Wednesday, June 15, 2011

புனே பயணம் - 4

      சிட்ரஸ் போகும் வழியில் ஒரு நண்பர் சொன்ன கதை சுவாரசியமாயிருந்தது. அவரின் சிறு வயதில் தமிழ்நாட்டிலிருந்து வடநாட்டில் ஒரு நகரத்திற்குக் குடிபெயர்ந்திருக்கிறார்கள். அவரின் அம்மாவிற்கு ஹிந்தி கொஞ்சம் தெரியும். ஒரு நாள் தெருவில் மக்கள் கூட்டமாகச் செல்வதைப் பார்த்து என்ன ஏது என்று விசாரித்திருக்கிறார்.'மர்கயா' என்று சொன்னதிலிருந்து யாரோ இறந்துவிட்டார்கள் என்று புரிந்திருக்கிறது. வீட்டுக்கு வந்து விசயத்தைச் சொல்லி 'ஊரோடு ஒத்து வாழ்'படி அந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்குக் குடும்பத்தோடு கிளம்பிப் போயிருக்கிறார்கள் . அங்கு தெருக்கூத்து நடந்து கொண்டிருந்திருக்கிறது. அதில் இறந்து கொண்டிருந்தது ராவணன். அதன் பிறகு வருடா வருடம் குடும்பத்தோடு அந்தத் திருவிழாவில் கலந்து கொள்வார்களாம். 

  மறுநாள் இரவும் ஒரு ஹோட்டலுக்குச் சென்றோம். அதன் பெயர் ந்யூ சதானந்த். போகும் வழியில் புனே நகரம் கோட்டைகளின் நகரம் என்றார் குழுவைச் சேர்ந்த நண்பர் ஒருவர். புனே கிளம்பும் போது வீட்டில் என் கோட்டை விட்ட நான், நேரமில்லாதலால் அந்தக் கோட்டைகளைக் பார்க்காமல் கோட்டை விட்டேன்.

    ந்யூ சதானந்த் பெரிதாக இருந்தது. ஒரு கல்யாண ரிஷப்சன் நடந்து கொண்டிருந்தது. அது வைர அல்லது ரவை வியாபாரியின் குடும்பமா தெரியாது. எல்லோரும் கோட் அணிந்திருந்தார்கள். டமர டமர என்று தாள வாத்தியம் சட்டென்று உற்சாகமாக்கியது. ஆடலாம் போலிருந்தது.
 
      நாங்கள் ஒரு பெரிய டேபிளைச் சுற்றி உட்கார்ந்து சாப்பிட்டோம். 
என் எதிரே இருந்த நண்பர் ஒரு கிண்ணத்தை எடுத்து வந்தார். அதில் பச்சையாக ஒரு ஜெல் போன்ற பொருளில் வெள்ளையாக ஒரு உருண்டை இருந்தது. அவரின் வலது பக்கக்காரர் அது என்ன என்றார். இவர் 'ரசகுல்லா' என்றார். 'இல்லை அந்தப் பச்சை!' என்றார் கேட்டவர்.இவர் 'ரசகுல்லா' என்றார். அடுத்து இடது பக்கக்காரர். அதே கேள்விகள் பதில்கள். இதைக் கவனித்துக் கொண்டிருந்த என்னை அந்தப் பச்சை ஜெல் கவரவில்லை.'ரசகுல்லாவா?'சிறிது நேரத்தில் என் அருகே இருந்த ஒருவர்  'வாட்ஸ் தேட்' என்றார் கணீர்க் குரலில். இப்போது நெளிந்தபடி வந்த பதில் 'ஐ தாட் இட்ஸ் ரசகுல்லா, பட் இட்ஸ் நாட்!'. இதற்கு இடையில் அவரே சாப்பிட்டுப் பார்த்து ஏமாந்து  நொந்திருந்தார் போல.அதற்கு மேல் அந்த நாடகத்தை அவரால் நடத்த முடியவில்லை. 'வெளுத்ததெல்லாம் பாலில்லை. உருண்டையானதெல்லாம்  ரசகுல்லாவில்லை!'

     என் குழுவைச் சேர்ந்த நண்பர் ஒருவர் புகைப்படக்கலைஞர். சமீபத்தில் கிர் காட்டிற்குச் சென்று சிங்கங்கள், பறவைகள் என்று சுட்டுத் தள்ளியிருந்தார் (காமிராவில் தான், துப்பாக்கியால் அல்ல). அவரை இம்ப்ரஸ் செய்ய டேபிளில் இருந்த இரண்டு கோப்பைகளை நான் படமாக்கி அவரிடம் காண்பித்தேன். லைட்டிங் நன்றாக இருப்பதாகச் சொன்னார். முதலில் ஒரு நல்ல காமிரா வாங்குங்கள் என்றார். சமீபத்தில் முகப்புத்தகத்தில் ஒரு ஆல்பத்தில் நான் போட்ட கமெண்ட் 'நல்ல புகைப்படம் உருவாகக் காரணம் காமிரா லென்ஸ் அல்ல, கலைஞனின் விழி லென்ஸ்'.

சாப்பிட்டு விட்டு நாங்கள் வந்த வண்டி பாதை தவறி மும்பை செல்லும் வழியில் போய்க் கொண்டிருந்தது.

(தொடரும் . . . ) 

No comments:

Post a Comment