பேட்
ரோஜா குல்கந்து
மூங்கிலிலே
கல்லூரிக்குப் பக்கத்து ஊரில் வீடு வாடகைக்கெடுத்து அந்த மாணவர்கள் தங்கியிருந்தார்கள். அவர்களில் ஒருவன் கீ போர்ட் வாசிப்பாளன், ஒருவன் பாடகன், ஒருவன் தாளம் வாசிப்பாளன், ஒருவன் பல கலைகளிலும் தயங்காமல் ஈடுபடுவான், இன்னுமொருவன் தமிழில்/நல்ல உச்சரிப்பில் சிறந்தவன். நான் ஒரு நாள் அவர்கள் வீட்டிற்குப் போயிருந்த போது ஒரு வௌவால் வீட்டில் குறுக்கும் நெடுக்கும் பறந்து கொண்டிருந்தது. பாடகன் ஒருவனிடம் 'அட்ரா மச்சான்!' என்று சொன்னவுடன், அவன் ஒரு செய்தித்தாளை பேட் போல மடக்கி பேட்டிங் செய்வது போல நின்று காத்திருந்தான். வௌவால் அருகில் வந்ததும் பட்டென்று ஒரு ஸ்ட்ரோக்கடிக்க அது சுவற்றில் பட்டு விழுந்தது. நான் உடனே "Batடையே Ballஆ யூஸ் பண்ணிட்டியேப்பா!" என்றேன். அன்று அவர்கள் நொந்து போய்க் கேட்ட கேள்வி "ஜோக்க அப்ப தான் யோசிப்பீங்களா, இல்ல முன்னாடி யோசிச்சு வப்பீங்களா?". என் பதில் "வழக்கமா அப்ப தான் சொல்லுவேன், இது மட்டும் ஏற்கனவே யோசிச்சது"
ரோஜா குல்கந்து
ஶ்ரீவில்லிபுத்தூரில் ஒரு நாள் மாலை ஆண்டாள் கோயில் பக்கத்துத் தெருவில் நடந்து கொண்டிருந்தேன். ஒரு மாணவ நண்பனை வழியில் பார்த்தேன். அவனும் நானும் பேசிக்கொண்டு சென்ற போது ஒரு காதி வஸ்திராலயத்தைப் பார்த்த அவன், சடன் ப்ரேக் போட்டு, ' சார்! உள்ள கொஞ்சம் பொண்ணுக இருக்காங்க. நான் உள்ள போயி சும்மா ஏதாச்சும் இங்க இல்லாத மாதிரி பொருள வெல கேட்டுட்டு வந்திர்றேன்" என்றான். இதில் உள்ள ரிஸ்க் எனக்குத் தெரிந்ததால், "அப்படி என்ன பொருளக் கேப்ப?" என்றேன். "ரோஜா குல்கந்து" என்றான். "அது இங்க இருந்தா?" என்றதற்கு "சான்ஸே இல்ல" என்றான் சென்னை ஸ்டைலில். என்ன நடக்கும் என்ற ஆர்வம் அதிகமாகவே நானும் கடையுள் அவனுடன் சென்றேன். இவன் ஸ்டைல் காட்டிக் கொண்டு, கமல் குரலில் "ரோஜா குல்கந்து இருக்கா?" என்றான். வேகமாய் பதில் வந்தது. "ஓ இருக்கே!". நான் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தேன். அவன் "சிரிக்காதீங்க சார், சிரிக்காதீங்க சார்" என்று கெஞ்சினான். நல்ல வேளை என்னிடம் முப்பது ரூபாய் இருந்ததால் அசிங்கப்படாமல் வாங்கிக் கொண்டு வெளியே வந்தோம்.
மூங்கிலிலே
என் பெரிய பையன் விஷாலுக்கு அப்போது இரண்டு வயது. அயர்ன் பண்ணி முடித்து விட்டு, அயர்ன் பாக்ஸை நெட்டமாக நிப்பாட்டி விட்டுப் பக்கத்திலிருந்த சேரில் உட்கார்ந்து "மூங்கிலிலே காற்று வந்து காற்றலையைத் தூது விட்டேன்" என்ற பாட்டை என்னை மறந்து பாடிக் கொண்டிருந்தேன். விஷால் "அப்பா அப்பா" என்று என் பக்கத்தில் வந்து கூப்பிட்டுக் கொண்டிருந்தான். நானோ கண்ணை மூடிய நிலையில்,அந்தச் சினிமாப் பாடலுக்கு, ஏதோ கர்நாடக சங்கீதம் போல மேல் ஸ்தாயியில் சஞ்சாரம் பண்ணிக்கொண்டிருந்தேன். அதாவது ஹைபிட்சில் பிட்சு உதறிக் கொண்டிருந்தேன். விஷால் "அப்பா அப்பா"என்று கூப்பிடுவது கேட்டது, ஆனால் தெரியவில்லை. (அதான் கண்ணு மூடியிருக்கில்ல!) திடீரென்று என் இடது தொடைப்பகுதியில் வெப்ப உணர்வு தோன்றியது. கண்ணைத் திறந்து பார்த்தால் விஷால் சூடான அயர்ன் பாக்ஸை, அதன் கைப்பிடியைப் பிடித்தபடி, நெட்டமாக என் தொடைப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்தான். கண் திறந்து பார்த்தவுடன் என் சினிமாப் பாடலில் என்னையறியாமல் பல வித கமகங்களும் பிருகாக்களும் வந்து நிஜமாகவே கர்நாடக சங்கீதமானது. நல்லவேளை அன்று என் கைலியில் சுருக்கமில்லாமல் இருந்ததால் நான் தப்பித்தேன்.இல்லையென்றால் "தீயினாற் சுட்ட புண் போய்விடும் போகாதே அயர்ன் பாக்ஸில் சுட்ட வடு" என்ற கதையாயிருக்கும்.
What a great site… Thanks for this great piece of content.
ReplyDeleteThanks banti
ReplyDelete