Wednesday, March 7, 2012

விஞ்ஞானக் கதை - சோன்பப்டி வண்டி


பல வருடங்களுக்குப் பின்பு, இரவு மொட்டை மாடிக்கு அர்த்த ராத்திரியில் போனது தவறு என்று இன்று வருந்துகிறேன். 2010ல் ஒரு இரவு அது நடந்தது. வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். எனக்கு மட்டும் வருவேனா என்றது தூக்கம். காத்து வாங்கியபடி (காசு கொடுத்து அல்ல), நட்சத்திரங்களை ரசிக்க மொட்டை மாடி சென்றேன். இரவின் அமைதியும்,நிறமும் எனக்குப் பிடிக்கும். அப்போது சட்டென்று மாறுது வானிலை என்ற தாமரையின் வரிகளைப் போல திடீரென்று குளிரியது. வானத்தில் ஒரு பெரிய சோன்பப்டி வண்டி மாதிரி ‘சொய்ங்க்’ என்று கீழிறங்கிக் கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் எனக்குச் சற்று தள்ளி பச்சக்கென்று மாடியில் உட்கார்ந்தது.

பறக்கும் தட்டுகள் பற்றிப் படித்திருக்கிறேன். அது மாதிரிக் கண்ணெதிரே வருவது ஆச்சரியம் தான். நான் தூக்கத்திலில்லை, அதனால் நான் காண்பது கனவும் இல்லை. வான வண்டியிலிருந்து ஒரு ஏலியன் இறங்கியிருந்தால், நான் சடாரென்று படியில் இறங்கி வீட்டிற்குப் போய், குப்புறப்படுத்துத் தூங்கிக் காலையில் எழுந்து நேற்று ஒரு பயங்கரமான கனவு கண்டேனென்று சாதாரணமாகச் சொல்லியிருப்பேன்.

வண்டியிலிருந்து இறங்கியது ஒரு மனிதன். மாமனிதன். இரண்டு அர்னால்ட் போலிருந்தான். அவன் இறங்கியதும் வண்டி ‘விச்க்’ என மறையவும் சரியாக இருந்தது. யூஸ் அண்ட் த்ரோ வண்டியா? மாமனிதன் என் பக்கம் திரும்பி, என்னை நோக்கி வந்தான். என் கையைப் பற்றிக் குலுக்கி விட்டு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.    

அவன் சொன்னதிலிருந்து நான் தெரிந்து கொண்டது. அவன் எதிர்காலத்திலிருந்து வருகிறானாம். அவர்கள் அறிவியலில் முன்னேறியவர்கள் என்றும், அவர்களில் சாதாரணமானவர்களே நம்ம ஐன்ஸ்டீன் போலிருப்பார்களாம். அவர்கள் இளைஞர்களுக்குப் பொழுது போக்கு ஓட்டப்பந்தயமென்றும், அதில் தோற்றவர்களைக் கால இயந்திரத்தில் ஏற்றிப் பின்னோக்கி அனுப்பி விடுவது வழக்கமென்றான்.

“நீ…நீங்க அப்ப எப்படித் திரும்பப் போவீங்க?” அக்கறையும் வருத்தமுமாகக் கேட்டேன். “நாங்க எந்தக் காலத்தில் வந்திறங்குகிறோமோ, அங்க உள்ள ஒருவரைத் தேர்ந்தெடுத்து கை குலுக்கி விட்டால், இருபது நிமிடங்களில் நான் மீண்டும் என் காலத்திற்குப் போய் விடுவேன்.”“ரொம்ப சந்தோசம்!”. “அடுத்து நான் சொல்வது உனக்குப் பிடிக்குமா என்று தெரியவில்லை. நான் யார் கையைக் குலுக்கினேனோ அந்த மனிதன், நான் முன்னே போகும் கால அளவு அவன் பின்னோக்கிப் போய் விடுவான். நான் உன் கையைத் தான் குலுக்கினேன்! காலம் அனுமதித்தால் மீண்டும் சந்திப்போம்!”

அவன் சொல்லி முடித்த மறு விநாடி அவனைச் சோன்பப்டி வண்டி ஏற்றிச் சென்று விட்டது. நான் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் என்னையும் ஒரு சோன்பப்டி வண்டி ஏற்றிச் சென்றது.
என் சுய உணர்வு திரும்பும் போது, மீண்டும் சோன்பப்டி வண்டியிலிருந்து ஒரு பூங்காவனத்தில் இறக்கி விடப்பட்டேன். சற்று தள்ளி நடந்து கொண்டிருந்த கட்டட வேலையைப் பார்த்த போது அது முடியும் தருவாயிலிருந்த தஞ்சாவூர் கோயிலென்று தெரிந்தது. வரலாறு அறிவு இந்த அளவிற்குத் தான் உதவியது. நமது காலத்து சோழா ஷெராட்டன், சோழாப்பூரி(லவை ழவாக மாற்ற வேண்டிய கட்டாயம்),சோழமண்டல் ஓவிய கிராமம் போன்ற பெருமைகளைச் சொல்லி, என்னைத் திருப்பி அனுப்ப சோழ மன்னரிடம் தான் முறையிட வேண்டும்.

ஓலைச்சுவடியில் நான் என் கதையை எழுதியது, யாராவது இதைப் படித்து ப்ளாக்கில் போட்டு மக்களை விழிப்புணர்வாக்குவார்கள் என்ற சமூகச் சிந்தனையோடு தான்.

No comments:

Post a Comment