Wednesday, April 20, 2011

சம்பவங்கள் - சர்வர் வேலைக்குப் புதுசு/நானா பேசுறேன்/ரீ சைக்ளிங்

சர்வர் வேலைக்குப் புதுசு
  காலை நேரம் அந்த ஹோட்டலில் கூட்டமேயில்லை. எல்லா டேபிளும் காலி.நான் போய் ஒரு டேபிளில் உட்கார்ந்தவுடன் ஒரு பையன் என்னை நோக்கி மெல்ல வந்தான். அவன் என்னை வந்தடையுமுன் லஞ்ச் நேரமே வந்துவிடும் போலிருந்தது. அவன் பார்வையும் தயக்கமும் அவன் சர்வர் வேலைக்குப் புதுசு என்று காட்டின. (நமக்குன்னு வந்து சேர்ராங்களேப்பா) அன்று மாட்டிக் கொண்டு முழிப்பது என் முறை என்று தெரிந்தது.
   ஒரு வழியாக புது சர்வர் என்னிடம் வந்தான். நான் 'பொங்கல் வடை' என்றேன்.  அவன் பயந்தபடி, '......சாப்பிடவா?' என்றான். (என்னைப் பாத்தா இதை வாங்கிக் கொண்டு போய் ப்ளாக்கில விக்கிற மாதிரி தெரியுதா? இதை இங்க சாப்பிடவே ஆளக் காணாம்.)  நான் 'ஆமாம்' என்பது போல் தலையை வைத்து பூம்பூம் மாட்டை இமிடேட் செய்தேன். பொங்கல் வடையை சாப்பிட்டு முடித்தவுடன் வேறெதுவும் சாப்பிட மூடில்லை. புது சர்வர் என்னிடம் மீண்டும் வந்தான். இன்னும் டேபிள்கள் காலி தான். என் டேபிளில் என்னைத் தவிர யாருமில்லை. புது சர்வரிடம் நான் 'காபி' என்றேன்.அடுத்து அவன் கேட்ட கேள்வியில் எழுந்து ஓடி விடலாம் போலிருந்தது. சர்வர் பையன் 'ஒண்ணா?' என்று கேட்டான்.. அந்த சமயம் நான் கொஞ்சம் குண்டாயிருந்தேன்.ஆனாலும் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று காபி சாப்பிடும் பழக்கம் இருந்ததில்லை.சாதாரண ஹோட்டலில் வேளைக்கு எடுப்பவர்களுக்கு பயிற்சி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, குறைந்த பட்சம் ஹோட்டல்களில் சாப்பிட்ட முன் அனுபவமாவது இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.ஹோட்டலில் யாராவது சர்வர் பயந்தபடி நடந்து வந்தால் எழுந்து வெளியே ஓடி வந்து விடுவது நல்லது.

நானா பேசுறேன்
அவர் அந்த அலுவலகத்தில் புதிதாகச் சேர்ந்திருந்தார். சென்னையைச் சேர்ந்த அவர் பெயர் நானா. பூர்வீகம் வடநாடு. சேர்ந்த புதிதில் ஒரு பிரிவைச் சேர்ந்தவரை இன்டர்காமில் அழைத்திருக்கிறார். மறுமுனையில் இருந்தவர் கொஞ்சம் சீரியசான ஆள். அவர்களின் உரையாடல் இப்படிப் போயிற்று.
'ஹலோ! நான் நானா பேசுறேன்'
'நீங்க நீங்களா பேசுறதுன்னா பேசிக்கோங்க' (இணைப்பு துண்டிக்கப் பட்டது).
பிறகு இவர் மீண்டும் அழைத்து நானா என்பது தன் பெயர் என்று விளக்கியிருக்கிறார்.


ரீ சைக்ளிங் (வருடம் : 90களின் இறுதி)
அலுவலக வண்டியில் காலை நேரம். புதிதாக வண்டியில் பார்த்திருந்த ஒருவர் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து,'ஒரு ஜோக் சொல்லவா?' என்றார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 'அறிமுகம் கூட இல்லாமல் ஜோக் சொல்கிறாரே, நம்ம கோஷ்டி' என்று நினைத்துக் கொண்டேன். அவர் சொன்னது,'சைபர் ஸ்பேஸில ஒருத்தரக் கொல்றதுக்கு என்ன பேர்?'. 'தெரியல சொல்லுங்க!'. 'சைபர் ஸ்பேஸுக்கு சை, கொல்றதுக்கு கில்லிங் அதாவது சைக்கிளிங்!' இது ஜோக் என்ற வகையிலோ, கடி என்ற வகையிலோ சேர்த்தியில்லாமல் என்னை எரிச்சலூட்டி... சிறிது காலம் கடி என்ற ஆயுதத்தைத் துறந்திருந்த ஒரு சிவிலியன் அசோகரைப் போருக்கழைப்பது மாதிரி இருந்தது.என்னைக் கடித்த திருப்தியில் அந்தப் பக்கம் திரும்பி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் அவர். தோளைத் தொட்டுக் கூப்பிட்டேன். 'எக்ஸ்க்யூஸ் மி'. திரும்பினார்.
'சைபர் ஸ்பேஸ்ல ரெண்டு பேரைக் கொல்றதுக்கு என்ன பேர்?'
 'தெரியல'
'பை சைக்கிளிங்'. திரும்பிக் கொண்டார்.
'எக்ஸ்க்யூஸ் மி'. திரும்பினார்.
'சைபர் ஸ்பேஸ்ல பைக்ல போறவரைக் கொல்றதுக்கு என்ன பேர்?'
'தெரியல'
' மோட்டார் சைக்கிளிங்'. திரும்பிக் கொண்டார்.
'எக்ஸ்க்யூஸ் மி'. திரும்பினார்.
 'சைபர் ஸ்பேஸ்ல ஏற்கனவே கொன்னவரத் திரும்பக் கொல்றதுக்கு என்ன பேர்?' (இந்தக் கேள்வி எனக்கே தாங்கவில்லை.கடிப் போரில் இரக்கத்திற்கு இடமில்லை)
'ரீ சைக்கிளிங்கா?' (அவரே கேட்டார்)
'ஆமாம்'
'சார், போதும் சார்' என்று கும்பிட்டபடி அவர் முதலில் இருந்த சீட்டிற்கே சென்று விட்டார். இந்தக் கதையைக் கேட்டு, அவரை அவர் பிரிவில் 'உனக்கு ஜோக் சொல்ல வேறு ஆள் கிடைக்கலயா?' என்று கேட்டதோடு, ஒரு வாரம் 'யூ காட் ரீ சைக்கிள்ட் பை வாசி' என்று ஓட்டினார்கள் என்று கேள்விப்பட்டேன்.

3 comments: