Friday, June 10, 2011

புனே பயணம் - 2

டெல்லியா என்று டென்ஷன் ஆரம்பிக்க ஆரம்பிக்குமுன் (சும்மா ஒரு நயத்துக்காக 'எனக்கே எனக்கா?' மாதிரி!), அந்த விமானப் பணிப்பெண் தனது தவறைச் சரி செய்து புனே போக ஒரு மணி நேரம் பதினைந்து நிமிடங்கள் ஆகுமென்றாள். 'அதான பாத்தேன்!ஏறும் போது புனே ப்ளேனு, ஒக்காரும்போது டெல்லி ப்ளேனாகுமா?' அந்த விமானம் புனே வழியாக டெல்லி செல்லும் என்று பிறகு தெரிய வந்தது.
    எனக்குப் பாதை அருகில் இருக்கை. எனக்கு அடுத்ததுக்கு அடுத்த இருக்கைக்கு அடுத்து எமர்ஜென்சி எக்சிட். அதன் அருகில் உட்கார்ந்திருந்தவரிடம் விமானப் பணியாளர் ஸ்பெஷலாக ஏதோ பாதுகாப்புத் தகவல்கள் சொல்லி அவரை மட்டுமல்ல என்னையும் நெளியவைத்தார். அவரிடம் நான் எக்காரணத்தைக் கொண்டும் கடி ஜோக் சொல்லக் கூடாதென்று தோன்றியது. கல்லூரி காலத்தில் கோயம்புத்தூர் டு பழனி செல்லும் பஸ்ஸில் சக பயணிப்பையன் 2 கடி ஜோக் என்னிடம் சொல்லி, நான் 20 சொன்னவுடன் 'நிறுத்தலன்னா குதிச்சுறுவேன்' என்ற நிலைக்குப் போனான். 'நா காக்க' என்றிருக்கிறார் வள்ளுவர்.
    பக்கத்து ஆசாமி அடிக்கடிப்பயணி  போல,எதுக்காகப் பத்து நிமிடங்கள் தாமதம் என்று பணியாளரைக் கோபமாகக் கேட்டார். அதன் பின் சில நிமிடங்களில் கொள்ளைப்புறச் சமாசாரத்தை ஆங்கிலத்தில் சலிப்போடு சொன்னார். வந்தால் போக வேண்டியது தானே என்று நினைத்துக் கொண்டேன்.
     பாதைக்கு அடுத்து என் பக்கவாட்டில் இருந்தவர்,'லேட்டாப் போனாலும் சீக்கிரம் போனாலும் எனக்கொரு கவலையில்லே" என்று கனவில் பாடியபடி குறட்டைவிட்டுக் கொண்டிருந்தார்.
முன் இருக்கையின் பின்பகுதியில் ஒரு மேகஜினும் தினகரனும் இருந்தன.
இந்த நேரத்திலேயே செய்தித்தாள் இருக்கிறதே ஒரு வேளை நேற்றையதாக இருக்குமோ என்று சந்தேகம் வந்தது. எடுத்துப் பார்த்தால் அன்றைய தேதி, கிழமை தான் போட்டிருந்தது. நாம் தினமும் காலையில் எழுந்து பயன்படுத்தும் பல விதமான சமாச்சாரங்களுக்குப்பின் பலரது இரவுத் தூக்கங்கள் தொலைந்த உழைப்புகள் இருக்கின்றன.
      விமானம் கிளம்பி மேலும்பியது. உயரம் தொட்டவுடன் வலது புற ஜன்னல் வழியாக சூரியன் அன்றைய நமது பகல் வேளைக்கான வேலையைத் தொடங்க மேலெலும்பிக் கொண்டிருந்தது.
  செய்தித்தாளைப் புரட்டினேன். இரண்டு செய்திகள் குறிப்பிடும்படி இருந்தன. ஒன்று அரபு நாடு ஒன்றில் பெண்கள் கார் ஓட்ட அனுமதியில்லையாம். அதை எதிர்த்து ஒரு பெண் போராடுகிறாளாம்.

இன்னொன்று டைடல் பார்க் எதிரில் மீடியனை நமது ஐ.டி நண்பர்கள் உயிரைப் பணயம் வைத்து எகிறிக் குதித்துக் கடக்கிறார்கள்,  என்று போட்டிருந்தார்கள். புகைப்படம் வேறு இருந்தது.ஒரே நாளில் புகழடைவது இது தானா?ஓரிரு முறை நானும் தவிரிக்க முடியாத காரணத்தால் உயரமான மீடியனில் ஏறிச் சாலையைக் கடந்திருக்கிறேன். மீடியனில் நிற்கும் போது யாராவது இது போலப்புகைப்படம் எடுத்துவிடுவார்களோ என்ற பீதியோடு, ஒரு ட்ரைவ் இன் சபா மேடையில் நிற்பது போலிருக்கும். ஒரு வித்தியாசம் இந்த ட்ரைவ் இன் சபாவில் முன்னும் பின்னும் வண்டிகள் நின்றிருக்காது, ஓடிக்கொண்டிருக்கும். ஒரு நாள் லேட்டாகப் போவதைத் தவிர்க்க மொத்தமாக 'லேட்' ஆவது சரியில்லை என்று தோன்றியதால் 'என் வழி தனி வழி' என்று  நடையிலேயே நடைமேடை போய் ஒரு யு டர்ன் போட்டு  வர ஆரம்பித்தேன். 
      வியூசானிக் 24இன்ச் LED மானிடர்,20,000,000:1 டைனமிக் கான்ட்ராஸ்ட் 14 ஆயிரம் என்றது ஒரு விளம்பரம். நான் விசாரிச்சப்ப பெரிய கடை ஒண்ணுல, டி.வில LED இருக்குற மாதிரி மானிட்டர்ல இன்னும் வரலன்னு சேல்ஸ் மேன் சொன்னார். நானும் வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்னு நெனச்சேன்.
     மேகஜினில் சில நல்ல விஷயங்கள், புகைப்படங்கள் இருந்தன. ஒரு குழந்தை முகத்தில் ஃபேஸ் பெயிண்டிங் செய்யும் படம் மனதைக் கவர்ந்தது. என் மொபைல் வழியாக இப்போது இடது பக்கத்தில்... உங்கள் கண்கள் பக்கத்தில்...
Alternate Medicine பற்றிய கட்டுரை ஒன்றில் ரெய்கி,ப்ராணிக் ஹீலிங் போன்றவற்றைச் சொல்லியிருந்தார்கள். ஸ்ட்ரெஸ் குறைப்பதற்கு தியானம் செய்யச் சொன்னார்கள்.ஒரு முறை நண்பர் ஒருவர் தியானம் செய்யச் சிறந்த நேரம் எது என்றார். நான் 'மத்தியான நேரம்' என்றேன்.
    புனேயில் இறங்கியதும் பரபரப்பாக நான் உடன் பயணித்த நண்பர் ஒருவருடன் என் தடக் தடக் பெட்டியை இழுத்துக் கொண்டு வாசலை நோக்கி நகர்ந்தேன். கார் காத்திருப்பதாக நண்பர் சொல்லி அறிந்தேன். புனே விமான நிலையம் சின்னது என்பதால் நாலு எட்டில் வாசல் வந்துவிட்டது.  
நான் வாசலை நோக்கிப் போவதை அறியாமல் என் செக் இன் பேக் கைப்புள்ள மாதிரி ப்ளேனிலிருந்து கன்வேயர் பெல்ட்டுக்கு வந்து கொண்டிருந்தது.

4 comments:

  1. Kalakkal, Ji! Keep it going... Specially I loved the below extracts... : "நாம் தினமும் காலையில் எழுந்து பயன்படுத்தும் பல விதமான சமாச்சாரங்களுக்குப்பின் பலரது இரவுத் தூக்கங்கள் தொலைந்த உழைப்புகள் இருக்கின்றன"..... "ஒரு முறை நண்பர் ஒருவர் தியானம் செய்யச் சிறந்த நேரம் எது என்றார். நான் மத்'தியான' நேரம் என்றேன்"...... "ஒரு நாள் லேட்டாகப் போவதைத் தவிர்க்க மொத்தமாக 'லேட்' ஆவது சரியில்லை (while crossing the median)" Great reading! Looking forward to read the next :)

    ReplyDelete
  2. Thanks Mahendiran! Your few words have the energy to bring out many words from me

    ReplyDelete
  3. Vasi, Your write ups are really enjoyable. As Mr.Mahendiran said I too enjoyed those points as the flow came. Very eager to read more. Especially the " My Aquarium in you site is Good time passing one. It really reduced my stress last time. Nice of you.
    anbudan,
    M.R.Dinesh Singh

    ReplyDelete
  4. Thanks Dinesh for your encouraging words and the feedback on my aquarium. These kind of inputs help in maintaining the spirit to do more.

    ReplyDelete