Saturday, April 23, 2011

சம்பவங்கள் - ஒரு கிணறும் நான்கு மனிதர்களும் . . .

கல்லூரிப் பணிக்காலத்தின் போது, வளைகுடாப் போரின் காரணத்தாலோ என்னவோ ஒரு வாரம் மின் தடை. கல்லூரியிலும் விடுப்பு விடப்பட்டிருந்தது.
விடுதியில் தங்கியிருந்த எங்களுக்குக் குளிக்க நீரில்லை. இல்லாத ஒன்றை மனம் எப்போதும் நாடும். குளித்தே ஆக வேண்டும் போல் இருந்தது. நானும் மூன்று மாணவர்களும்,விடுதியின் பின்புறம் சற்று தொலைவில் இருந்த கிணற்றில் குளிக்கக் கிளம்பினோம். மதிய நேரம். கரட்டில் நடந்து கிணற்றை அடைந்தோம்.
பாதி ஆழம் அளவு படிகள், படி முடியும் இடத்தில் தண்ணீர். வட்ட வடிவம் பொதுவாகப் பயமுறுத்தாது, நிலா, தோசை இப்படி. வட்டக் கிணறு அந்த வகையில்லை. அதிகமாகச் சினிமா,டிவி பார்ப்பவர்களுக்கு வட்டக்கிணறு பார்த்தவுடன் டொய்ங் ட்ரிங் என்று பயங்கரப் பின்னணி இசை கேட்க ஆரம்பிக்கும்.
     கிணற்றுப் படிக்கட்டுகள் ஒருமாதிரித் தெளிவில்லாமல் மணலில் செய்தது போலிருக்கும்.  நாம் படிகளில் கீழே இறங்கும் போது படிகள் நம்மோடு கீழெ இறங்கி விடுமோ என்று பயமாயிருக்கும். நாம் நடுங்கிய படி இறங்கும் போது மேலே திடீரென்று ஒரு கிராமத்துக் கிழவர் தோன்றி(!) தைரியமூட்டுவார்.அது பயத்தை அதிகப்படுத்தும்.  மூன்று பேர் குளியல் உடைக்கு மாறினோம்.ஒருவன்(ராகேஷ்) மாறவில்லை. ஏன் என்று கேட்டதற்கு தனக்கு நீச்சல் தெரியாதென்று சொன்னான். 'அப்புறம் எதுக்கு வந்த..?' என்று கேட்கவில்லை. அவனை அவன் விரும்பிய இடத்திற்கு அவனே கூட்டிச் செல்வது அவன் உரிமை.
   ஆளுக்கு முதலில் செ.மணி கிணற்றில் குதித்து,நீந்தி(?) நடுக்கிணற்றுக்குப் போய் விட்டான். செ.மணி கொஞ்சம் கனமான ஆள். நானும் இன்னொரு பையனும் கிணற்றில் இறங்கத் தயாரானோம். திடீரென்று செ.மணி 'சார்! சார்!' என்றபடி முங்குவது போல் பாசாங்கு செய்தான். 'இது மாதிரி எத்தன பேரப் பாத்திருக்கோம்.நீந்தி நடுக்கிணத்துக்குப் போனவன் எப்படி முங்குவான்' செ.மணியின் பாவலா வழக்கமான பாவலா நேரக் கட்டுப்பாட்டைத் தாண்டி நீள ஆரம்பித்தது. செ.மணி உண்மையிலேயே மூழ்குகிறானென்று புரிய ஆரம்பித்ததும் வெல வெலக்க ஆரம்பித்தது. நானும் இன்னொரு பையனும் கிணற்றில் குதித்தோம்.
     செ.மணியின் கையைப் பிடித்தேன்.அவன் தன் பலமான கையால் என் தலையை ஒரு அமுக்கு அமுக்கினான். மூழ்குபவர்கள் காப்பாற்றப் போகிறவர்களை அப்படி அமுக்குவார்கள் என்று என் அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன். என் தலை தண்ணீருக்கு அடியில் போய்க் கொண்டிருக்கும் போது... செய்தித் தாளில் செய்தி ஒன்று மனதில் ஓடியது. 'கிருஷ்ணன் கோவில் . . .கிணறு. ..உடன் சென்ற ஆசிரியர் பெயர் வெங்கட்ராம்வாசி(23)...'. மீடியா பாதிப்பு தாங்கலடா சாமி! இல்லை. எதுவும் நடக்காது. நடக்க விட மாட்டேன். தெம்போடு தலையை மேலே கொண்டு வந்து செ.மணியை கிண்ற்றின் ஒரத்திற்குத் தள்ளிப் பார்த்தேன். முடியவில்லை. கூட இருந்த பையனும் தள்ளிப் பார்த்தான். அவனாலும் முடியவில்லை. நாங்கள் காப்பாற்றுவதற்குள் செ.மணி அவனாகவே நீச்சல் பழகி விடுவான் போலிருந்தது. என்ன நடக்கும் என்று தெரியாத நேரத்தில்...திடீரென்று நீச்சல் தெரியாதென்று படியில் உட்கார்ந்திருந்த ராகேஷ் மின்னல் வேகத்தில் சட்டை,கைலியைக் கழற்றி விட்டுக் கிணற்றில் பாய்ந்தான் (சொர்க்கடித்தான்). சில நொடிகளுக்குள் செ.மணியைக் கிண்ற்றோரம் தள்ளி விட்டபின் மீண்டும் படியில் போய் உட்கார்ந்து கொண்டான். 'என்னடா நடக்குது இங்க?' செ.மணிக்கு என்னிடமிருந்து பயம் விலகிய கோபத்தில் திட்டுக்கள் கிடைத்தது. 'நீ என்ன பெரிய இவன் மாதிரி குதிச்சு நடுவில போய் சார் சார்ங்கிற'. அடுத்து ராகேஷ் பக்கம் திரும்பினேன். அதை விடக் கோபமாய் 'நீ என்ன நீச்சல் தெரியாதுன்னு சொல்லிட்டு எம்ஜிஆர் மாதிரி டைவ் பண்ற'. அவர்களின் பதில்கள் கீழே.


செ.மணி: 'இதுக்கு முன்னால ஆத்தில நீந்தியிருக்கேன். அந்த தைரியத்தில உள்ள குதிச்சேன்.' (ஆற்றில் நான் கூட கீழே நடந்த படி மேலே நீந்தியிருக்கிறேன். ‘பொன் ஒன்று கண்டேன், பெண் அங்கு இல்லை’ பாட்டில் சிவாஜியும்,பாலாஜியும் நீந்துவது போல நடித்திருப்பார்களே! 2 ஆஸ்கார் அதுக்கு அப்பவே வந்திருக்கனும்)
ராகேஷ்: 'நீச்சல் தெரியும். நீந்த போரடிச்சுதுன்னு தெரியாதுன்னு பொய் சொன்னேன்' (Bay Watch பார்க்காத காலத்திலயே ரெஸ்க்யூ எல்லாம் சொந்தமா பழகியிருந்திருக்கான்)
  நன்றி சொல்ல வேண்டிய ராகேஷுடம் கோபப்பட்டது தவறென்று இப்போது தெரிகிறது. 'நன்றி ராகேஷ்!'

   போன வாரம் அமெரிக்காவிலிருந்து அழைப்பு வந்தது. பேசியது செ.மணி. பெயரை வைத்து யார் என்று தெரிந்து கொண்டபின் நான் சொன்னது ' இல்ல... .இந்தப் பேர்ல எனக்குத் தெரிஞ்ச ஒரு நீச்சல் வீரர் இருக்காரு'. இருவரும் பலமாகச் சிரித்தோம். செ.மணி இப்போது அவருக்கு நீச்சல் தெரியுமென்றும் இரண்டு வருடங்களுக்கு முன் அவரே ஒருவரைக் காப்பாற்றியதாகவும் சொன்னார்.

6 comments:

 1. Dear Vasi,
  Good narration.
  vbr
  A.Chandrasekar

  ReplyDelete
 2. Good one! We had similar experience with a friend of mine R. Sundar, again in the same Kinaru :)

  ReplyDelete
 3. Thanks Vinu! I hope you experienced almost at the same period.

  ReplyDelete
 4. AnonymousMay 02, 2011

  Nadantha sampavangalai andru se.mani sonna podhu "nallavellai! Enimel edhupol kulikka poghadhe" endren. Tharpothu adhe sampavthai neenkal kureeirukum ennai srikavum sindikavum vaithathu. Se.mani brother Se.Kumar.

  ReplyDelete
 5. உங்கள் கருத்துக்கு நன்றி!செ.மணியின் சகோதரரே!

  ReplyDelete