Saturday, April 30, 2011

சிறு கவிதைகள் . . . தொகுப்பு 5

குடியிருப்பு நாய்
ஒவ்வொரு குடியிருப்பிலும்
ஒரு நாய்.
யாரோ ஒரு சிலர்
உணவு வைத்திட்டாலும்
எல்லோருக்கும் நண்பன்.
பெரும்பாலும் தியானத்தில். . .
இரவில் வரும் போது
தியானம் கலைந்து
நிமிர்ந்து பார்க்கும்.
'நம்ம ஆள்' என்று தெரிந்ததும் . . .
மீண்டும் காலுக்குள்
தலை புதைத்து
தியானம் தொடரும்.
அந்த நேரத்தில் . . .
அதன் அடையாளம்
காணும் திறனில்
பிழை நேரக் கூடாதென்று
மனது பதறும்!
*****
குள்ள மனிதன்
உலகின் உயரம்
குறைந்த மனிதன் . . .
செய்தித்தாள் செய்தி.
மேலும் விவரம் தெரிய
இணையத்தில் தேடல்.
படங்கள். . . பேட்டிகள். . .
'நான் தனித்துவம் 
உள்ளவன் என்பது மகிழ்ச்சி!'
உடல் உயரம் இயற்கை.
மனதின் உயரம் நம்பிக்கை!.
நீ மனதளவில்
உலகில் உயர்ந்தவன்!.

*****
சிரித்த முகம்.
கேலியா கிண்டலா
அதே சிரிப்பு!.
வருத்தமில்லா வாழ்க்கை.
தொப்பையில்லா ...
ஊளைச்சதையில்லா ...
சீரான எடை.
ஆடம்பரமில்லாத இருப்பிடம்.
விருப்பு வெறுப்பில்லா...
நட்பு பகை பாகுபாடில்லா...
காதலில்லா... காமமில்லா...
கடமையே கண்ணாய்...
சோம்பலில்லா . . .
ஓய்வில்லா . . .
எத்தனை சிறப்புகள் உனக்கு
பரிசோதனைக்கூட எலும்புக்கூடே!

No comments:

Post a Comment