Tuesday, March 29, 2011

சம்பவம் - குக்கி குடித்திருக்கிறீர்களா?

அப்போது சென்னையில் ஃபான்டா அறிமுகம் செய்திருந்தார்கள்.மதுரையிலிருந்து வந்திருந்த சொந்தக்காரப் பையனுக்கு ஏதோ எனக்குத் தெரிந்த சென்னையைச் சுற்றிக்காண்பித்துக் கொண்டிருந்தேன். தாஜ் ஹோட்டல் பக்கத்தில் நாங்கள் நின்றிருந்த போது (அங்கு அவனைக் கூட்டிப்போகவும் இல்லை, காட்டக்கூட இல்லை), கோகோ கோலா வண்டி சிக்னலில் நின்றிருந்தது. நான் அவனிடம் கோகோ கோலா கம்பெனி ஃபான்டாவை அறிமுகம் செய்திருப்பதாக, எந்தப் பெருமையும் இல்லாமல் ஒரு பொது விவரத்திற்காகச் சொன்னேன்.
     தம்பி கேட்டான், 'ஏண்ணே, கோகோ கோலா கம்பெனியோட குக்கி குடிச்சிருக்கீங்களா?' என்று. நான் இல்லை என்றேன் சிறிது குழப்பத்தோடு.'குக்கியா?'. தம்பி ஒரு கேவலமான தொனியில் சொன்னது, 'என்னண்ணே மெட்ராஸ்ல இருந்துகிட்டு குக்கி குடிக்கலைன்னு சொல்றீங்க!'
எனக்கு அசிங்கமாக இருந்தது. தமிழ்நாட்டின் தலைநகரத்தில இருக்கிற, நாம குடிக்காத குளிர்பானத்த மதுரையிலிருக்கிற இவன் குடிச்சிருக்கானா?'
கம்மிய குரலில் 'இல்லப்பா,எனக்குத் தெரியல!' என்றேன்.
    ஐந்து நிமிடத்தில் ஒரு டீக்கடையில் நுழைந்தோம். டீக்கள் (பன்மை கவனிக்கவும்-இலக்கணம்) சொல்லிவிட்டு உட்கார்ந்திருந்த போது, தம்பி 'அண்ணே, அதைத்தான்னே சொன்னேன்!' என்று சுட்டிக் காட்டினான்.அங்கு கோகோ கோலாவின் சிவப்பு நிற அடுக்கு பெட்டிகள் இருந்தன. ஒரு பக்கம் கோகோ கோலா என்றும் இன்னொரு பக்கம் கோக் ( Coke) என்றும் எழுதியிருந்தது. இவன் காண்பித்தது Coke. இதைத் தான் அவன் குக்கி என்று சொல்லியிருக்கிறான்.
செமத்தியான கோபத்தில் ' அது என்னடா?' என்றேன்.
'ஏண்ணே குக்கி தான?'. 
'Jay.. Oh.. Kay.. Eee.. என்னன்னுடா சொல்லுவ?'
'ஜோக்'
'அதை ஜீக்கின்னா சொல்ற.அப்புறம் இதை மட்டும் ஏண்டா குக்கின்னு சொன்ன?'
'நல்லா படிச்சிருந்தா நான் ஏன்னா இப்படி அலையிறேன்!' (சவடால் பேச்சு மாறி பம்மி விட்டான்.)
     விசயம் அதோடு முடியவில்லை. தம்பியை அடுத்த வாரம் அலுவலக நண்பன் ஒருவன் வீட்டுக்குக் கூட்டிச் சென்றேன். நண்பனிடம் தம்பியை அறிமுகம் செய்தேன், நண்பன் போடப் போகும் வெடிகுண்டு பற்றித் தெரியாமல். 'இவன் தான் என் தம்பி. மதுரையிலிருந்து வந்திருக்கான்!'
நண்பன் படாரென்று கேட்டான்,'யாரு அந்த குக்கியா...?'. ஒரு வழியாகி விட்டேன். நண்பன் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் தம்பி கேட்டான்,
'ஏண்ணே, ஏதொ ஒன்னு தெரியாமச் சொல்லிட்டா போஸ்டரடிச்சு ஒட்டுவீங்க போலிருக்கே?'.(மதுரைத் தமிழில் கடுப்பான குரலில் கற்பனை செய்து கொள்ளுங்கள்). அவனை எப்படி சமாளித்தேனென்று இப்போது மறந்து விட்டது.




4 comments:

  1. குக்கி ஜோக்கி "நண்பரின் பகுதி" என்னை சிரிக்க வைத்தது.

    ReplyDelete
  2. அந்தச் சம்பவத்தின் பதிவு தன் கடமையைச் செய்து விட்டது! நன்றி பின்னூட்டத்திற்கு!

    ReplyDelete
  3. haa.. typical post from Vasi! :)

    ReplyDelete