Sunday, January 1, 2012

சிறு கவிதைகள் - என் இனிய 2011

என் இனிய 2011

கண்ணுக்குத் தெரியாமல்
வந்தாய்,
மெல்ல வளர்ந்தாய்,
கண்ணிமைக்கும்
நேரத்தில் விரைந்தாய்.

உன் காலத்தில்
உன் மதிப்பு
புரிந்தோர் சிலர்.
மனிதரின் மதிப்புக்கும்
அதே நிலை.

காலத்திற்கும்
காலம் உள்ளதா?.
உன் காலம்
கடந்து போனது.

பள்ளிப் பருவத்தில்
கூடப் படித்தவரைத்
பல் போன வயதில்
காண நேரலாம்.
மீண்டும் உன்னைக்
காண முடியாது.




தினம் நான்கென்று
படித்திருந்தாலும்
உன் காலத்தில்
திருக்குறளைக்
கரைத்தே குடித்திருக்கலாம்.

நீ வந்ததைக்
கொண்டாடினோம்.
நீ போனதற்கு
வருந்தவில்லை.

வந்த போது
பிறந்த குழந்தைகள்
போகும் போது
நடக்கத் தொடங்கியிருக்கும்.

வந்த போது
நடை தொடங்கியவர்கள்
தொடர்ந்து நடந்திருந்தால்
போகும் போது
எடை குறைந்திருப்பார்கள்.

வந்த போது
புகையை நிறுத்தியவர்கள்
போகும் போது
அதை விடுவதை விட்டிருப்பார்கள்.

வந்த போது
சேமிக்கத் தொடங்கியவர்கள்
போகும் போது
செலவு குறைத்திருப்பார்கள்.

வந்த போது
நம்பிக்கை கொண்டவர்கள்
போதும் போது
வெற்றி கொண்டிருப்பார்கள்.

உன் காலத்து
உயர்வான செயல்களை
வருங்காலத்தில்
தொடர்வோம்.
உன் காலத்து
பயனற்ற செயல்களை
வருங்காலத்தில்
துறப்போம்.





No comments:

Post a Comment