,முப்பதுக்கு மேல் இருப்பார்" என்றார்.
பொதுவாக நாட்டியம் என்பது ஃபிட்டானவர்கள் நின்று,நடந்து ஆடுவதை பெரும்பாலும் உடல் பருத்தவர்கள் உட்கார்ந்து பார்ப்பது என்றாகிவிட்டது.
மறு நாள் விக்கிபீடியாவில் ஊர்மிளாவின் வயது நாற்பத்தைந்து என்று தெரிந்த போது ஆச்சரியமாக இருந்தது.
No comments:
Post a Comment