Saturday, March 12, 2011

சம்பவங்கள் - கல்லூரியில் ஃபுட்பால்/டிவி/கடிகார அறிவியல்

கல்லூரியில்  ஃபுட்பால்
கலசலிங்கம் கல்லூரியில் படிக்கும் போது (கடைசி வருடம்), ஹவுஸ் மேட்ச் நடக்க இருந்தது. நானும் எனக்குப் பிடித்த விளையாட்டான ஃபுட்பாலில் விளையாட பெயர் கொடுத்தேன். ஶ்ரீவில்லிபுத்தூரில் ஒரு பள்ளி மைதானத்தில் பயிற்சி விளையாட்டுக்கள் நடந்தன. மூன்று நாள் நானும் கலந்து கொண்டு விளையாடினேன். அதை விளையாடினேன் என்று சொல்வது பொய்யாகிவிடும். ஏனென்றால் பந்து என் காலில் படவேயில்லை. இருந்தாலும் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்ததில் நான்காம் நாள் காய்ச்சல் வந்து விட்டது. மூன்று நாள் ரூமில் படுத்துக் கிடந்தேன்.
     நான்காம் நாள் உடம்பு சரியாகி கல்லூரி செல்ல பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தேன். ஜீனியர்ஸ் இரண்டு பேர் என்னைப் பார்த்து அருகில் வந்தார்கள். அதில் ஒருவன் என்னுடன் கால்பந்து( என் காலில் படாத பந்து!) விளையாடியவன். அவன் பெயர் சரவணன் (மதுரை). அவன் ஜாலியான ஆள். நன்றாகக் கட்டையைக் கொடுப்பவன். என்னைப் போன்ற நபர்களிடம் நான் கொஞ்சம் ஜாக்கிரதையாகப் பேசுவேன். ஆனால் அன்று அசால்டாக இருந்து விட்டேன். திடீரென்று சரவணன் என்னிடம் ' என்ன சார் நீங்க, அதுக்குப் பிறகு ஆளையே காணாம். நீங்க வராம யாராலயும் கோல் போடவே முடியல' என்றான். 'இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகளமா ஆக்கிட்டாய்ங்க!' எனக்கு நம்பவே முடியவில்லை. இது கனவா நிஜமா? புல்லரித்தது. என்னடாயிது நம்மளப் போயி இப்படிச் சொல்றான்.ஒரு வேளை நமக்கே தெரியாம நாம நல்லா விளையாடுனோமோ? இருந்தாலும்  எதற்கும் இருக்கட்டுமென்று ஒரு பெருமையான சிரிப்பைச் சிரித்து வைத்தேன். அதில் கொஞ்சம் சந்தேகமும் கலந்திருந்தது. சரவணின் கூட இருந்த நண்பன், சும்மாயிருக்காமல்,'சார் என்ன அந்த அளவா விளையாடுவாரு!' என்றான். அதற்கு சரவணன் சொன்ன பதில், 'பின்ன இவரு தான கோலி!'. சரவணன் புகழ்ந்த போதே நான் கொஞ்சம் உஷாராகியிருக்க வேண்டும். அன்று வழிந்த அசடு பல ஆண்டுகள் ஆகியும் நினைவில் இருக்கிறது.
கல்லூரி விடுதி டிவி
கலசலிங்கம் கல்லூரியில் பணி புரிந்த போது, முதல் இரண்டு வருடங்கள் விடுதியில் தங்கியிருந்தேன். அப்போது விடுதியில் இருந்த டிவியில் சினிமா பாட்டு பார்க்க(?) மாணவர்களும் மற்ற ஆசிரியர்களும் மாலை நேரங்களில் டிவி முன் பெருங்கூட்டமாக பெஞ்ச்களில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்போது கேபிள் காலம் இல்லை. தூர்தர்ஷன் சரியாகத் தெரியாது. ரூபவாஷினி-சிலோன் தொலைக்காட்சி ஏதோ ஓரளவு தெரியும். நானும் ஒரு நாள் எவ்வளவு தெளிவாகப் படம் தெரிகிறது என்று பார்க்கச் சென்றேன். பாட்டு தெளிவாகக் கேட்டது. ஆனால் படம் புள்ளி புள்ளியாகத் தெரிந்தது. நாமாகக் கற்பனை செய்து கொள்ள வேண்டியது தான். அங்கிருந்து சலிப்போடு எழுந்து வருமுன் உடனிருந்த ஆசிரியர் ஒருவரிடம் நான் சொன்னது, 'உலகத்திலேயே நிறைய ஆளுங்க சுத்திலும் கூடி உக்காந்து ஒரு ரேடியோவ மொறச்சுப் பாத்துக் கிட்ருக்கிறது இங்கயாத் தானிருக்கும்!'
கடிகாரம் அறிவியல்
  கல்லூரியில் பணி புரிந்த போது ஒரு நாள் இரண்டு மாணவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். அதில் ஒருவன் சதீஷ் (மதுரை). அன்று தேதி 27. ஆனால் என்னுடைய வாட்சில் 29 என்று காண்பித்துக் கொண்டிருந்தது. இதை ஒருவன் என்னிடம் சுட்டிக் காட்டினான். நான் வாட்சைச் சரி செய்து கொண்டே, சமாளிக்கும் விதமாக, 'சயின்ஸில் நான் மற்றவர்களை விட இரண்டு நாட்கள் அட்வான்ஸாக இருக்கிறேன்' என்றேன். அப்போது பத்திரிக்கைகளில் அமெரிக்கா இந்தியாவை விட அறிவியலில் பத்து வருடங்கள் முன்னேறி இருப்பதாக எழுதுவார்கள். இதைக் கேட்டதும் சதீஷ் டக்கென்று கூட இருந்தவனிடம் சொன்னான்.'டே அது போன மாசம் 29 ஆம் தேதிடா!'. நான் சதிஷைப் பாராட்டினேன் அந்த ஜோக்கிற்காக.

No comments:

Post a Comment