Saturday, June 18, 2011

புனே பயணம் - 5

வண்டி மும்பை வழியில் போனதால் ஒரு சுற்று சுற்றி திரும்பி வரவேண்டியதாயிற்று. வழியில் ஒரு கிராமத்துக் கல்யாணத்தில் டமர டமரக் கொட்டுக்கு இளைஞர்கள் உற்சாக ஆட்டமாடிக் கொண்டிருந்தனர். சென்னையிலிருந்து வந்த நண்பர் கைப்பேசி சிக்னல் கிடைக்கவில்லை என்றார். இந்தப் பகுதி மிலிட்டரிப் பகுதி சற்று தள்ளி கிடைக்கும் என்றார் ஒருவர். அவர் சொன்னது மாதிரி சிறிது தூரம் கடந்ததும் சிக்னல் கிடைத்தது. எனக்கு இதில் அறிவியலை விட இதைத் தெரிந்து வைத்திருந்தவரின் அறிவு இயல் வியக்க வைத்தது.
     மறு நாள் மாலை கேன்டீனில் போய் சில உணவு வகைகளைப் பரிசோதனை செய்தேன். அவை சோதனையில் வெற்றி பெற்றன. தோல்வி அடைந்து கொண்டிருந்தது என் எடைக்குறைப்பு முயற்சி.
     இரவு விமானம் 11.50 மணிக்கு. அது ஒரு மணி நேரம் தாமதாக வருமென்றார்கள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்தை ஓட்ட வேண்டும்.ஏர்ப்போர்ட் வரும் வழியில் ஏதாவது பொருள் வாங்கலாமென்றால் நேரமாகி விட்டதால் கடைஅடைப்புப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ஏர்ப்போர்ட்டில் ஒரு கடையில் புனே ஸ்வீட் பாக்கெட் பார்த்தேன். அதன் பெயர் 'பாக்கர்வாடி'.
அதை வாங்கினேன்.
டேபிள் மேல் வைத்தான் கடையாள். கூடவே காபி ஒன்று வாங்கிவிட்டுப் பணத்தைக் கொடுத்துவிட்டு, காபியை மட்டும் எடுத்துக் கொண்டு உட்காருமிடம் நடக்க திரும்பத்தொடங்கினேன்.பின்புலத்தில் கடையாள் எந்தச் சலனமுமின்றி அசையாமலிருப்பது போலிருந்தது. திடீரென்று ஒரு ஆள் சலனமின்றி இருந்தால் ஏதோ காரணமிருக்க வேண்டுமென்று தோன்ற, நான் பாக்கர்வாடி பாக்கெட்டை டேபிள் மீது மறந்துவிட்டு(தூக்கக் கலக்கம்?) / மறந்து... விட்டுப் போவது தெரிந்தது. கடையாளின் பாடிலாங்க்வேஜ் வாழ்க என்றபடி பாக்கெட்டை எடுத்துக் கொண்டேன்.
    பாக்கர்வாடி (bhakarwadi) இனிப்பும் காரமும் இணைந்த ருசி. சென்னையில் அடையார் ஆனந்தபவன் கடைகளில் கிடைப்பதாக இணையத்தில் அறிந்தேன். எதிர்காலத்தில் இணையதளத்தில் க்ரெடிட் கார்டில் பணம் செலுத்திவிட்டு 'டவுன்லோட்' பட்டனை அழுத்தியதும் பாக்கர்வாடி கணினியிலிருந்து விழலாம். பாக்கர்வாடி செய்முறை கீழே உள்ள லிங்கில்.
   http://www.youtube.com/watch?v=11BAFVqCKhs

    ஒரு வழியாக ஒரு மணிக்கு வரிசையில் நிற்க வைத்து கட்டடத்தின் வெளியே வரவைத்தனர். இரண்டு ப்ளேன்கள் நின்றிருந்தன. ஒன்றில் ஆட்கள் இறங்கிக் கொண்டிருந்தனர். கும்பலாக நாங்கள் நிற்க எதில் ஏறப்போகிறோமென்று தெரியவில்லை. கிட்டத்தட்ட பஸ்ஸில் ஆட்கள் இறங்கும்போதே ஏறுவார்களே அது போல் நடக்குமோ என்று தோன்றியது. கும்பல் இன்னும் கொஞ்சம் நகர்ந்தது. ஒரு வழியாக விமானத்தில் ஏறிவிட்டோம்.
   உள்ளே சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருக் கூட்டமே விமானத்தில் இருந்தது. சிலருக்குப் பெட்டி வைக்க இடமில்லை. கோபமாக பணிப்பெண்களிடம் இடம் கேட்டார்கள். பணிப்பெண்கள் சற்று எரிச்சலாகி இடமில்லை என்று சொன்னார்கள். ஒரு வழியாகச் சென்னை வந்து சேர்ந்தேன்.
    வந்து இரு நாட்களில் புனே பயணக்கதையை ப்ளாக்கில் எழுதலாமென்று எண்ணம் எழுந்தது. ப்ளாக்கில் டைப் செய்ய ஆரம்பித்தேன். முதல் பகுதியை முடித்து 'இடுகையை வெளியிடு' பட்டனை அழுத்தினேன். முதல் பகுதி கீழே!
 http://venkatramvasi.blogspot.com/2011/06/1.html

(பயணங்கள் முடிவதில்லை!)

No comments:

Post a Comment