Saturday, December 10, 2011

சிறு கவிதைகள் - தொகுப்பு 22


பூமி வண்டி

பூமி ஒரு வண்டி.
சற்றே பெரிய...
சக்கரமில்லா வண்டி.
விதிகளைக் கடைபிடிப்பதால்
விபத்தின்றிச் செல்லும் வண்டி.
ஒரே பாதை.
கிளம்பிய இடத்திற்கே
திரும்ப வந்து
நிற்காது மீண்டும்
செல்லும் வண்டி.

வண்டி புகை விடாது.
பயணிகள் விடுவர்.
இலவசப் பயணம்.
பயணம் முடியும் போது  
டிக்கெட் வாங்கினால் போதும்.
ஓட்டுநர் மாயமாய்... 
முன்பதிவில்லை.
காத்திருப்போர் பட்டியலில்லை.
பழைய பயணிகளைப்
பற்றிய குறிப்புகளுண்டு.
எதிர்காலப் பயணிகள்
யாரெனத் தெரியாது.
சுமையின்றித் தொடங்கும்.
பயணத்தின் இடையில்
சேமித்த சுமைகளை
எடுத்துச் செல்ல
அனுமதி இல்லை.

மேல் பகுதியும்
கீழ்ப்பகுதியும் குளிர் வசதி.
பல கடல் நீச்சல்குளங்கள்.
கூரையில்லை.
மழையில் நனைந்தால்,
பயணிகளே பொறுப்பு.
ஒரு நாளில்
பாதி நேரம்
வெளிச்சம் வரும்.

பயணம் பயணிகளால் தொடங்கும்.
முன்னறிவிப்புமின்றி பயணம்
நிறுத்தப்படலாம்.
சில சமயம் பயணிகளாலும்
முடியும் பயணம்.
பயணத்தில்...
புத்தகம் படிக்கலாம்.
பாட்டுக் கேட்கலாம்.
நண்பர்களாகலாம்.
பேசிப்பழகலாம்.
வேடிக்கை பார்க்கலாம்.

ஜன்னலில்லை.
கரம்,சிரம்,புறம் நீட்டலாம்.
குழந்தைகளாய் விளையாடலாம்.
பாடம் படிக்கலாம்.
இளைஞர்களாகி மணம் புரியலாம்.
வயதாகி ஓய்வெடுக்கலாம்.
பயணிகள் உருமாறும் பயணமிது.
பயணம் சுகமானதா?
இல்லை அலுப்பானதா?
பயணிகளின் மனதில்.
வண்டியில் எங்கும் பயணிக்கலாம்.
பயணத்தில்...
கோபப்படலாம்.
வெறுப்போடிருக்கலாம்.
சுயநலமாயிருக்கலாம்.
உதவிகள் செய்யலாம்.
மகிழ்விக்கலாம்.

சில சமயம்
வண்டி அதிர்ந்து
பயணிகள் பாதிக்கப்படலாம்.
பயணத்தை வசதியாக்க
எடுத்த முயற்சிகள்
வண்டியை அதிகமாய்
அதிரவைக்கலாம்.
வண்டியைப் பாதுகாப்போம்.
இப்போதைய பயணிகளுக்காவும்.
எதிர்காலப் பயணிகளுக்காகவும்.
***
ஜெயமும் பயமும்!


செயற்கையாய்
பனிக்கட்டியை வீட்டுக்குள்
கொண்டு வந்ததை
ஜெயமென்றோம்.
இயற்கையாய்
பனிப்பிரதேசம்
வீட்டுக்குள் வருமென
பயமென்கிறோம்.


4 comments:

  1. nice concept..keep blogging vaasi....

    ReplyDelete
  2. புமி வண்டி ..... அருமையான பயண அனுபவத்தை தந்தது ...... அபாரம் ......

    ReplyDelete