Tuesday, June 14, 2011

புனே பயணம் - 3

வாசல் வந்ததும் கன்வேயர் பெல்ட் எண் 3 எங்கிருக்கிறது என்றேன். நண்பர் வழிகாட்டினார். அவரின் முதுகில் தொங்கிய ஒரே ஒரு பை என்னை 'நீ மட்டும் ஒரு வருடம் புனேயில் தங்கப்போகிறாயா? என்பது போல் பார்த்தது.
   பெட்டிகளை இழுத்துக் கொண்டு வெளியே வந்த போது புனே நகரம் தூக்கம் கலைந்து எழுந்து புத்துணர்வோடு இருந்தது. வண்டியில் போகும் போது தூக்கம் இமையைக் கீழிழுத்தாலும் புனேயின் காலையைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மேலிழுத்தது. வண்ண வித்தியாசங்கள் முதலில் தெரிந்தன. சிவப்பு, பச்சை நிறப் பேருந்துகள், கருப்பு ஆட்டோ, சிவப்புப் பொதுத் தொலைபேசி,சிவப்பு மனிதர்கள். அரசியல் கட்சித்தலைவரின் படம் ஒட்டிய ஆட்டோ, மொழி வேறு, முகம் வேறு எனினும் ஒற்றுமை காட்டியது.
   வண்டியில் மெல்லிதாக ஒலித்துக் கொண்டிருந்த பாடல் புரியவில்லை,ஆனால் பக்தி புரிந்தது. புனே அலுவலகம் வந்தடைந்தோம்.
தங்கும் விடுதியில் வசதிகள் அமெரிக்காவில் நான் ட்ராய் நகரத்தில் தங்கிய ஹோட்டலை ஞாபகப்படுத்தின. அலுவலகக் கட்டடங்கள் வடிவமைப்பு , டில்லி செங்கோட்டை வண்ணம் மனதைக் கவர்ந்தன.மதியம் கேன்டீனில் சாப்பிட்டது தயிர் சாதம் கூடவே ஒரு கிண்ணத்தில் ரசம். இவை இரண்டும் நம்மூரில்  கூட்டணி போடாது. ஆனால் அன்று, அக்கூட்டணியை நான் சிறுவயதிலிருந்தே சாப்பிடுவது மாதிரி, ஸ்பூனில் தயிர் சாதத்தை எடுத்து அப்படியே ரசக்கிண்ணத்தில் முக்கி ஒரு ரசாபாசம் பண்ணி டக் டக்கென்று ஸ்டைலாகச் சாப்பிட்டது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. 'பாம்பு திங்கிற ஊருக்குப் போனா நடுத்துண்டு எனக்குன்னு கேட்டு வாங்கனும்' இது போன்ற பழமொழிகளில் நம் கவனம் தின்பதில் போகாமல் உட்பொருள்  மீது போக வேண்டும். பெரும்பாலும் எல்லோரும் சாப்பாட்டிற்குப் பிறகு குல்பி ஐஸைக் குச்சி மூலம் வாய்க்கு அனுப்பினர். அன்றைய அலுவல்களுக்குப் பின் இரவு ஹோட்டலில் சாப்பிடக்கிளம்பினோம்.
  
    சிட்ரஸ் ரெஸ்டாரன்ட் வெளியே பார்க்கப் பச்சையாக இருந்தது.
உள்ளே அழகாக ஆடம்பரமாக இருந்தது.பஃபேயில் நல்ல வெரைட்டி இருந்தது.தயிர் சாதம் அருமை. காபி இயந்திரத்தில் வந்தாலும் எந்திரன் போட்டது போலிருந்தது.ஒரு நல்ல ஹோட்டலுக்கு அடையாளம் மீண்டும் வர ஆசையைத் தூண்டுவது.அந்த வகையில் சிட்ரஸ் ஒரு சுக அனுபவத்தைத் தந்தது. சிட்ரசிஸில் எனக்குப் பிடித்த காட்சிகளை என் மொபைல் காமிராவில் பிடித்தேன். அவைகள் கீழே!

சிட்ரஸில் இருந்து வெளியே வந்த போது என் எடை குறைப்பு முயற்சி சற்றுக் கூடி விட்ட என் எடையால் பாதிக்கப்பட்டிருந்தது.

இரவில் குளிர் இதமாக இருந்தது.தியானம் செய்ய ஏற்ற இடமாகத் தெரிந்தது.
காலை தங்கும் விடுதியில் ஜவ்வரிசி உப்புமாவைப் பல வருடங்களுக்குப் பிறகு சாப்பிட்டாலும் அதே பாசத்தோடு வாயில் வந்து ஒட்டிக் கொண்டது. மறு நாள் மதியம் மீண்டும் கேன்டீனில் சாப்பாடு. இந்த முறை பரோட்டா போடும் பகுதிக்குப் போனேன். பரோட்டா போட்ட பணியாள் அதைப்புரட்டி எடுத்த   நேர்த்தியும் நிதானமும் ரசிக்க வைத்தன. எண்ணையைப் பேசினில் வைத்துக் கொண்டு சப்பட்டைக் கரண்டியால் (தோசைக் கரண்டி தான்) பராட்டா மேல் தொட்டுத் தடவுகிறார் .அது நன்றாக வேகக் கரண்டியை பராட்டா மேல் வைத்து, கட்டையை (பூரிக்கட்டை தான்) ஒரு பக்கம் பிடித்து மறுபக்கத்தால் அழுத்துகிறார். பராட்டா புரட்டிப் போட்டு அழுத்துவதைப் பார்த்தபோது ஒரு ஹிப்நாடிக் எஃபெக்ட் உண்டானது.  இது போன்ற எஃபெக்ட்டை சின்ன வயதில் வீடுகளுக்குப் புடவை விற்க வரும் நபர்கள் அதை விரித்துக் காட்டும் போதும், சில டீக்கடைகளில் மாஸ்டர்கள் அலட்சியமாகத் தூக்கி ஆத்தும் போதும்,  நான் மாணவனாயிருந்த மத்தியான நேர வகுப்புகளிலும் அனுபவித்திருக்கிறேன்.
   
    சிட்ரஸ் ஹோட்டலுக்குப் போகும் வழியில் ஒரு நண்பர் சொன்ன கதை சுவாரசியமாயிருந்தது. அது . .

(தொடரும் . . . )

No comments:

Post a Comment